Monday, 23 August 2021
`முதலிரவு அறையில் மணப்பெண் வைத்த ரகசிய கேமரா’ -வீடியோ எடுத்து தொழிலதிபரை மிரள வைத்த மோசடி தம்பதி
கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். பிசினஸ் செய்து வருகிறார். இவர் திருமணத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்தார். இவருக்கு திருமண தரகர் மூலம் காசர்கோடு நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஸாஜிதா(30) என்ற பெண் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ஸாஜிதாவின் பெற்றோர் எனக் கூறிக்கொண்டு என்.ஏ.உம்மர்(41) அவரின் மனைவி பாத்திமா(35) ஆகியோர் அப்துல் ஸத்தரிடம் திருமணம் குறித்து பேசினர். தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிச்சயிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரையும் தங்க வைப்பதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு அப்பார்ட்மென்ட் எடுத்தனர். அங்கு வைத்து அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் முதலிரவு நடந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்கள்
அவர்களது முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மென்டில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோவை காப்பி செய்துள்ளனர். அந்த வீடியோவை இக்பால் என்பவர் அப்துல் ஸத்தரிடம் காட்டி இதை நாங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி பணம் மற்றும் நகை ஆகியவற்றை கேட்டுள்ளனர். அவரும் முதலில் 3.75 லட்சம் ரூபாய், ஏழரை பவுன் தங்க நகை ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.
அவர்கள் பணம் மற்றும் நகை வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டியதால் இதுகுறித்து அப்துல் ஸத்தார் காஞ்ஞங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த திருமணமே போலி திருமணம் என தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஸத்தாரை திருமணம் செய்த ஸாஜிதா, அவரது பெற்றோர் எனக்கூறிய என்.ஏ.உம்மர், பாத்திமா, வீடியோவை காட்டி மிரட்டிய இக்பால் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.ஸாஜிதா
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "என்.ஏ.உம்மர் பாத்திமா ஆகியோர் கணவன் மனைவிதான். ஆனால் அவர்கள் ஸாஜிதாவின் பெற்றோர் அல்ல. என்.ஏ.உம்மர் உள்ளிட்டோர் ஸாஜிதாவை போலியாக திருமணம் செய்து வைத்து அவர்களின் முதலிரவு நடக்கும் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டியுள்ளனர். ஸாஜிதா இதுபோன்று ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு உள்ளது" என்றனர்.
Also Read: `10 பெண்களுடன் திருமணம்; ரூ.40 லட்சம் சீட்டிங்!'- போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கிய பின்னணி
http://dlvr.it/S68Zxg
http://dlvr.it/S68Zxg
Sunday, 22 August 2021
தமிழகத்திலேயே இந்தப் பெருமை சென்னைக்கு மட்டும்தான் உண்டு: மதன் கார்க்கி சிறப்புப் பகிர்வு
”வெளியூர்களுக்குச் சென்றால் சென்னையைப் பிரிந்து ஐந்து நாட்களுக்குமேல் இருக்கமாட்டேன். அதிகபட்சம் ராஜமெளலி சார் படத்தின் டப்பிங்கிற்காக செல்லும்போதுதான் பத்து நாட்கள்வரை நீடிக்கும். அப்போதுகூட, ஐந்து நாட்களில் சென்னை வந்துவிட்டே மீண்டும் செல்வேன். அந்தளவிற்கு சென்னையைப் பிடிக்கும்” என்று தன் உணர்வை வெளிப்படுத்துகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 382 வது ஆண்டு சென்னை தினத்தையொட்டி அவரிடம் பேசினோம். சென்னை மீதான ஈர்ப்பு அவரிடம் வெளிப்பட்டது. “உலகம் முழுக்க அண்டார்ட்டிகா வரை சுற்றிவிட்டு வந்திருக்கிறேன். ஆனால், எனக்கு பிடித்த மனதுக்கு நெருக்கமான நகரம் சென்னைதான். பிறந்து வளர்ந்தது.. காதல் நிகழ்ந்தது எல்லாமே சென்னை என்பதால் எப்போதும் சென்னை ரொம்ப ஸ்பெஷல். மக்கள் ஒற்றுமையாக இருப்பது இங்கு மிகவும் பிடித்த விஷயம். இதுவே, கிராமங்களுக்குச் சென்றால் ’நீ என்ன ஆளு?’ என்று கேட்பார்கள். இங்கு யாரும் சாதி பார்ப்பதில்லை. பள்ளிகளிலும் சாதி பார்க்காமல்; கேட்காமல் நட்புடன் பழகுவார்கள். தமிழகத்திலேயே இந்தப் பெருமை சென்னைக்கு மட்டும்தான் உண்டு. அதுமட்டுமல்ல, சென்னை ஒரு வெரைட்டிக் குவியல். நிறைய ஊர்களில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் படித்து முடித்தவுடன் எனக்கு நல்ல சம்பளத்தில் நல்ல பணி கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகப் பணியைவிட 40 மடங்கு அதிக சம்பளம். நல்ல வாழ்க்கைமுறை. சுத்தமான ஊராக இருந்தாலும் சென்னையில் இருந்த உணர்வு அங்கு மிஸ் ஆனது. அதோடு, என் கனவுகள் எல்லாம் சென்னையில்தான் இருந்தது. மொழி தொடர்பாக பணிகளை அங்கு உட்கார்ந்துகொண்டு செய்ய முடியாது. சென்னையின் வீதிகள், கம்ஃபர்ட் எல்லாமே அழைத்துக்கொண்டே இருந்தன. என் அம்மாவிலிருந்து பலரும் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கச் சொன்னார்கள். ’சென்னையில்தான் இருப்பேன்’ என்று வந்துவிட்டேன். அந்தளவிற்கு சென்னை பிடிக்கும்" என்று தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் மதன் கார்க்கி. குறிப்பாக, சென்னையில் கிடைக்கும் உணவுகளையும் சொல்லவேண்டும். ஜப்பானிய உணவு, கொரியன் உணவு, எத்தியோப்பியன் உணவு சாப்பிட நினைத்தால் எல்லா உணவு வகைகளுமே அருகருகில் கிடைக்கும். நானும் மனைவியும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இதுவரை போகாத உணவகம் சென்று சாப்பிடுவோம். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட சென்னை இனி போஸ்டர்கள் இல்லாமல் இருக்கப்போகிறது என்ற அழகான அறிவிப்பு சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல, சிற்பக்கலையின் வளர்ச்சி என்பது மகாபலிபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. அதுவே, சென்னையில் சிற்பம் என்றாலே தலைவர்கள் சிலை என்றாகிவிட்டது. அப்படி இல்லாமல் சென்னையிலும் சிற்பக்கலையை வளர்க்கவேண்டும். பூங்காக்களில் நல்ல நல்ல சிற்பங்களைக் கொண்டு வரலாம். ரொம்ப அழகா இருக்கும். மேலும், இசைக்கான தலைநகரமாக சென்னையை சொல்வார்கள். ஆனால், கலைக்கான தலைநகரமாக மட்டுமல்லாமல் இந்தியாற்கே கலை தலைநகரமாக சென்னை மாறவேண்டும் என்று எனக்குள் பெரிய ஆசை இருக்கிறது” என்றவரிடம், “சென்னையில் பிடித்த இடம் எது?” என்று கேட்டோம், “சென்னையில் நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணா பல்கலைக்கழகம். அங்கு படித்தது… என் மனைவியை முதன்முதலில் சந்தித்தது… பணியாற்றியது என நிறைய நினைவுகள் உள்ளன. இப்போதுகூட வாரத்திற்கு ஒருமுறை மனைவி, மகனுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று நடந்து கொண்டிருப்போம். அதற்கு அடுத்ததாக, தியாஃபிகல் சொசைட்டி, ஐஐடி வளாகத்திற்குச் செல்வோம்” என்கிறார், உற்சாகமுடன்.
http://dlvr.it/S66ZTM
http://dlvr.it/S66ZTM
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் - திமுக அறிவிப்பு
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் 1 இடத்துக்கு செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைக்கான இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் யார் போடியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக சார்பில், எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக இருக்கிறார்.ஏற்கெனவே திமுக சார்பில் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S66DZq
http://dlvr.it/S66DZq
"சென்னை பஸ், ஷேர் ஆட்டோக்கள்தான் எனக்கு துணைபுரிந்தன"- பவானி தேவி பகிர்வு | #MadrasDay2021
ஒலிம்பிக் வாள்சண்டைக்கு தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவியையேச் சேரும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்தநாள். சென்னையைச் சேர்ந்த பவானிதேவியிடம் ‘சென்னை தினம்’ குறித்து கேட்காமல் இருக்க முடியுமா? பேசினோம், உற்சாகமுடன் வார்த்தைகளை சுழற்றுகிறார். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தண்டையார்பேட்டை. அதனால், என்னையும் சென்னையையும் பிரித்துப் பார்க்க முடியாது. முதல்முறையாக வாள்சண்டைப் பயிற்சியை சென்னை நேரு ஸ்டேடியத்தில்தான் தொடங்கினேன். தினமும் காலையில் நேரு ஸ்டேடியம் சென்று பயிற்சி முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ ஸ்கூலுக்கு போவோம். மாலை ஸ்கூல் முடிந்ததும் மறுபடியும் நேரு ஸ்டேடியம் சென்று பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல இரவு 9 மணி ஆகிவிடும். வாள்சண்டை கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஐந்து வருடங்கள் இப்படியேத்தான் தொடர்ந்தது. நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்ததே, வாள்சண்டையில் மேலும் பல கடினமான பயிற்சிகளை ஈஸியாக பழகிக்கொள்ள வைத்து, என்னை ஒலிம்பிக் வரையும் கொண்டு வந்தது. இதுவே, நான் மற்ற மாவட்டத்தில் பிறந்திருந்தால், இந்த வசதி வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பது தெரியாது. எங்கள் காலத்தில் வீட்டிற்கு 9 மணிக்கு செல்வது என்பது ரொம்ப தாமதம். பஸ், ஷேர் ஆட்டோ போன்ற வசதி வாய்ப்புகள் சென்னையில் இருந்ததால், என்னைப்போன்ற வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சியை தொய்வில்லாமல் தொடர முடிந்தது. நேரு ஸ்டேடியமும் பெரிய ஸ்டேடியமாக இருந்ததால் நன்கு பயிற்சி எடுக்கவும் முடிந்தது. இதுபோன்ற வசதிகள் மற்ற மாவட்டங்களிலும் இருந்திருந்தால், வாள் சண்டையில் இன்னும் பலர் வந்து சாதித்திருப்பார்கள். அதேபோல, வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது போக்குவரத்து மற்றும் ஃபிட்னஸ் மையங்களின் வசதிகள் குறைவு. ஆனால், சென்னையில் நிறைய இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்களும் சென்னைக்கு வரும்போது ஈஸியா கிடைக்கும். மற்ற மாநிலங்களைவிட நாம் வாள்சண்டை விளையாட்டை தமிழகத்தில் தாமதமாகத்தான் தொடங்கினோம். லேட்டா தொடங்கினாலும், இப்போ லேட்டஸ்டா வந்துட்டோம்; இன்னும் வருவோம். அதற்கேற்றார்போல், தமிழ்நாடு முதல்வரும் ‘வாள்சண்டை வீராங்கனைகளுக்கு நிதி பிரச்னை மட்டுமல்ல. வேறு நிறைய பிரச்னைகளும் இருக்கிறது. என்னால், முடிந்தவரை நிதி பிரச்னை மட்டுமல்லாமல் மற்ற பிரச்னைகளையும் சரி செய்து தருவேன்’ என்றிருக்கிறார். இதுபோன்று, நான் யார் சொல்லியும் கேட்டதில்லை” என்கிற பவானிதேவி, சென்னையில் பிடித்த விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார். “சென்னை மொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஸ்லாங்கை கேட்பதே அலாதியானது. உற்சாகத்தைக் கொடுக்கும். போட்டிக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றாலும் எப்போது சென்னை வருவோம் என்றே இருக்கும். சென்னை வந்தவுடன் சுற்றியும் சென்னை ஸ்லாங் கேட்கும்போது ஆட்டோமேட்டிக்கா ஒரு ஃபீல் ஆகும். கேரளாவில் வாள்சண்டை பயிற்சி எடுக்கச் சென்றிருக்கிறேன். அப்போல்லாம் சென்னையை ரொம்ப மிஸ் பண்ணி, பொய் சொல்லிட்டெல்லாம் ஓடி வந்திருக்கேன். வாழ்க்கை என்றால் என்னவென்றும், வாழ்க்கையில் லட்சியத்தை எப்படி அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் வாள்சண்டைதான் கத்துக்கொடுத்திருக்கு. அதற்கு, நான் சென்னையில் பிறந்ததுதான் காரணம். என் அம்மா ரமணியும் சென்னையில் பிறந்ததுதான் காரணம். வாள்சண்டை விளையாட்டு புதிதாக வரும்போது எல்லா பள்ளிகளிலும் தொடங்கினார்கள். நானும் போய் ஆர்வமாக கற்றுக்கொண்டேன். நான் சோர்ந்து போனாலும், என் அம்மா உறுதியாக இருந்ததால்தான் என்னால் இந்த விளையாட்டை தொடர முடிந்தது. இதுவே, மற்ற இடங்களில் இருந்திருந்தால் ஃபேமிலி சப்போர்ட் இல்லாமல் பாதியிலேயே பயத்தில் விட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனா, என் அம்மா ’எல்லாத்தையும் தகர்த்து முன்னாடிப்போ.. அச்சிவ் பண்ணு’ என்ற தைரியத்தைக் தொடர்ந்து கொடுத்தாங்க. அவங்களுக்கும் அந்தத் தைரியத்தை சென்னைதான் கொடுத்திருக்கு. நானும் முன்னாடி போய்ட்டிருக்கேன். தமிழ் பெண் எப்படி பெருமையோ, அதேபோல, சென்னை பெண் என்பது கெத்துதான்” என்ற பவானி தேவியிடம், ”சென்னையில் பிடித்த இடம் எது?” என்று கேட்டோம்... “நான் வாள்சண்டை தொடங்கிய இடம் என்பதால் பிடித்த இடம், அதிகம் சென்ற இடம் நேரு ஸ்டேடியம்தான். போட்டிகளுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று வந்தாலும், இப்போதும் வாரம்தோறும் கட்டாயம் நேரு ஸ்டேடியம் சென்று ஒருநாள் பயிற்சி எடுத்துவிட்டுத்தான் வருவேன். சிறு வயதில் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி முடித்துவிட்டு தோழிகளுடன் ஆட்டோவில் இடம் இல்லாமல் இறுக்கமாக உட்கார்ந்துகொண்டு சென்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். நேரு ஸ்டேடியத்துக்கு அடுத்ததாக திருவொற்றியூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று விடுவேன். அதேபோல, நான் ரொம்ப மிஸ் பண்ற விஷயம்னா அது சென்னை உணவுதான். எத்தனையோ இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், சென்னை உணவு மாதிரி வரவே வராது. விளையாடச் செல்லும்போது இதனை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்கிறார்.
http://dlvr.it/S65vNw
http://dlvr.it/S65vNw
Saturday, 21 August 2021
விரைவுச் செய்திகள்: கனமழை வாய்ப்பு | ஆப்கனில் இந்தியர்கள் கடத்தலா? | ஓணம் கொண்டாட்டம்
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட 18 மாவடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்திருக்கிறது. சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் கடத்தலா? - தலிபான்கள் மறுப்பு: ஆப்கானிஸ்தானில் விமானநிலையம் அருகே காத்திருந்த 100-க்கும் அதிகமான இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசு அமைக்க நடவடிக்கை: ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பதற்கான நடவடிக்கையை தலிபான்கள் தொடங்கினர். அமைப்பின் இணை நிறுவனர் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு - முதலமைச்சர் ஆலோசனை: கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பதா? கட்டுப்பாடுகளை விதிப்பதா? என மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பெரம்பலூர்- சீரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்: பெரம்பலூரில் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு சீரமைப்பு பணிகளை குடியிருப்புவாசிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். காவல்நிலையத்தில் மோதல் - 6 பேருக்கு தடை: சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஆறு வழக்கறிஞர்கள் இந்தியாவுக்குள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டிருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு: பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தனர். இது கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்: சுருக்குமடி வலைக்கு எதிரான 3 மாவட்ட மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர். குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள சிறப்பு வார்டில் இதனால் விபத்து ஏற்பட்டது. டெல்லியில் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: டெல்லியில் தொடர் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்வதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் கொண்டாட்டம்: கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். படகு கவிழ்ந்து விபத்து - 52 பேர் உயிரிழப்பு?: ஸ்பெயினின் கேனரி தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 52 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
http://dlvr.it/S64H7F
http://dlvr.it/S64H7F
செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, +1, +2 வகுப்புகளுக்கு பள்ளியை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்துவருகிறது என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பள்ளி திறப்பு குறித்து அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது இத்தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மதுரையை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளார். முன்னதாக இன்று காலை, தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்முடிவாகவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த பேட்டியும் இருக்குமென பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/S63wrJ
http://dlvr.it/S63wrJ