திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதர பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு விவகாரம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் 16 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனை குறிவைத்து பல குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்வப்னா சுரேஷ், தனது உயிருக்கு ஆபத்து என்பதால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், திருவனாதபுரம் யு.ஏ.இ தூதரகத்தில் இருந்து பிரியாணி பாத்திரத்தில் உலோகம் போன்ற பொருள்கள் முதல்வரின் க்ளப் ஹவுஸுக்கு சென்றதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். மேலும், முதல்வர் பினராயி விஜயன் சார்பில் தனது நண்பரான ஷாஜ் கிரண் தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.ஷாஜ் கிரண்
அதே சமயம் ஷாஜ் கிரண் அதை மறுத்திருந்தார். இந்த நிலையில் ஷாஜ் கிரண் தன்னுடன் பேசும் ஆடியோ ஒன்றை நேற்று பாலக்காட்டில் வைத்து வெளியிட்டார் ஸ்வப்னா சுரேஷ். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், ``எனது வாக்குமூலத்தால் ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி கோபமாக இருபதாக ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அவர் கூறிய ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி முதல்வர் பினராயி விஜயன்தான். முதல்வர் பினராயி விஜயன்ம் சி.பி.எம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலிவெர்ஸ் சர்ச் (Believers church) மூலம் அமெரிக்காவில் ஃபண்ட்களை கொண்டு சேர்த்துள்ளனர். அதனால்தான் பிலிவெர்ஸ் சர்ச்-க்கு எஃப்.சி.ஆர்.ஏ (பாரின் காண்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட்) ரத்துச் செய்யப்பட்டது.
பிலிவெர்ஸ் சர்ச்சுக்கு நெருக்கமானவர்தான் ஷாஜ் கிரண். மேலும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நெருக்கமானவர் ஷாஜ் கிரண். எனக்கு சிவசங்கர் ஐ.ஏ.எஸ் மூலம்தான் ஷாஜ் கிரண் அறிமுகம் ஆனார். லேண்ட் புரோக்கர் என தன்னைக் கூறிக்கொள்ளும் ஷாஜ் கிரண், பல கம்பெனிகளுக்கு இயக்குநராக உள்ளார். பவர்ஃபுல் மனிதரான ஷாஜ் கிரண் என்னை மனதளவில் தளர்த்த முயன்றார். நான் உயிருக்குப் பயந்துதான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தேன். என் பின்னால் வேறு யாரும் இல்லை" என்றார்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஜ் கிரண், "ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். எடிட் செய்யாத ஆடியோவை நான் விரைவில் வெளியிடுவேன். எனக்கும் முதல்வருக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.
மேலும் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், "முதல்வரையும், அவரின் குடும்பத்தையும் விமர்சிப்பதை லட்சியமாகக்கொண்டு ஸ்வப்னா செயல்படுகிறார். இதன் பின்னால் அரசியல் சதி உள்ளது" என்றார். ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கேரளாவில் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறது.
http://dlvr.it/SRzzzl
http://dlvr.it/SRzzzl