”வெளியூர்களுக்குச் சென்றால் சென்னையைப் பிரிந்து ஐந்து நாட்களுக்குமேல் இருக்கமாட்டேன். அதிகபட்சம் ராஜமெளலி சார் படத்தின் டப்பிங்கிற்காக செல்லும்போதுதான் பத்து நாட்கள்வரை நீடிக்கும். அப்போதுகூட, ஐந்து நாட்களில் சென்னை வந்துவிட்டே மீண்டும் செல்வேன். அந்தளவிற்கு சென்னையைப் பிடிக்கும்” என்று தன் உணர்வை வெளிப்படுத்துகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 382 வது ஆண்டு சென்னை தினத்தையொட்டி அவரிடம் பேசினோம். சென்னை மீதான ஈர்ப்பு அவரிடம் வெளிப்பட்டது. “உலகம் முழுக்க அண்டார்ட்டிகா வரை சுற்றிவிட்டு வந்திருக்கிறேன். ஆனால், எனக்கு பிடித்த மனதுக்கு நெருக்கமான நகரம் சென்னைதான். பிறந்து வளர்ந்தது.. காதல் நிகழ்ந்தது எல்லாமே சென்னை என்பதால் எப்போதும் சென்னை ரொம்ப ஸ்பெஷல். மக்கள் ஒற்றுமையாக இருப்பது இங்கு மிகவும் பிடித்த விஷயம். இதுவே, கிராமங்களுக்குச் சென்றால் ’நீ என்ன ஆளு?’ என்று கேட்பார்கள். இங்கு யாரும் சாதி பார்ப்பதில்லை. பள்ளிகளிலும் சாதி பார்க்காமல்; கேட்காமல் நட்புடன் பழகுவார்கள். தமிழகத்திலேயே இந்தப் பெருமை சென்னைக்கு மட்டும்தான் உண்டு. அதுமட்டுமல்ல, சென்னை ஒரு வெரைட்டிக் குவியல். நிறைய ஊர்களில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் படித்து முடித்தவுடன் எனக்கு நல்ல சம்பளத்தில் நல்ல பணி கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகப் பணியைவிட 40 மடங்கு அதிக சம்பளம். நல்ல வாழ்க்கைமுறை. சுத்தமான ஊராக இருந்தாலும் சென்னையில் இருந்த உணர்வு அங்கு மிஸ் ஆனது. அதோடு, என் கனவுகள் எல்லாம் சென்னையில்தான் இருந்தது. மொழி தொடர்பாக பணிகளை அங்கு உட்கார்ந்துகொண்டு செய்ய முடியாது. சென்னையின் வீதிகள், கம்ஃபர்ட் எல்லாமே அழைத்துக்கொண்டே இருந்தன. என் அம்மாவிலிருந்து பலரும் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கச் சொன்னார்கள். ’சென்னையில்தான் இருப்பேன்’ என்று வந்துவிட்டேன். அந்தளவிற்கு சென்னை பிடிக்கும்" என்று தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் மதன் கார்க்கி. குறிப்பாக, சென்னையில் கிடைக்கும் உணவுகளையும் சொல்லவேண்டும். ஜப்பானிய உணவு, கொரியன் உணவு, எத்தியோப்பியன் உணவு சாப்பிட நினைத்தால் எல்லா உணவு வகைகளுமே அருகருகில் கிடைக்கும். நானும் மனைவியும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இதுவரை போகாத உணவகம் சென்று சாப்பிடுவோம். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட சென்னை இனி போஸ்டர்கள் இல்லாமல் இருக்கப்போகிறது என்ற அழகான அறிவிப்பு சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல, சிற்பக்கலையின் வளர்ச்சி என்பது மகாபலிபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. அதுவே, சென்னையில் சிற்பம் என்றாலே தலைவர்கள் சிலை என்றாகிவிட்டது. அப்படி இல்லாமல் சென்னையிலும் சிற்பக்கலையை வளர்க்கவேண்டும். பூங்காக்களில் நல்ல நல்ல சிற்பங்களைக் கொண்டு வரலாம். ரொம்ப அழகா இருக்கும். மேலும், இசைக்கான தலைநகரமாக சென்னையை சொல்வார்கள். ஆனால், கலைக்கான தலைநகரமாக மட்டுமல்லாமல் இந்தியாற்கே கலை தலைநகரமாக சென்னை மாறவேண்டும் என்று எனக்குள் பெரிய ஆசை இருக்கிறது” என்றவரிடம், “சென்னையில் பிடித்த இடம் எது?” என்று கேட்டோம், “சென்னையில் நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணா பல்கலைக்கழகம். அங்கு படித்தது… என் மனைவியை முதன்முதலில் சந்தித்தது… பணியாற்றியது என நிறைய நினைவுகள் உள்ளன. இப்போதுகூட வாரத்திற்கு ஒருமுறை மனைவி, மகனுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று நடந்து கொண்டிருப்போம். அதற்கு அடுத்ததாக, தியாஃபிகல் சொசைட்டி, ஐஐடி வளாகத்திற்குச் செல்வோம்” என்கிறார், உற்சாகமுடன்.
http://dlvr.it/S66ZTM
http://dlvr.it/S66ZTM