கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்திருக்கிறது. வேலையை இழந்த லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலை எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை ஆன்லைன் மோசடிக் கும்பல் குறிவைத்து, அவர்களிடம் தங்களது கைவரிசையைக் காட்டிவருகிறது.
அந்தவகையில் மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்த 37 வயது குடும்பப் பெண் சகுந்தலாவின் மொபைல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் வீட்டிலிருந்தே அமேஸானில் வேலை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆன்லைன் மோசடி
உடனே அதில் குறிப்பிட்டிருந்த போன் நம்பருக்கு போன் செய்து, தான் அமேஸானில் வேலை செய்ய விரும்புவதாக சகுந்தலா தெரிவித்தார். போனில் பேசிய நபர் அமேஸானில் அதிக பொருள்கள் வாங்க எங்களுக்கு உதவி செய்தால் அதற்கு கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதற்காக ஒரு குறிப்பிட்ட மொபைல் இ-வேலட்டுக்குப் பணம் அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்த நபர் தெரிவித்தார்.
உடனே அந்தப் பெண் அந்த நபர் தெரிவித்த இ-வேலட்டுக்கு முதல் கட்டமாக ரூ.5,000 அனுப்பிவைத்தார். உடனே அந்த பணத்துக்கு ரூ.200 கமிஷனையும், அவர் அனுப்பிய ரூ.5,000-யும் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு போனில் பேசிய நபர் அனுப்பிவைத்தார். அதன் பிறகு தனது சீனியர் மேற்கொண்டு டெலகிராம் மூலம் தொடர்புகொள்வார் என்று தெரிவித்தார். அவர் சொன்னபடி வேறு ஒரு நபர் டெலிகிராம் மூலம் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். பல்வேறு புதிய இ-வேலட்களில் பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
Also Read: ₹720 கோடி பண மோசடி; கார்வி நிறுவனத்தின் சேர்மன் பார்த்தசாரதி கைது; என்ன நடந்தது?
ரூ.4.04 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் 2.33 லட்சத்தை அவர்கள் சொன்ன இ-வேலட் மூலம் அந்தப் பெண் அனுப்பிவைத்தார். ஆனால் சொன்னபடி ரூ.4.04 லட்சம் பணம் கிடைக்கவில்லை. இதனால் அந்தப் பெண், மோசடி நபரைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது வருமான வரியாக ரூ.80,700 செலுத்தும்படி அந்த நபர் தெரிவித்திருக்கிறார். அதனால் அந்தப் பெண் தனது பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்த அந்த நபர் வருமான வரியைச் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதனால் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண் இது குறித்து போலீஸில் புகார்செய்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
http://dlvr.it/S6HggM
http://dlvr.it/S6HggM