காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது கர்நாடக அரசு. கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை, 25.8.21 (நேற்று) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசியுள்ளார். சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பொம்மை, ``காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கான விஷயங்களில் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சேர்ப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்" என்று தெரிவித்திருக்கிறார்.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தபோது
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், ``தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை. தமிழகம் எதிர்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இத்தகைய வாக்குறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்திருப்பது தவறு; அதைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, ``உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் என்று பல அமைப்புகளைத் தாண்டி மேக்கேதாட்டூ அணையைக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் கர்நாடக முதல்வர். ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணையை குறித்து விவாதிக்க மறுத்து வந்திருக்கிறது தமிழகம். இனியும் விவாதிக்காது என்றே எதிர்பார்க்கிறோம். கர்நாடக அரசு தெரிந்தோ தெரியாமலோ ஓர் அரசியல் அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதை தமிழக அரசு புரிந்துகொண்டது மாதிரி தெரியவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்தியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வந்ததோடு சரி. அதன்பிறகு மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சட்டப்பேரவையில் துரைமுருகன்
Also Read: மேக்கேதாட்டூ அணை: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கர்நாடகம்... தடுத்து நிறுத்துமா தமிழகம்?
காவிரித்தொழில்நுட்பக் குழு ஒன்று இருக்கிறது. இதன் கீழ் ஒரு குழுவை ஏற்படுத்தி, கர்நாடகம் மேக்கேதாட்டூவில் என்ன செய்து கொண்டிருக்கிறது, அணையைக் கட்டுவதற்கு எந்தவிதமான முயற்சிகளைக் கையாண்டு வருகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டாமா? பட்ஜெட்டில் மேக்கேதாட்டூ சம்பந்தமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாடு பன்மாநில நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் பங்கு முறையாக வந்து கொண்டிருக்கிறதா என்பதைக் கண்காணிக்க குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையைக் கேட்டிருந்தோம். இதுசம்பந்தமாக ஒரு கடிதத்தையும் பொதுப்பணித்துறை செயலாளருக்கு அனுப்பியிருந்தோம். அது கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.முனைவர் வீரப்பன்
சில மாதங்களுக்கு முன்பு விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கர்நாடகத்தில் உள்ள மேக்கேதாட்டூக்கு சென்று அங்கு திட்டப் பணிகளுக்கான சாலைகள் போடப்படுகின்றன என்ற விவரத்தினைத் தெரிவித்தார். அதன்பிறகே கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அறிய முடிந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேக்கேதாட்டூ விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டது மாதிரி தெரியவில்லை. எனவே தமிழக அரசு மேக்கேதாட்டூ விஷயத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்காமல், கர்நாடக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து அதற்கேற்ப அரசியல், சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கர்நாடகம் அணையைக் கட்டுவதற்கு எந்தவிதமான குறுக்கு வழியையும் கையாளும் என்பதை பழைய வரலாற்றிலிருந்து அறிகிறோம். எனவே தமிழக அரசு ஒரு குழு ஒன்றை உருவாக்கி மேக்கேதாட்டூ அணை விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்” என்றார்.
அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#
http://dlvr.it/S6MMFg
http://dlvr.it/S6MMFg