கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெருமையை எர்ணாகுளம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதேவேளையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தகுதியான பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெருமையை எர்ணாகுளம் பெற்றுள்ளதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி ராஜீவ் கூறுகையில், ''எர்ணாகுளம் போன்ற ஒரு பரந்த மாவட்டத்தில் 100% தடுப்பூசி இலக்கை எட்டியது ஓர் பெருமையான நிகழ்வு. அடுத்த மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 100 சதவீதம் பேருக்கும் செலுத்தி முடிக்க வேண்டும். இப்போதே 50 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு விட்டது. மாவட்ட நிர்வாகமும் சுகாதார அமைப்பும் பாராட்டுக்குரிய வேலையைச் செய்துள்ளன. எர்ணாகுளம் மாவட்டம் இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது'' என்றார். இதையும் படிக்க: "கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேகம் தேவை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
http://dlvr.it/S8q16q
http://dlvr.it/S8q16q