கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தி, பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக வேகமெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. இயக்குநர் பாலச்சந்திரகுமார் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்தார். பாலச்சந்திரகுமார் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் திலீபின் மூன்று செல்போன்கள் உட்பட ஆறு செல்போன்களை ஆய்வு செய்தபோது இந்த வழக்கில் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்குத் தொடர்பு உள்ளதாகச் சில ஆதராங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவ்யா மாதவனுக்கு கொச்சி க்ரைம் பிராஞ்ச் போலீஸார் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.காவ்யா மாதவனிடம் விசாரணை
காவ்யா மாதவனுக்கு அனுப்பிய முதல் நோட்டீஸில் தேதி குறிப்பிடாமல் `உங்களுக்கு விருப்பமான தேதியில் விசாரணைக்கு ஆஜராகலாம்’ என போலீஸார் கூறியிருந்தனர். ஆனால், `சென்னையில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது’ என காவ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவதாக அனுப்பிய நோட்டீஸில் தேதி குறிப்பிட்டு ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜராகும்படி கூறியிருந்தனர். `விசாரணைக்காக ஆலுவா போலீஸ் கிளப்புக்கு வர முடியாது’ என காவ்யா தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் கிரைம் பிராஞ்ச் ஏடி.ஜி.பி திடீரென மாற்றப்பட்டு, புதிய அதிகாரி நியமிக்கப்பட்டதால் விசாரணை சற்று காலதாமதமானது. அதன் பிறகு மீண்டும் காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்றாவதாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு பதிலளித்த காவ்யா மாதவன், `என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்துவதாக இருந்தால் ஒத்துழைப்பு அளிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். நடிகை பாலியல் வழக்கு மீதான விசாரணையை இம்மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் காலதாமதத்தைத் தவிர்க்க போலீஸார் முடிவு செய்தனர்.காவ்யா மாதவன்
அதன்படி நேற்று க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி பைஜூபவுலோஸ் தலைமையிலான போலீஸார் ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் பத்மசரோவரம் வீட்டுக்குச் சென்று காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவ்யா மாதவனின் சில பதில்களில் சந்தேகம் இருப்பதாகவும், தேவையானால் மீண்டும் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SQ53F5
http://dlvr.it/SQ53F5