உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முனைப்புக் காட்டி வருகிறது. மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான 4 ஆண்டுக்கால சாதனைகளை பொது வெளியில் பறைசாற்றும் விதத்தில் அரசு சார்பில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்றைய தினம் உ.பி அரசின் சார்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரம் அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
நேற்றைய தினம் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து வெளியாகி இருந்த அந்த முழு பக்க விளம்பரத்தில், யோகி அரசின் நிர்வாகத் திறனால் உத்தரப்பிரதேசம் பல்வேறு துறைகளில் மேம்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டு வானுயர்ந்த கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மேம்பாலத்தின் புகைப்படங்கள் 'யோகி ஆதித்யநாத் தலைமையில் மாறும் உத்தரப்பிரதேசம்' என்ற வாசகத்துடன் இடம்பெற்றிருந்தது.
சர்ச்சை விளம்பரம்
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்த அந்த விளம்பரத்தில், உத்தரப்பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருந்த மேம்பாலத்தின் புகைப்படம் உண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேம்பாலம் இல்லையென்றும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மம்தாவால் கட்டப்பட்ட 'மா' மேம்பாலத்தின் புகைப்படங்களைத் தான் யோகி அரசு தங்களின் சுய விளம்பரத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
Also Read: உத்தரப்பிரதேசம்: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; யோகி அரசுக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள்?!
அந்த விளம்பரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட புகைப்பட புலனாய்வில் உ.பி அரசின் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த அந்த புகைப்படம் கொல்கத்தாவின் மா மேம்பாலத்தின் புகைப்படம் தான் என்பது உறுதியானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் மத்திய பகுதியையும், சால்ட் லேக் மற்றும் ராஜர்ஹாட் பகுதிகளை இணைக்கும் வகையில் 2015-ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சுமார் ரூ. 460 கோடியில் மா மேம்பாலம் கட்டப்பட்டது. கொல்கத்தாவின் மிகப்பெரிய மேம்பாலமாகக் கருதப்படும் இந்த மேம்பாலம் அந்நகரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. ஆனால், கொல்கத்தாவில் மம்தா கட்டிய மேம்பாலத்தின் புகைப்படத்தை யோகி தலைமையிலான உ.பி அரசு தங்கள் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்று என்று நாளிதழில் சித்தரித்து விளம்பரம் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே போல், அந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த பிரமாண்ட கட்டடங்களும் நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. உ.பி-யின் வளர்ச்சி திட்டங்கள் என்று கூறி விட்டு, மேற்கு வங்க மேம்பாலத்தின் புகைப்படத்தையும், தனியார் ஓட்டலுக்குச் சொந்தமான கட்டடத்தின் புகைப்படத்தையும் அரசு விளம்பரத்தில் வெளியிட்டுப் பொய் பெருமை தேடிக் கொள்ள யோகி ஆதித்யநாத் முயற்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
உ.பி அரசின் இந்த விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க நகரமேம்பாட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் கட்டப்பட்ட மா மேம்பாலம் கொல்கத்தா நகரத்தின் அடையாளமாக விளங்குகிறது. இந்த பிரமாண்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு தங்கள் மேம்பாலம் போல நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்தி இருக்கிறது. முன்னதாக மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசின் மீது மாநில மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்த உ.பி-யில் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்த புகைப்படங்களை பாஜக எங்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது. இப்போது நாங்கள் கட்டிய மேம்பாலத்தை தங்கள் அரசு கட்டியதாகக் கூறி உ.பி அரசு பொய் விளம்பரம் செய்திருக்கிறது" என்று யோகி அரசைச் சாடினார். மா மேம்பாலம் - கொல்கத்தா
அதே போல் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி, "மம்தா தலைமையிலான அரசின் கொல்கத்தா நகர வளர்ச்சி திட்டங்களின் புகைப்படங்களைத் திருடி அதை தாங்கள் செய்ததாகச் சித்தரித்து விளம்பரம் செய்து கொள்வதைத் தான் உ.பி அரசு மாற்றம் என்று சொல்லிக் கொள்கிறது" என்று விமர்சித்தார்.
இந்நிலையில் உ.பி அரசின் விளம்பரத்தை வெளியிட்டிருந்த அந்த பிரபல ஆங்கில நாளிதழ், தவறான புகைப்படத்தை விளம்பரத்தில் பதிவிட்டதற்காக வருத்தம் தெரிவித்து அந்த விளம்பரத்தை தங்கள் டிஜிட்டல் பதிப்புகளில் முழுமையாக நீக்கி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. விளம்பர விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள போதிலும், உ.பி அரசின் தரப்பிலிருந்து இதுவரையிலும் விளக்கம் அளிக்கப்படாமல் இருப்பது அரசின் அலட்சியப் போக்கை வெளிக்காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் யோகி அரசைக் குற்றம் சாட்டி வருகின்றனர்
http://dlvr.it/S7Tg6M
http://dlvr.it/S7Tg6M