'தமிழக அரசியலில், இனி தி.மு.க - பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி!' என்று அண்மையில் அறிவித்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தஞ்சாவூரில் அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டிருக்கிறார்!
'மேகதாது அணை'யைக் கட்ட ஆர்வம் காட்டிவரும் கர்நாடக பா.ஜ.க அரசை எதிர்த்து, தமிழக பா.ஜ.க சார்பில், தஞ்சாவூரில் நேற்றைய தினம் (05-08-2021) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, கர்நாடக பா.ஜ.க அரசை விமர்சிக்காமல், தமிழக அரசியல் கட்சிகளை, குறிப்பாகத் தி.மு.க-வை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.மாட்டுவண்டியில் ஊர்வலமாக அண்ணாமலை
'பா.ஜ.க-வினர் நடத்திய இந்த உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாடகம்' என்றொரு பேச்சு ஏற்கெனவே அரசியல் அரங்கில் பேசப்பட்டுவந்த நிலையில், பிரச்னைக்கு சம்பந்தமே இல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளை அண்ணாமலை விமர்சித்திருப்பது, போராட்ட மேடையில் இருந்தவர்களையே புருவம் நெளிய வைத்தது. 'இது கர்நாடகா அரசுக்கு எதிரான போராட்டம் என்ற உண்மையை இவர் தெரிந்துதான் பேசுகிறாரா, இல்லை தமிழக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக தனி ரூட் போடுகிறாரா' என்ற குழப்பத்தோடு பா.ஜ.க-வினர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
ஏனெனில், கர்நாடகா அரசு மேகதாது அணையைக் கட்டக்கூடாது என தமிழகத்திலுள்ள தி.மு.க தலைமையிலான அரசு முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட ஏனைய கட்சிகளும்கூட கர்நாடக அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று குரல்கொடுத்து வருகிறது. அதேசமயம், கர்நாடகத்திலோ, மேகதாது அணையைக் கட்டுவதில் ஆர்வம் கொண்ட கட்சி காங்கிரஸா, பா.ஜ.க-வா என்ற அரசியல் போட்டி நடைபெற்று வருகிறது.
எனவே, கர்நாடக பா.ஜ.க அரசில், புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை, மேகதாது அணையைக் கட்டுவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற கையோடு செய்தியாளர்களைச் சந்தித்தவர், ''மேகதாது அணைக்கு எதிராக யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணையக் கட்டியே தீருவோம். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தாலும் சரி; உண்ணும் விரதம் இருந்தாலும் சரி. அதையெல்லாம் நாங்கள் ஏன் கண்டுகொள்ள வேண்டும்...'' என்று காட்டமாகக் கேட்டிருந்தார்.பசவராஜ் பொம்மை - எடியூரப்பா
இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க அரசின் அடாவடி பேச்சுகளுக்குப் பதிலடி தரும்வகையில், தமிழக பா.ஜ.க-வின் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் அரங்கில் ஏற்பட்டது. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் புஸ்ஸாக்கும் வகையில், அமைந்துவிட்டது அண்ணாமலையின் பேச்சு. அணையைக் கட்டியே தீருவோம் என முரட்டுப் பிடிவாதம் பிடித்துவரும் கர்நாடக பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டியவர், 'வீட்டில் புலி; வெளியே எலி' என்ற கதையாக, தி.மு.க உடனான உள்ளூர் அரசியலையே வீராவேசமாக கிண்டி கிழங்கெடுத்திருப்பது சொந்தக் கட்சியினருக்கே நமட்டுச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.
தஞ்சாவூரில், உண்னாவிரத மேடையேறி மைக் பிடித்த அண்ணாமலை,
''சாராய அமைச்சரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, விவசாயத்துறை அமைச்சரை தூரமாக வைத்திருக்கிறது தி.மு.க அரசு. டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதற்காக மாதம்தோறும் மீட்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் நலனுக்காக இதுவரை ஒரு மீட்டிங்கூட போடவில்லை. மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்கான கட்சி பா.ஜ.க. ஆனால், தங்கள் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்கான கட்சி தி.மு.க.'' என்று ஆரம்பத்திலேயே தி.மு.க-வை ஒரு பிடி பிடித்தவர் அப்படியே காங்கிரஸ் பக்கம் வந்தார்.
''தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'தமிழக பா.ஜ.க-வினருக்கு வயிற்றில் ஏதோ பிரச்னை. அதனால் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்' என்கிறார். இதைவிடக் கோழைத்தனமாக, கேவலமாக ஓர் அரசியல் தலைவர் பேசுகிறார் என்றால், இந்த அரசியலைவிட்டு அவர் போகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
மூன்று வருடங்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரே இல்லை. சைக்கிள் ட்யூபில் பஞ்சர் ஒட்டுவதுபோல், நான்கைந்து பேரைத் தலைவராக வைத்து பஞ்சர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத் தலைவராக இருப்பவர் நம்மைப் பார்த்துப் பேசிய வார்த்தைக்காகவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வீட்டுக்குப் போய் இதுநாள்வரை என்ன செய்துகொண்டிருந்தாரோ அதைச் செய்யவேண்டும்'' என்று போட்டுத்தாக்கிவிட்டு, அப்படியே மக்கள் நீதி மய்யம் நோக்கை வண்டியைத் திருப்பினார்.கமல்ஹாசன் - கே.எஸ்.அழகிரி
''நடிப்பின் உச்சக்கட்டம் அரசியல் என்று நம்பி, அரசியலுக்குள் வந்துவிட்டார் கமல்ஹாசன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் அவர் போட்டியிட்டபோது, ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்துதான் தேர்தல் பிரசாரங்களை செய்துவந்தார். பக்கத்து தொகுதிக்குப் போவதென்றால்கூட, ஹெலிகாப்டரில்தான் பயணம் செய்தார். ஆக தேர்தல் பிரசாரத்தையே சினிமாப்பட ஷூட்டிங் மாதிரிதான் செய்தார்.
அவரது கட்சியின் பெயரில் மட்டும்தான் 'மய்யம்' இருக்கிறது. ஆனால், அவரது பேச்சு எதிலுமே மய்யம் இல்லை. இவர், நம்மைப்பார்த்து தலையாட்டிப் பொம்மைகள் என்கிறார். இதனால்தான், அவரை அரசியலைவிட்டு மக்களே அனுப்பிவிட்டார்கள்'' என்று குட்டு வைத்தவர், மறுபடியும் யூடர்ன் அடித்து தயாநிதி மாறன் பக்கமே வந்து நின்றார்.
Also Read: மதுசூதனன் மறைவு: அதிமுக அவைத்தலைவர் ஆகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
''கர்நாடகாவில், கலாநிதிமாறனின் உதயா சேனல்தான் பணம் கொழிக்கும் சேனலாக இருந்துவருகிறது. இவரது தம்பிதான் தயாநிதி மாறன். ஆக, தங்கள் குடும்பத்துக்கு பணம் வந்தால் போதும் என்று மனசாட்சியே இல்லாமல் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க பற்றி தயாநிதிமாறன் இனியொருமுறை கொச்சைப்படுத்திப் பேசினால், அவர்களைப்பற்றிய எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும்.'' என்று தாளித்து முடித்தவர் மறுபடியும் காவிரி பிரச்னை குறித்த வரலாற்றில் தி.மு.க செய்த தவறுகள் எனப் பட்டியலிட்டு வாசித்துமுடித்தவர், இறுதியில் 'போனால் போகிறது' என்று கதையாக கர்நாடகா அரசின் அணை கட்டும் விஷயத்துக்கு வந்து சேர்ந்தார்.காவிரி ஆறு
''கர்நாடக பா.ஜ.க அரசை மட்டுமல்ல... அணை கட்ட ஆதரவு தெரிவிக்கும் அங்குள்ள எதிர்க்கட்சிகளையும் நாங்கள் எதிர்ப்போம். தி.மு.க கார்ப்பரேட்டுகளின் கட்சியாக இருப்பதால், மத்திய அரசின் விவசாய சட்டத்தை எதிர்க்கிறார்கள். தி.மு.க-வினரைப்போல் பிரியாணிக்கோ அல்லது டி-ஷர்ட்டுக்காகவோ எங்கள் தொண்டர்கள் இங்கே வரவில்லை'' என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தவர், திடீரென ''இதுநாள்வரையிலான மேம்போக்கான அரசியலாக இல்லாமல், எதிர்க்கட்சியினரின் பிஸினஸ் வரையிலாக அடிப்படையிலேயே நாங்கள் கை வைப்போம்!'' என்று நேரடியாக மிரட்டியவர் நிறைவாக 'தி.மு.க-வின் அதிகார மையங்களைக் குறிப்பிட்டு, 'தி.மு.க-வில் மூன்று முதலமைச்சர்கள் செயல்படுவதாக' பஞ்ச் வைத்து பேச்சை முடித்துக்கொண்டார்.
Also Read: மும்பை: புறநகர் ரயில் விவகாரம்; சிவசேனா அரசு சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாக பாஜக குற்றச்சாட்டு!
கர்நாடக பா.ஜ.க அரசுக்கு எதிராக முழங்கவேண்டிய போராட்டத்தில், முழுக்க முழுக்க தி.மு.க-வை குறிவைத்து அண்ணாமலை திட்டித் தீர்த்திருப்பது பா.ஜ.க-வினரையே முணுமுணுக்க வைத்துவிட்டது. அதேநேரம், 'தமிழகத்தில் இனி தி.மு.க - பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி' என்று தான் ஏற்கெனவே அறிவித்திருந்த அரசியலை கையிலெடுக்கத் தயாராகிவிட்டார் அண்ணாமலை என்றே தெரிகிறது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் எம்.என்.ராஜாவிடம் பேசியபோது, ''காவிரி பிரச்னையில், கடந்தகாலத்தில் தி.மு.க அரசு செய்யத் தவறிய விஷயங்களைத்தான் தமிழக பா.ஜ.க தலைவர் பட்டியலிட்டுள்ளார். இந்தத் துரோகங்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.எம்.என்.ராஜா
தஞ்சையில், தமிழக பா.ஜ.க நடத்தியிருக்கிற இந்த உண்ணாவிரத போராட்டம் என்பது ஏதோ விளையாட்டுக்காக நடத்தப்பட்டது அல்ல... நாங்கள் நாடகம் நடத்தவும் இல்லை. தமிழக விவசாயிகள் மீதான உண்மையான அக்கறையோடு உணர்வுபூர்வமாக இந்தப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... கர்நாடக அரசால், மேகதாது அணையைக் கட்டவே முடியாது. சட்டமும் அதற்கு இடம் கொடுக்காது!'' என்று அடித்துச் சொல்கிறார்.
http://dlvr.it/S5BffK