கடந்த அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானவை. எனவே, இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.லக்கிம்பூர், உத்தரப்பிரதேசம்
இந்த நிலையில், விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாகவும், இந்த வழக்கை நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``லக்கிம்பூர் கேரி வழக்கை விசாரிக்கச் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு வழக்கை விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது. இதன்படி உ.பி அரசு, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. ஆஷிஷ் மிஸ்ரா
Also Read: கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?
இந்தச் சம்பவத்தில், விவசாயிகள், பத்திரிகையாளர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது சிறப்பு விசாரணைக் குழு.
அறிக்கை சொல்வது என்ன?
சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் எஸ்.பி.யாதவ், தனது விசாரணையை முடித்து, அது தொடர்பான அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் சிந்தா ராம் முன்னிலையில் டிசம்பர் 14-ம் தேதி அன்று தாக்கல் செய்தார். சிறப்பு விசாரணைக் குழு அறிக்கைஅந்த அறிக்கையில் விவசாயிகள், பத்திரிகையாளர் கொல்லப்பட்டது கவனக்குறைவாலோ, அலட்சியத்தாலோ நடந்த ஒன்றல்ல. கொலை செய்யவேண்டுமென்று முன்பே திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி இது!
மேலும் அந்த அறிக்கையில், ``இந்த வழக்கில், கொலை, கொலை முயற்சி, ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும்'' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மாவட்ட நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் முழக்கம்!
இந்த அறிக்கை வெளியானதை அடுத்து பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்றிருக்கிறது சிறப்பு விசாரணைக் குழு. ஆகையால், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி, ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இதே கோரிக்கையை காங்கிரஸின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதையடுத்து இன்று (டிச. 16), காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் இதே விஷயத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர். அஜய் மிஸ்ரா
இந்தச் சம்பவம் நடந்தது முதலே, ``அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்'' என விவசாயிகள் கோரிக்கை வைத்துவந்தனர். தற்போது விசாரணைக் குழு அறிக்கை வெளியானதை அடுத்து, விவசாயிகள் மத்தியில்,`அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றிருக்கிறது. இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா.
பத்திரிகையாளரின் மைக்கை பறித்த அமைச்சர்!
இந்த நெருக்கடியின் விளைவாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, தன் மகன் குறித்துக் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரிடம் கடுமையாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று லக்கிம்பூர் கேரி மாவட்டத்துச் சென்ற அஜய் மிஸ்ராவிடம் பத்திரிகையாளர் ஒருவர், ``லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு சொல்லியிருக்கிறதே?'' என்று கேட்டார். ஆத்திரமடைந்த அஜய் மிஸ்ரா, ``இது என்ன முட்டாள்தனமான கேள்வி... உனக்கென்ன பைத்தியமா?'' என்று கேட்டு பத்திரிகையாளரின் மைக்கையும் பறித்துவிட்டார்.
ஏற்கெனவே, ஹரியானா, உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்கள் காரணமாக விவசாயிகள் பலரும் பா.ஜ.க மீது கடுங் கோபத்திலிருந்தனர். பஞ்சாப், உ.பி-யில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதையொட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்து விவசாயிகள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க நினைத்தது பா.ஜ.க. ஆனால், தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
#WATCH | MoS Home Ajay Kumar Mishra 'Teni' hurls abuses at a journalist who asked a question related to charges against his son Ashish in the Lakhimpur Kheri violence case. pic.twitter.com/qaBPwZRqSK— ANI UP (@ANINewsUP) December 15, 2021
Also Read: உச்ச நீதிமன்றம் தலையிடாவிட்டால் லக்கிம்பூர் சம்பவ வழக்கின் திசை மாறியிருக்குமா?
அஜய் மிஸ்ரா நீக்கப்படுவாரா?
``அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை மனதில் வைத்துத்தான், புதிய அமைச்சரவையில் உ.பி-யைச் சேர்ந்த ஏழு பேருக்கு இடமளித்தது கட்சித் தலைமை. அதில் ஒருவர்தான் அஜய் மிஸ்ரா. உ.பி-யின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது லக்கிம்பூர் கேரி மாவட்டம். உ.பி-யின் மிகப் பெரிய மாவட்டமும் இதுதான். விவசாயிகள் அதிகம் வாழும் மேற்கு உ.பி-யில் வேளாண் சட்டங்களால், ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தற்போது விசாரணைக் குழு அறிக்கை வெளியான பின்னர், மேலும் அந்தப் பகுதியில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், மேற்கு உ.பி-யில் செல்வாக்கு பெற்ற அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்கினால், அது மேலும் பின்னடைவை ஏற்படுத்துமோ என்கிற எண்ணம் கட்சி மேலிடத்துக்கு இருப்பதாகத் தெரிகிறது. இருந்தும், தற்போதிருக்கும் நெருக்கடிக்கு, அஜய் மிஸ்ரா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
http://dlvr.it/SFTTx7