உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் அமையவிருக்கும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்துக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகளையும் பார்வையிட்டார்.
அப்போது பேசிய மோடி, `` உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சிறு, பெரு முதலீட்டாளர்களை ஈர்க்கும் இடமாக உத்தரப்பிரதேசம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையாகப் பார்க்கப்பட்ட அதே உத்தரப்பிரதேசம், இன்று நாட்டின் மிகப்பெரிய விஷயங்களை வழிநடத்திச் செல்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். யோகி அரசின் விளம்பரம்
மேலும், ``யோகி தலைமையின் கீழ் உத்தரப்பிரதேசத்திற்கு இரட்டை இன்ஜின் அரசு கிடைத்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுவதால் மாநிலம் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இதன்காரணமாக, இரட்டை இன்ஜின் அரசின் இரட்டைப் பலனுக்கு சிறந்த உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் மாறி வருகிறது" எனவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இரட்டை இன்ஜின் அரசு:
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியமைக்கவேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் கோஷம்! நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்திருப்பதுபோல், மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பது பாஜகவின் கனவு. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், ``இரட்டை இன்ஜின் அரசு, இரட்டிப்பு வளர்ச்சி" என்ற கோஷத்தை முன்வைக்கிறது.அமித் ஷா- யோகி - மோடி
குறிப்பாக, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, மோடி பிரதமரானர். அதன்பின், மோடி தலைமையில் பாஜக சந்தித்த முதல் தேர்தல் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல். இருமாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ``மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அதேபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் முறையாக, முழுமையாக மாநில அரசுக்கு வந்துசேரும். இதனால் மாநில அரசுகள் வளர்ச்சி அடையும். இதுவே மாற்றுக்கட்சி ஆட்சி ஏற்பட்டால் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தமாட்டார்கள்" என செல்லும் இடமெல்லாம் பேசினார்.
Also Read: "புவி வெப்பமயமாதலைத் தடுக்கத்தான் மோடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்!"- நாராயணன் திருப்பதி
அந்த கோஷம் பலனளித்தது. அந்த தேர்தலில் ஹரியானா, மகாராஷ்டிரா இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து வந்த அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அதே கோஷத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் எழுப்பிவந்தனர். ஆனால் டெல்லி, மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அந்த கோஷம் எடுபடவில்லை. இருப்பினும் பீகார், அசாம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி அமைந்தன.நரேந்திர மோடி
இந்நிலையில், அடுத்த ஆண்டு (2022) உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் ஏற்கனவே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. இதனை கருத்தில்கொண்டு மீண்டும் அந்தந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பதற்காக ``இரட்டை இன்ஜின் அரசு'' என்கிற பழைய பார்முலாவை மீண்டும் ஒருமுறை தூசுதட்டியிருக்கிறார் மோடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
http://dlvr.it/S7gSpB