முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 2014-ம் ஆண்டு 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அணையைக் கண்காணித்து பராமரிப்புக்கு மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உருவாக்கியது. அதில் தமிழகம் மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.மத்திய குழுவினர்முல்லை பெரியாறு: ``உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துங்கள்!" - ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அறிவுரை
தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள அரசின் சார்பில் அந்த மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கண்காணிப்பு குழுவினர் கடைசியாக 2021-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று அணையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை நிர்வாகத் தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகிய இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
இதற்காகத் தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து தமிழக அரசுக்கு சொந்தமான கண்ணகி படகில் அணைக்கு பயணம் செய்தனர். கேரளப் பிரதிநிதிகள் அந்த மாநிலத்துக்குச் சொந்தமான படகில் சென்றனர். இதில் பிரதான அணை, பேபி அணை, மதகுப் பகுதி, சுரங்கப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மதகுகளை இயக்கி அதன் தன்மையை சரிபார்த்தும், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் அளவை சரிபார்த்தனர். அதோடு தற்போது நிலவும் கோடைக்காலம் மற்றும் எதிர் வரும் தென் மேற்குப் பருவமழைக் காலங்களில் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.படகில் சென்ற குழுவினர்முல்லை பெரியாறு விவகாரம்: புதிய அணைக்கு அச்சாரம் போடும் கேரளா; தடுப்பாரா ஸ்டாலின்?
முல்லை பெரியாறு அணையில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் ஆய்வு மற்றும் 15 நாள்களுக்குப் பின் நடைபெறும் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய பின்னரும், அதே உச்ச நீதிமன்றம் ஒரு கண்காணிப்புக் குழுவையும் அமைத்து, அவ்வப்போது அணையைப் பார்வையிட்டு கண்காணிக்க, அமைத்திருப்பதே அடிப்படைத் தவறு.
உச்ச நீதிமன்றத்தால் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறகு, முதல் முதலாக அணைப் பகுதிக்கு வருகிறது மத்திய கண்காணிப்புக் குழு. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குல்ஷன் ராஜ் தலைமையில் வரும் இந்தக் குழுவில், தமிழக விவசாயிகளின் நம்பிக்கைக்கு உகந்த பொறியாளரும், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவருமான சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.அன்வர் பாலசிங்கம்
அதுபோல கேரளாவின் சார்பில் கலந்துகொள்ளும் இருவரில் ஒருவரான, நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் தான், பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட அமர்வின் தலைவர். அதுபோல அங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசன நிர்வாகத் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் உள்ளார். இந்த ஆய்வின் முடிவில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிடுவார்கள். 40 ஆண்டுக்கால பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்'' என்றார்.
http://dlvr.it/SQ24K7