கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேரூர்கடை சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருப்பவர் பி.எஸ்.ஜெயச்சந்திரன். இவரின் மகள் அனுபமா. இவர் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யில் தலைவியாக இருந்தவர். அனுபமாவும், சி.பி.எம் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ பேரூர்கடை மண்டல தலைவரான அஜித்தும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர்.
அஜித் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தவர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அனுபமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனுபமா கர்ப்பமானார். பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அனுபமாவுக்கு 2020 அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அனுபமா, தனக்குக் குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் தன் பெற்றோர் தன் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாகவும், அந்தக் குழந்தையைத் தேடி தான் ஆறு மாதங்களாக அலைவதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையை தேடும் அனுபமா மற்றும் அஜித்
Also Read: ``கொரோனா பாசிட்டிவ்; இனியும் தடுப்பூசி போடமாட்டேன்!" - அடம்பிடிக்கும் பாலிவுட் நடிகை
இதுகுறித்து அனுபமா கூறுகையில், ``எனக்குக் குழந்தை பிறந்த நேரம் என் சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அந்நேரம் எனக்குத் திருமணம் முடியவில்லை என்பதால், என் சகோதரியின் திருமணம் முடிந்த பிறகு குழந்தையை என்னிடம் தருவதாகக் கூறி, பிறந்த மூன்றாவது நாளில் என் பெற்றோர் என்னிடம் இருந்து குழந்தையைப் பிரித்துக் கொண்டுபோனார்கள். ஆனால், என் சகோதரியின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் என் குழந்தையைத் திருப்பிக் கொடுக்காததால், நான் வீட்டைவிட்டு வெளியேறி, குழந்தையின் தந்தை அஜித்துடன் வசித்து வருகிறேன்.
அதன் பின்னர் குழந்தையை மீட்பதற்காக பேரூர்கடை காவல் நிலையம் முதல் டி.ஜி.பி வரை புகார்கள் அளித்துள்ளேன். முதல்வர் மற்றும் சி.பி.எம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் இதுபற்றி முறையிட்டும் எந்த பயனும் இல்லை. என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை என் பெற்றோரிடம் இருந்து வாங்கித்தர வேண்டும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸில் புகார் கொடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. சான்றிதழ்களும், அடையாள அட்டையும் இல்லாததால் எங்களால் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என் அப்பா, என் மகனைத் தத்துக்கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். என் மகனைத் தத்தெடுத்த வீட்டினருக்கு அவனை மீண்டும் என்னிடம் தருவதற்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் என் மகன் என்னுடன்தான் வளர வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எதையும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் வளர்ந்த பிறகு எல்லா விஷயங்களையும் சொல்லிப் புரியவைப்பேன். அவனால் என்னைப் புரிந்துகொள்ள முடியும் என நான் கருதுகிறேன். என்னை விடுங்கள், என் மகனுக்கு அவன் அம்மா வேண்டாமா? அது அந்த குழந்தையின் உரிமை அல்லவா?" என வெடித்துக் கூறுகிறார்.அனுபமா
கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு குழந்தைகள் கேரள குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கபட்டுள்ளன. அதில் ஒரு குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றொரு குழந்தையின் டி.என்.ஏ பரிசோதனை முடிவு, அது அனுபமாவின் குழந்தை இல்லை என்கிறது. மேலும், கேரள குழந்தைகள் நலக்குழு, அனுபமாவின் குழந்தை தங்களிடம் கொடுக்கப்படவில்லை என்று மறுக்கிறது.
இதுகுறித்து அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரனோ, ``அனுபமாவின் அனுமதியுடன் குழந்தையை குழந்தைகள்நலக் குழுவிடம் ஒப்படைத்தோம். குழந்தையைப் பரமரிப்பதற்கான வருமானமோ, திறமையோ அப்போது அனுபமாவுக்கு இல்லை. நோட்டரி பப்ளிக் மூலம் அனுபமாவிடம் இருந்து எழுதி வாங்கித்தான் குழந்தைகள் நலக்குழுவிடம் குழந்தையை ஒப்படைத்தோம். அனுபமா புகார் அளித்ததாக போலீஸ் என்னிடம் விசாரணை நடத்தியபோது அந்த ஆவணத்தைக் காண்பித்திருந்தோம். குழந்தை திரும்ப வேண்டும் என்றால் சட்டப்படி கோர்ட்டை அணுகட்டும். அதை நான் அனுபமாவிடமே சொல்லியிருக்கிறேன். ஆனால் கட்சி மாநாடு நடத்துவதற்கான விவாதங்கள் நடைபெறும் இந்த நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார்" என்றார்.
ஆனால் அனுபமாவோ, ``என் பெற்றோர் என்னிடம் சொத்து தொடர்பான பத்திரம் என்று சொல்லியே கையெழுத்து வாங்கினர். குழந்தையைத் தத்துக்கொடுக்க நான் ஒப்புதல் கொடுக்கவில்லை'' என்கிறார். ஜெயச்சந்திரன் குழந்தையை சட்ட விரோதமாகத் தத்துக்கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. அனுபமா - அஜித்
Also Read: `காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல!' - SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி
இந்த வழக்கை எடுத்து விசாரணை செய்ய முடியாது என கேரள குழந்தைகள் நலக்குழு ஏற்கெனவே தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது அனுபமா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து அனுபமாவின் ஆறுமாத போராட்டத்துக்குப் பிறகு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் முதல் பிறந்த நாளானா இன்று போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரன், தாய், சகோதரி, சகோதரியின் கணவர், ஜெயச்சந்திரனின் நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் குழந்தையை மீட்டுத் தரக்கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளார் அனுபமா என்று சொல்லப்படுகிறது.
http://dlvr.it/S9wFJx