ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்புடன் வெளியாகியிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் இதுவரை நடந்த சாதனைகளை முறியடிக்கும் என திரைத்துறையினர் கூறி வருகின்றனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018-இல் வெளியான கன்னட திரைப்படம் கேஜிஎஃப் -1. கன்னட திரைப்படம் என்ற போதிலும் 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா மூவியாக வெளியான இந்த திரைப்படம், இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
கர்நாடகாவின் கோலார் தங்க வயலை கதைக்களமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் தத்ரூபமான ஆக்ஷன் காட்சிகளும், படுவேகமான திரைக்கதையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் விளைவாக, கேஜிஎஃப் திரைப்படத்துக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
இந்நிலையில், ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவுடன் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் - 2 நேற்று வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியும், இரண்டாம் பாகத்தின் அசுரத்தனமான ட்ரெய்லரும் கேஜிஎஃப் - 2 திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்காக கூட்டியிருந்தது. இந்த சூழலில், கேஜிஎஃப் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளதாகவே தெரிகிறது. நேற்று முதல் காட்சி வெளியானது முதலாக, நாடு முழுவதிலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆரவாரமாக கொண்டாடினர். அதேபோல, வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. புக்கிங் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், தற்போது வார இறுதி என்பதால் கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை பார்க்க மக்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கேஜிஎஃப் -2 திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலே ரூ.130 முதல் 140 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால், பாக்ஸ் ஆஃபிஸில் இதுவரை இந்திய திரைப்படங்கள் புரிந்த சாதனையை கேஜிஎஃப் -2 திரைப்படம் கட்டாயம் முறியடிக்கும் என திரைத்துறையினர் கூறி வருகின்றனர்.
http://dlvr.it/SNdPxr
http://dlvr.it/SNdPxr