தடையை மீறி கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் யாத்திரையை தடுத்து நிறுத்தாது ஏன் என பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த பாதயாத்திரை மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து நாளை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று நான்காவது நாளாக மாநில அரசு விதித்த தடையை மீறி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாதயாத்திரைக்கு எதிராக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நாகேந்திரா என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரிட்டு ராஜ் அஸ்வதி மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்த ராஜ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்காவிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். தடையை மீறி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை நடத்தும்போது கர்நாடக அரசு அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய, அட்வகேட் ஜெனரல், பாதையாத்திரைக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தனது வாதத்தை முன்வைத்தார்.
வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதுமா பாதயாத்திரையில் கொரானா வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி விதியை மீறுவது சரியானதா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து காங்கிரஸ் கட்சி இந்த பாத யாத்திரையை நடத்துகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.
கர்நாடக அரசு தடையை மீறி நடைபெற்றுவரும் பாதயாத்திரை மீது எடுக்க உள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து நாளை பதில் மனுவாக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
http://dlvr.it/SH0Lym
http://dlvr.it/SH0Lym