மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப்பெரியாற்றின் மீது முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில், தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அணையைத் தமிழக பொதுப்பணித்துறை பராமரித்துவருகிறது. 155 அடி உயரம்கொண்ட இந்த அணையில் 15.5 டி.எம்.சி வரை தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்கு இந்த அணை ஆதாரமாக இருந்துவருகிறது. இந்த முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது.முல்லைப்பெரியாறு
ஐந்து மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால், ``இந்த அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், அணை உடைந்து இடுக்கி உட்பட ஐந்து மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும்" என்று கேரளா தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. `அணை பலவீனமாகிவிட்டது’ என்று கேரள தரப்பில் சொல்லப்பட்டுவரும் நிலையில், இந்த அணையை உடைத்துவிட்டு புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற ஆபத்தான குரல் தற்போது கேரளாவிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் கேரளாவில் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனால், அணையிலிருந்து அதிக அளவு தண்ணீரைத் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இந்த நிலையில், `முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும்’ என்று கேரளாவிலிருந்து சிலர் குரல் எழுப்பியிருக்கின்றனர். நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட கேரளப் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அந்தப் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
அப்போது, `முல்லைப்பெரியாறு அணை தொடர்பாகப் பீதியைக் கிளப்புபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.பினராயி விஜயன்
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான சர்ச்சை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், `கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து அக்டோபர் 29-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது’ என்று வெளியான செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அந்தச் செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,`தமிழ்நாட்டின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை இருக்கிறது. அந்த அணைப் பகுதியில் மழை அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, வைகை அணைக்கு எடுத்துச்செல்லும் நீர், பருவநிலை மழை அளவுகளைக் கருத்தில்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற ஆணையின்படி அதிகபட்சமாக 142 அடி வரை தேக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கண்காணித்து, முடிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும், கேரளாவைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் 29.10.2021-ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், மாதவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அணையின் நீர்மட்ட அளவுகளின்படி அணையின் நீர்மட்டத்தைக் கண்காணிக்க ஆணையிடப்பட்டிருக்கிறது.துரைமுருகன்
அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் கணக்கில்கொண்டு, 29.10.2021 அன்று காலை அணையின் நீர்மட்டம் உயர்ந்துவந்ததால், அணையின் இரண்டு மதகுகளைத் திறக்க, மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்து தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால் அணை திறக்கப்பட்டது. இது குறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
மதகுகள் திறக்கப்பட்டபோது கேரள நீர்வளத்துறை அமைச்சரும், சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்று வெளியான செய்தி மிகவும் தவறானது’ என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
Also Read: முல்லைப்பெரியாறு: `அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்துகொண்டிருக்கிறார்!’ - செல்லூர் ராஜூ
இந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கையிலெடுத்திருக்கின்றன.`முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தமிழக அரசு இழந்துவிட்டது’ என்று குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக - கேரள அரசுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க-வும் அறிவித்திருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நவம்பர் 6-ம் தேதி முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``முல்லைப்பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கேரள அரசின் செயல்பாடுகள் ஆட்சேபனைக்கு உரிய வகையில் இருக்கின்றன. 'முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்துவிட்டது. பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்' என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தண்டோரோ போடுகிறது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அக்டோபர் 29-ம் தேதி காலை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கவிருந்தது.அன்வர் பாலசிங்கம்
ஆனால், அதற்கு முன்பாகவே, 'அக்டோபர் 29-ம் தேதி காலை 7 மணிக்கு அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது' என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தண்டோரா போட்டது. எந்த அடிப்படையில், எந்த உரிமையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தண்டோரோ அறிவிப்பைச் செய்தது?.
இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டால், 'அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று அவர் பதில் சொல்கிறார். தமிழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அணைக்கு, தேனி மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு. வழக்கமாக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது தேனி மாவட்ட ஆட்சியர்தான். அப்படியிருக்கும்போது தேனி மாவட்ட ஆட்சியரைக்கூட அழைக்காமல், அணையில் தண்ணீரைத் திறந்தது ஏன்?.
'ரூல் கர்வ்' என்று முக்கியமான ஒரு நடைமுறை இருக்கிறது. அதாவது, வெள்ள காலத்தில் தண்ணீரைத் தேக்காமல் அப்படியே திறந்துவிடுவது. கோடைக்காலத்தில் பெய்யும் மழைநீரைத் தேக்கிவைப்பது. இந்த 'ரூல் கர்வ்' நடைமுறையை அமல்படுத்துங்கள் என்று அக்டோபர் 29-ம் தேதி காலை சுமார் 9:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, 'அக்டோபர் 31-ம் தேதி வரை 138 அடி வரையிலும், நவம்பர் 11-ம் தேதி வரை 139.50 அடி வரையிலும், நவம்பர் 20-ம் தேதி வரை 141 அடி வரையிலும், நவம்பர் 30-ம் தேதி வரை 141 அடி வரையிலும் தண்ணீரைத் தேக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அக்டோபர் 29-ம் தேதி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், அதற்கு முன்பாக அக்டோபர் 27-ம் தேதியே இடுக்கி மாவட்ட ஆட்சியர் தண்டோரா போட்டிருக்கிறார். அது எப்படி... அவருக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?
Also Read: ஈழத் தமிழர்களுக்கு அதிகம் 'செய்தது' யார்? - திமுக Vs அதிமுக மோதலும் சில நினைவூட்டலும்
வைகை அணையைத் திறப்பதற்கு ஐ.பெரியசாமி, மூர்த்தி, பெரியகருப்பன் என மூன்று அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், முல்லைப்பெரியாறு அணையைத் திறக்க எந்த அமைச்சரும் ஏன் வரவில்லை? தேனி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல்கூட தரப்படவில்லை.
அண்டை மாநிலங்களுடன் நட்புறவும் நல்லிணக்கமும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கலாமா?" என்று ஆவேசப்பட்டார் அன்வர் பாலசிங்கம்.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையைத் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள்தான் திறந்தார்கள். அணை திறக்கப்பட்டபோது கேரள அமைச்சர்களும் அங்கு இருந்தனர். அதனாலேயே, கேரளாதான் அணையைத் திறந்தது என்று சொல்வது தவறு. எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமை விட்டுக்கொடுக்கப்படவில்லை. அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழ்நாட்டிடம்தான் இருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தமிழக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு, 'உங்கள் விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அதைத் திறந்துகொள்ளுங்கள்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதுவரை எந்தவொரு கேரள முதல்வரும் இப்படியொரு சுமுகமான அணுகுமுறையுடன் நடந்துகொண்டதில்லை. `அண்டை மாநிலங்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அதே நேரத்தில், நம்முடைய உரிமைகளை எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்பதுதான் தி.மு.க அரசின் நிலைப்பாடு. அந்த வகையில், தமிழக அரசு தமிழ்நாட்டின் எந்த உரிமையையும் விட்டுக்கொடுக்கவில்லை" என்றார்.
http://dlvr.it/SC6Fq3