தமிழக-கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக திருவனந்தபுரம் காவல் கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்துக்கு செல்போன் மூலம் ஒருவர் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த அழைப்பு திருச்சூரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருச்சூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்து திருச்சூர் போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த டிஎஸ்பி நந்தன்பிள்ளை தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 20 போலீஸார் கூடுதலாகப் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முல்லைப் பெரியாறு
Also Read: ``முல்லைப் பெரியாறு தண்ணீர் 527 இடங்களில் திருடப்படுகிறது!'' - பி.டி.ஆர் சொன்ன அதிர்ச்சி தகவல்
புதிய அணை கட்ட கேரள அரசு நடத்தும் நாடகம்
தமிழக பொறியாளர்கள் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாகச் செல்லவும், படகு மூலம் செல்லவும் கேரள அதிகாரிகள் அனுமதி தரமறுக்கின்றனர். தமிழக பொறியாளர்கள் அங்கு தங்குவதையும் கேரள அதிகாரிகள் விரும்பவில்லை.
அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மூவர் குழுவும், ஐவர் குழுவும் அணையின் நீர்மட்டம் உயரும் போதும், பருவமழை காலங்களிலும் பெரியாறு அணையை பார்வையிட்டு வருகின்றனர். இதையும் கேரள அரசு விரும்பவில்லை.
ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணையில் கேரள போலீஸார் 200 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியைக் காரணமாகக் காட்டி, டிஎஸ்பி தலைமையில் கூடுதலாக 20 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது புதிய அணை கட்டுவதற்காகவும், தமிழக பொறியாளர்களை வெளியேற்றுவதற்காகவும் உள்நோக்கத்துடன் கேரள அரசு நடத்தும் நாடகம் என சந்தேகிக்கிறோம் என்கின்றனர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர்.முல்லைப் பெரியாறு அணை
தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் முல்லைப் பெரியாறு மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்கம் என மொத்தம் 6 விவசாயிகள் சங்கங்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும் அணையின் பாதுகாப்புப் பணிக்கு மத்திய பாதுகாப்பு போலீஸாரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கேரள அரசின் தோல்வி
இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``முல்லைப் பெரியாறு அணைக்கு ஒருவர் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார். இதை நம்பி கேரள அரசு டிஎஸ்பி தலைமையில் கூடுதலாக 20 போலீஸாரைப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பியுள்ளது. அன்வர் பாலசிங்கம்
இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. முல்லைப்பெரியாறு அணை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அணைக்குச் செல்ல வல்லக்கடவு மற்றும் தேக்கடியில் இருந்து படகில் செல்லும் வழி என இரு பாதைகள் மட்டுமே உள்ளன. அணையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களை வெளியேற்றப் பார்க்கின்றனர்.
அணையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இவ்வாறான செயல்களில் கேளர அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளத்தில் தற்போது ஆளும் அரசு கொரோனா விவகாரத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்யவே பெரியாறு அணையில் இப்போது மூக்கு நுழைத்துள்ளனர். கேரளத்தில் ஒருவர் பெரிய ஆளாக வேண்டுமெனில் முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுகின்றனர்.
அணையின் உரிமையை மீட்டெக்க வேண்டும் எனவும், தமிழகத்திடம் குத்தகை தொகையை கூடுதலாகக் கேட்க வேண்டும் எனவும் பேசத் தொடங்கியுள்ளனர்.
Also Read: `வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!' - விவசாயிகளின் வேண்டுகோள்
குறிப்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பீர்மேடு எம்எல்ஏ வாழூர் சோமன் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படுவது எப்போது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வெடிகுண்டு விவகாரம் கேரள அரசின் நாடகம் என்பது தெரிகிறது'' என்றார்.
http://dlvr.it/S8RRT0
http://dlvr.it/S8RRT0