இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாக வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்ட செயலுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தரம்சாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச சட்டசபையின் பிரதான வாயிற்கதவுகள் மற்றும் சுற்றுச்சுவரில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடிகளை கட்டியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர்.
இது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளின் செயலாக இருக்கலாம் என்றும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் குஷால் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தக் கோழைத்தனமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோழைகள் இரவோடு இரவாக தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டிச் சென்றுள்ளனர். இங்கு குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடைபெறுகிறது. இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கிய மதத்தைச் சேர்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஒரு அமைப்பு. சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தையும் மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகமாக வசித்த ஒரு பகுதியையும் இணைத்து சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.இதையும் படிக்கலாம்: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் - விரட்டியடித்த பிஎஸ்எஃப் வீரர்கள்
http://dlvr.it/SPzGzl
http://dlvr.it/SPzGzl