இன்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியே காணாமல் வெற்றிகளை குவித்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோல்வியில் இருந்து முதல் வெற்றியை பெற்ற உத்வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
ஐபிஎல் 2022 தொடரின் 21 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குஜராத். சேஸிங் செய்யும்போதும் சரி, டிபண்ட் செய்யும்போதும் சரி, விட்டுக்கொடுக்கும் எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல் கடுமையாக போராடி வெற்றியை பெறுகிறது குஜராத்.
பேட்டிங்கை பொறுத்தவரை அட்டகாச பார்மில் இருக்கும் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இக்கட்டான சூழல் தரும் அழுத்தத்தை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், அபாரமாக விளையாடும் ராகுல் தெவாட்டியா குஜராத்துக்கு கூடுதல் பலம். தமிழக வீரர் சாய் சுதர்சனும் பேட்டிங்கில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். பவுலிங்கை பொறுத்தவரை ரஷித் கான், முகமது ஷமி, பெர்குஷன் என பலம் வாய்ந்த பவுலர்களை வைத்து எதிரணியின் பேட்டிங்கை துவம்சம் செய்கிறது குஜராத். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல், தன் இயல்பான பார்மை அந்த அணி வெளிப்படுத்தினாலே சன் ரைசர்ஸை எளிதாக சாய்த்து விட முடியும்.
மறுபக்கம் சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த ஆட்டத்திலும் சன் ரைசர்ஸ் களமிறங்கும். பார்முக்கு வராமல் இருந்த அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியன்சனும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். உம்ரான் மாலிக், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் குஜராத் பேட்டிங் லைன் அப்பிற்கு கடும் போட்டியை அளிக்க இயலும். அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடும்போது மட்டுமே பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்த இயலும். வியூகம் வகுத்து குஜராத்தை வீழ்த்துவாரா கேன் வில்லியன்சன்? இன்று இரவு 7.30க்கு துவங்கும் ஆட்டத்தில் தெரிய வரும்.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் மற்றும் டி நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ் : மேத்யூ வேட்*, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி மற்றும் தர்ஷன் நல்கண்டே.
*3 ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத மேத்யூ வேட்-க்கு பதிலாக ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறக்கப்படலாம்
http://dlvr.it/SNLg6m
http://dlvr.it/SNLg6m