”நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், எல்லாவற்றையும் நீதிமன்றம் சொல்லிகொண்டிருக்க முடியாது” என இந்துகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் எனவே அந்த மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்த மத்திய அரசு, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இதற்கிடையில் புதிய பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த மத்திய அரசு, இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என மாற்றி கூறியது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சை கிஷண் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு உடைய இந்த மாற்று நிலைப்பாட்டை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக பல ஆலோசனைகளை முன்வையுங்கள் ஏனென்றால் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிடும். இது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் இருங்கள் என மத்திய அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நீதிமன்றம் சொல்லிகொண்டிருக்க முடியாது. பிற சமூகத்தை விட எண்ணிக்கையில் குறைவாக உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க விரும்பினால், அவ்வாறு செய்ய வேண்டியதுதானே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர மத்திய அரசுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
http://dlvr.it/SQ6DXk
http://dlvr.it/SQ6DXk