நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பிரதமர் முதல் சாமானிய மனிதர்கள் வரை அனைத்து தரப்பினரும் இன்று தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் கேரள மாநில பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேசிய கொடியின் பச்சை நிறம் மேல்பகுதியில் வரும்படியும், காவி நிறம் கீழ் பகுதியில் இருக்கும்படியும் தவறாக தேசிய கொடியை ஏற்றினார் கே.சுரேந்திரன். கொடி சிறிது தூரம் சென்ற சமயத்தில் அங்கிருந்த நிர்வாகிகள் இதை கவனித்துவிட்டனர்.
பின்னர் உடனடியாக கொடி கீழே இறக்கப்பட்டு சரியாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கயிற்றை மாற்றி இழுத்ததால் இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சி.பி.எம் மாநில அலுவலகமான ஏ.கே.ஜி செண்டரில் தேசியக்கொடிக்கு அருகே சி பி.எம் கொடி
இது ஒருபுறம் இருக்க திருவனந்தபுரத்தில் உள்ள சி.பி.எம் மாநில அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கேரள மாநில சி.பி.எம் அலுவலகத்தில் முதன் முறையாக இந்த ஆண்டுதான் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதினவிழா கொண்டாட்டப்பட்டுள்ளது. அதில் சி.பி.எம் மாநில செயலாளர் ஏ.விஜயராகவன் தேசியக்கொடி ஏற்றினார். தேசியக்கொடி ஏற்றிய கம்பத்திற்கு அருகில், அதைவிட உயரமாக சி.பி.எம் கட்சிக்கொடி இருந்ததாக கூறப்படுகிறது.
நம் தேசியக்கொடி பறக்கும்போது அருகில் அதைவிட உயரமாக வேறு எந்த கொடியும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதாகவும், ஆனால் சி.பி.எம் மாநில அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை விட உயரமாக அதன் அருகே சி.பி.எம் கட்சிக்கொடி பறந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சபரிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கொடி ஏற்றும் கே.சுரேந்திரன்
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சபரிநாதன்,"தேசியக் கொடி ஏற்றும்போது அருகில் தேசியக்கொடியை விட உயரத்தில் மற்ற எந்த பதாகையோ, கொடியோ இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் சி.பி.எம் மாநில அலுவலகமான ஏ.கே.ஜி சென்டரில் உள்ள கட்சி கொடிமரத்தின் அருகே மற்றொரு கொடிக்கம்பம் நிறுவப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதில் கட்சிக்கொடியை விட தேசியகொடியின் உயரம் குறைவாக உள்ளது. எனவே, விதிமுறையை மீறிய சி.பி.எம் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். அதே சமயம் கட்சி கொடியை விட உயரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என சி.பி.எம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: சுதந்திர தினம்: `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்
http://dlvr.it/S5hF5V
http://dlvr.it/S5hF5V