உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, பரபரப்புகளைப் பார்த்துவந்த உத்தரப்பிரதேசம், தற்போது அதிரடிக் காட்சிகளைத் தினந்தோறும் கண்டுவருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் வடக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது. `உத்தர்’ என்றால் இந்தியில் `வடக்கு’. வட திசையில் அமைந்துள்ள மாநிலம் என்பதால் அது, `உத்தரப் பிரதேசம்.’ வரைபடம்
பரப்பளவில் பெரிய மாநிலம். இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகைகொண்ட மாநிலமும்கூட. அதாவது, பாகிஸ்தான் மக்கள்தொகைக்கு இணையானது. உ.பி வாசிகளின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டுகிறது. அதனால், தேசிய அரசியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி, தற்போதைய மோடி வரை, ஒன்பது பிரதமர்களைத் தந்த மாநிலம் இது. அதாவது, அந்த ஒன்பது பேரும் இங்கிருந்து எம்.பி-யாகி பிரதமர் ஆனவர்கள்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படுவதால், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தொகுதிகளும், நாடாளுமன்றத் தொகுதிகளும் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாட்டுக்கும் உ.பி-க்குமான வித்தியாசத்தைப் பார்ப்போம். இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, 234 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டது. உ.பி-யோ, 403 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டது. மோடி
தமிழ்நாடு 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக்கொண்டது என்றால், உ.பி-யின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, அதில் இரண்டு மடங்கு. உ.பி., 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக்கொண்டிருக்கிறது. எனவேதான், தேசிய அரசியலில் உத்தரப்பிரதேசம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. உ.பி சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சிதான், அடுத்ததாக நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்ற நிலையும், உ.பி-யின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகரிக்கச்செய்கிறது.
அந்த வகையில், 2017 உ.பி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க., அதையடுத்து 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. அது, சாதாரண வெற்றி அல்ல. 303 இடங்களைப் பிடித்து, அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ.க அமர்ந்தது.
உ.பி-யில் 62 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிடித்ததால்தான், அகில இந்திய அளவில் அவ்வளவு பெரிய வெற்றி பா.ஜ.க-வுக்கு கிடைத்தது. 2014, 2019 ஆகிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024-ல் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்றுவிட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் கணக்கு.அமித் ஷா
மத்தியில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற வேண்டும் என்று துடிக்கும் பா.ஜ.க., அதற்காக உ.பி சட்டமன்றத் தேர்தலில் படுதீவிரமாக இயங்குகிறது. தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உ.பி-யில் சூறாவளியாகச் சுழல ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களில் டெல்லிக்கும் உ.பி-க்கும் மாறி மாறிப் பறந்து, பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
பொதுவாகவே, சட்டமன்றத் தேர்தல் நடைபெறப்போகிற மாநிலங்களுக்கு அடிக்கடி விசிட் அடித்து வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதும், தொடங்கிவைப்பதும் பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில், மேம்பாலம், நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை உ.பி-யில் திறந்தும் தொடங்கியும் வைத்திருக்கிறார். வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தைப் பல கோடி ரூபய் செலவில் புதுப்பித்ததுடன், கோலாகலமான விழாவை எடுத்து அதை அவர் திறந்துவைத்தார்
`பூர்வாஞ்சல்’ என்று அழைக்கப்படும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில்தான், தற்போது பா.ஜ.க-வின் முழு கவனமும் இருக்கிறது. ஓ.பி.சி., தலித், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான மேற்கு உத்தரப்பிரதேசத்தை, இம்முறை பா.ஜ.க அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அங்குதான், விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
முதல்வர் யோகி ஆதித்யநாத், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர். அங்குதான், மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். ரூ.4,672 கோடி செலவில் 27.84 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. திட்டப்பணி 2024-ல் நிறைவடையுமாம். 2024-ல்தான் நாடாளுமன்றத் தேர்தலும் வரப்போகிறது.யோகி ஆதித்யநாத்
பல முறை கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற யோகி, முதன்முறையாக கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கோரக்பூரில் உரத்தொழிற்சாலை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டிவிட்டுச் சென்ற பிரதமர் மோடி, கோரக்பூரில் 750 படுக்கைகள் கொண்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைத் திறந்துள்ளார். கோரக்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மோடிக்கு நன்றி நவில்ந்தார் யோகி. எதிர்க்கட்சியினரோ,` வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளும், தொடக்க விழாக்களும் கடைசி நேரத்தில் விறுவிறுப்படைந்ததற்கு, தேர்தல்தானே காரணம்’ என்கின்றனர்
ஓர் உரத்தொழிற்சாலை வருவதாலும், ஓர் எய்ம்ஸ் வருவதாலும் ஓரிடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதாலும், சில நெடுஞ்சாலைத் திட்டங்கள் வருவதாலும் உ.பி சொர்க்கபுரியாகிறது என்று சொல்வதற்கில்லை. ஒன்பது பிரதமர்களைத் தந்த உத்தரப்பிரதேசம், இன்றைக்கும்கூட ஏழ்மையிலும் எழுத்தறிவின்மையிலும் இந்தியாவிலேயே `முதன்மை’ மாநிலமாகத்தான் இருக்கிறது.
மோடி அரசு உருவாக்கிய நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைக் காட்டிலும் ஏழைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக பிரதமர் மோடியின் வாரணாசி இருப்பதாகப் புள்ளிவிவரங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.அகிலேஷ் யாதவ்
ஆனால், உத்தரப்பிரதேசம் பின்தங்கிக் கிடப்பதற்கான உண்மைக் காரணங்களை ஆராய்ந்து, வளர்ச்சிக்கான பாதையை வகுப்பதில் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதில்தான் தலைவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. பாபர் மசூதி - ராம ஜென்மபூமி வழக்கு உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவரும் சூழலில், `கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?’ என்றெல்லாம் உரையாற்றுவது, அமைதியைச் சீர்குலைத்துவிடாதா?
உத்தரப்பிரதேசத்தின் இன்றைய நிலைக்கான காரணங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அந்த மாநிலம் கடந்துவந்த 70 ஆண்டுக்கால அரசியலையும் அதில் கோலோச்சிய பெருந்தலைகளையும் திரும்பிப் பார்ப்பது முக்கியம்... அவர்களின் அரசியலை அலசுவதும் அவசியம்!
(உத்தர் அரசியல்... அலசுவோம்)
http://dlvr.it/SHG5M1