உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறாது என்று தான் உறுதியாக நம்புவதாக ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 77வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்வில் பேசிய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், "உக்ரைனில் ரஷ்ய சர்வாதிகாரத்தின் கீழ் அமைதியை ஏற்படுத்த முடியாது. இதனை உக்ரைன் ஏற்காது, நாமும் ஏற்க மாட்டோம், பிப்ரவரி 24 அன்று தொடங்கிய மோதலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெற்றிபெற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. 77 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப்போரில் அடக்குமுறை, வன்முறை மற்றும் சர்வாதிகாரத்திடம் இருந்து சுதந்திரமும், பாதுகாப்பும் வெற்றி பெற்றது போல தற்போது நடந்துவரும் போரில் உக்ரைன் வெற்றிபெறும், அதன் சுதந்திரமும் பாதுகாப்பும் வெல்லும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கொலைகார தேசிய சோசலிச ஆட்சியை தோற்கடிக்க ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒன்றாகப் போராடி பெரும் தியாகங்களைச் செய்தனர். ஆனால் இப்போது, புடின் உக்ரைனைத் தூக்கி எறிந்து அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க விரும்புகிறார். புடினின் தற்போதைய காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போர் அப்போதைய ஜெர்மன் நடவடிக்கைகளுக்கு இணையானது" என தெரிவித்தார் மேலும், உக்ரைன் ரஷ்ய போர் குறித்த ஜெர்மனியின் கொள்கைகளை விளக்கிய ஓலாஃப் ஷோல்ஸ், "முதலாவதாக, இந்த விவகாரத்தில் ஜெர்மனி ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எதுவும் எடுக்காது. நாங்கள் என்ன செய்தாலும், நாங்கள் எங்கள் கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
இரண்டாவதாக, ஜெர்மனி தனது சொந்த தற்காப்புத் திறனைத் தக்க வைத்துக் கொள்ள வேலை செய்யும். மூன்றாவதாக, ரஷ்யாவை விட எங்களுக்கும் எங்கள் கூட்டாளிகளுக்கும் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். நான்காவதாக நேட்டோவை போரில் பங்கெடுக்க செய்யும் எந்த முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம் " என தெரிவித்தார் ரஷ்ய இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு மாற்றான வாய்ப்பை விரைவுபடுத்த ஜெர்மனிக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து பேசிய அவர், சிலர் விரும்பும் அனைத்து விஷயங்களையும் உடனடியாக செய்யமுடியாது என தெரிவித்தார்.
http://dlvr.it/SQ25Bm
http://dlvr.it/SQ25Bm