மாணவர்கள் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! - கேரள பள்ளியின் அறிவிப்பு. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! இரு பாலின ஆசிரியர்களையும் `டீச்சர்' என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன், தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சஞ்சீவ்குமார் இந்த கருத்தை முதன்முதலில் தெரிவித்ததாகவும்; சமூக ஆர்வலர் பூபன் மட்டுமன்தாவின் பிரசாரத்தைப் பார்த்து சஞ்ஜீவ் குமாருக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பள்ளியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாத்தூர் பஞ்சாயத்து. பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை மக்கள் சார் மேடம் என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பதவியை சொல்லி அழைத்தால் போதும் என்று கூறியுள்ளது மாத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம். கடந்த ஜூலை மாதம் முதல் பின்பற்றி வருகிறது. சமூக ஆர்வலர் பூபன் மட்டுமந்தா
இந்த சம்பவத்தின் தாக்கமும்கூட எங்கள் பள்ளியின் இந்த முடிவுக்கு காரணம் என்று வேணுகோபாலன் கூறியுள்ளார். இந்த உத்தரவிற்கு பெற்றோர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப் பட்டதாகவும் தற்போது மாணவர்கள் சார், மேடம் என்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை அறவே நிறுத்தி விட்டதாகவும் தலைமையாசிரியர் வேணுகோபாலன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலக்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூபன் மட்டுமந்தா அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் ஆசிரியர்களை சார் மேடம் என்று அழைக்காமல் `டீச்சர்' என்ற பாலின நடுநிலையைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு அழைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,பள்ளிகளில் மாணவர்கள் சார் மேடம் என்று அழைப்பது பாலின வேறுபாடு உணர்வை நியாயப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இது குடியுரிமை உணர்வை தடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சார், மேடம் என்று அழைப்பதற்கு பதில் `டீச்சர்' என்று அழைப்பது பாலின சமநிலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கைத் தொடர்ந்து கேரள பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை பொதுமக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்க முடிவு செய்தது. கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி தலைமையில் ஒரு குழுவை நியமித்து செயல்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வி துறை கூறியுள்ளது.
இந்நிலையில் ஒலசேரி (கொடும்பா) கிராமத்தில் உள்ள இந்த அரசு உதவி பெறும் பள்ளி தான் கேரள மாநிலத்திலேயே முதன்முதலில் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைக்கக்கூறி பாலின சமநிலையை ஊக்குவித்த முதல் பள்ளியாகும். பள்ளியின் இந்த செயல் வரவேற்கத்தக்கதாகும் பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. எந்த ஒரு பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமெனில், அதை குழந்தை பருவத்திலேயே மனிதர்களிடம் புகட்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்து பாலின சமநிலையை ஊக்குவித்து வருகிறது கேரள மாநிலம்.
சமீபத்தில் கேரள அரசு, பள்ளிகளில் சென்டர் நியூட்ரல் யூனிஃபார்ம்களை அறிமுகப்படுத்தி பாலின சமத்துவத்தை ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SGpj6c
http://dlvr.it/SGpj6c