மும்பை புறநகர்ப் பகுதியில் வசிக்கும் 29 வயது பெண்ணை திலிப் ஜெயின் (45) என்பவர் காதலித்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். இதனால் திலிப் ஜெயின் தனது காதலியைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஃபேஸ்புக், இன்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போலிக் கணக்கு திறந்து, அதில் அந்தப் பெண்ணை `கால் கேர்ள்’ எனக் குறிப்பிட்டதோடு அவரது மொபைல் நம்பரையும் திலிப் பதிவிட்டார். மேலும் இருவரும் காதலித்தபோது எடுத்துக்கொண்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதில் பதிவிட்டுவருகிறார். இதனால் அந்தப் பெண்ணுக்குத் தொடர்ச்சியாக போன் கால்கள் வந்துள்ளன.
Also Read: திருமணத்துக்கு மறுத்த காதலிக்கு தீவைப்பு; காதலனைக் கட்டிப்பிடித்த காதலி!- மும்பை இளைஞர் பலிகைது
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ``ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எனது பெயரில் போலிக் கணக்கைத் திறந்து என் போன் நம்பரைப் பதிவிட்டு, அதில் நான் `கால் கேர்ள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து போலீஸில் புகார் செய்து அந்தக் கணக்கை முடக்கினேன். ஆனால் மீண்டும் புதிய கணக்கைத் தொடங்கி திலிப் என்னை சித்ரவதை செய்துவருகிறார். சமூக வலைதளத்தில் சில நிமிடங்களில் கணக்கைத் திறந்துவிடுகின்றனர். ஆனால் அதை முடக்க எனது ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு என்னதான் தீர்வு என்று எனக்குத் தெரியவில்லை. திலிப் எனது பெயரிலான போலி சமூக வலைதளக் கணக்கைப் பயன்படுத்தி எனது போன் நம்பருடன் சேர்த்து ஏராளமானோருக்கு மெசேஜ் அனுப்புகிறார். அதில் நான் `கால் கேர்ள்’ என்றும், விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளவும் என்றும் செய்தி அனுப்புகிறார்.
இதனால் வாட்ஸ்அப்பில் தினமும் ஏராளமான மெசேஜ்கள், போன் அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னையிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் இருக்கிறேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார். திலிப் இளம்பெண்ணின் 55 வயது அத்தையையும் போனில் அழைத்து தொந்தரவு செய்துவருவதாக இளம்பெண்ணின் தந்தை குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை கூறுகையில், ``தினமும் திலிப் எனக்குக் குறைந்தது 25 முறை போன் செய்து சித்ரவதை செய்கிறார். இரவு 2 மணிக்குக்கூட போன் செய்கிறார். இதனால் எனது குடும்பத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். திலிப்பை ஒரு முறை கைதுசெய்து மூன்று நாள்கள் மட்டும் சிறையில் அடைத்தனர். ஆனால் ஜாமீனில் வந்த பிறகு மீண்டும் அதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். இப்போது திலிப் தலைமறைவாக இருக்கிறார். அவர் மும்பைக்குள் நுழைய போலீஸார் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறுகையில், ``திலிப் தலைமறைவாக இருக்கிறார். அவர் மும்பை, நவிமும்பை, தானே, பால்கரில் நுழையத் தடை விதிக்கப்படும். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திலிப் அடிக்கடி சிம்கார்டை மாற்றிக்கொண்டே இருப்பதால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது’’ என்றார்.
http://dlvr.it/S7SZZD
http://dlvr.it/S7SZZD