கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில், சட்டவிரோதமாக அணை கட்ட முயன்று வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், கர்நாடகாவிலிருந்து ஒரு சொட்டு காவிரி நீர்கூட வராது என இங்குள்ள விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த அணை கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்தான் மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி வழங்குவதற்காகவே, ஜூன் 17-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இதைத் தமிழக அரசும், தமிழக மக்களும் முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அபயக் குரல் எழுப்புகிறார்.மேக்கேதாட்டூமேக்கேதாட்டூ விவகாரம்: கர்நாடகாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு செய்யவேண்டியவை என்ன?
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், ``காவிரி உரிமைச் சிக்கலில், மத்திய அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், நடுநிலை தவறியும், கர்நாடகத்துக்குப் பக்கச் சாய்வாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க அரசாக இருந்தாலும் அவற்றின் ஓரவஞ்சனைச் செயல்பாட்டைப் பல தடவைப் பார்த்துள்ளோம். சட்டப்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத் தர, இதுவரையிலும் மத்திய அரசு எந்த ஒரு முயற்சியையும் மேற்கொண்டதில்லை. மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி ஆணையமும், கர்நாடகத்துக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் 17.6.2022 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாகவும், அதில் கர்நாடகத்தின் மேக்கேதாட்டூ அணைத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். இந்தத் தகவல் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல் உள்ளது. ஜூன் 17-ம் தேதி காவிரி ஆணைய கூட்டம் நடைபெற்றால், மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி வழங்கப்படும். இதை முன்கூட்டியே, தமிழக அரசும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் முறியடிக்க வேண்டும்.மேட்டூர் அணைமேக்கேதாட்டூ அணை: `தீர்மானம் மட்டும் போதாது, இதைச் செய்ய வேண்டும்!' - அரசுக்கு மணியரசன் கோரிக்கை
கடந்த காலங்களில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டங்களில் மேக்கேதாட்டூ அணை அனுமதி குறித்து, விவாதிப்பதற்கான பொருள், நிகழ்வு நிரலில் சேர்த்த போதெல்லாம் தமிழ்நாடு அரசுப் பிரதிநிதிகள் அதை எதிர்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது. இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய, மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சார்பில் இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடர்பான எந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் ``கட்டற்ற அதிகாரம்” இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும் எஸ்.கே.ஹல்தர் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில்தான் 17.6.2022 அன்று மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேக்கேதாட்டூ அணை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே 7.2.2022 அன்று மக்களவையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேக்கேதாட்டூ அணைக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்று கேட்டதற்கு, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் - வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் - வனத்துறை அனுமதி கொடுத்து விடும் என்று உறுதி அளித்தார். அதை அப்போதே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டித்தோம்.பெ.மணியரசன்நிலநடுக்க பிரதேசத்தில் மேக்கேதாட்டூ அணை!
கட்டுவதற்குத் தடைபோடும் கர்நாடக நிபுணர்கள்!
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளபடி தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை! உச்ச நீதிமன்றம் 2018-ல் அளித்த தீர்ப்பில் புதிய அணைகள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை மேலாண்மை ஆணையத்துக்கு அளிக்கவில்லை. அத்தீர்ப்பின்படி தண்ணீர்ப் பகிர்வு அதிகாரம் பெற்றுள்ள ஆணையம் இதுவரை ஒரு தடவை கூட, கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தந்ததில்லை.
தண்ணீர்ப் பகிர்வு பற்றி முடிவு எடுப்பதிலும் கூட, ஜனநாயகமற்ற முறையில் மத்திய அரசின் ஒருதலைச்சார்புக்கும், கர்நாடகப் பக்கச் சாய்வுக்கும் ஏற்ற வகையில்தான் காவிரி ஆணையமே உருவாக்கப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் மொத்தம் 9 உறுப்பினர்கள். நிர்வாகக் குழுவின் தலைவராக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் இருக்கிறார். மேலும் 4 உறுப்பினர்கள் மத்திய அரசு சார்பான அதிகாரிகள். எஞ்சிய நால்வர் தமிழ்நாடு + கர்நாடகம் + கேரளம் + புதுச்சேரி மாநிலங்களுக்குத் தலா ஒருவர் வீதம் 4 பேர். ஆக மொத்தம் 9 பேர். இவர்களில் 6 பேர் பங்கேற்று, ஒரு தீர்மானத்தை 6 பேரும் ஆதரித்தால் அது செயலுக்கு வந்துவிடும் என்கிறது அந்த அமைப்பின் விதிமுறைகள். காவிரி ஆணையத்தின் தலைவர், மத்திய அரசு சார்பான அதிகாரிகள் மற்றும் கர்நாடக பிரதிநிதி.. ஆகிய 6 நபர்கள் வாக்களித்தாலே, கர்நாடகாவுக்கு சாதகமான தீர்மானம் நிறைவேறிவிடும். மத்திய அரசு இதைத்தான் செய்யத் துடிக்கிறது.காவிரி ஆறுமேக்கேதாட்டூ அணை விவகாரம்: ``திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கச்சேரி நடத்துகின்றன!" - மணியரசன்
ஏற்கெனவே ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இதே எஸ்.கே.ஹல்தர் இருந்தபோதுதான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டூ அணைக்கு விரிவான திட்ட அறிக்கை கோரி, பெற்று, அதற்கு அனுமதி வழங்கியதுடன் அதைக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஏற்புக்காக அனுப்பி வைத்தார். இப்போது அதே ஹல்தர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மோடி அரசால் அமர்த்தப்பட்டு, சட்டத்துக்குப் புறம்பாக மேக்கேதாட்டூ அணைக்கு அனுமதி வழங்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கை களுக்கு உரியவாறு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டி, 17.6.2022 அன்று ஆணையக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும், புதுச்சேரியும் கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க வேண்டும்.அணை
மத்திய அரசின் தமிழ்நாடு விரோதப் போக்கைக் கண்டித்தும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற, அதேசமயம் நடுநிலையுடன் செயல்படக்கூடிய தலைவரைக் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி காப்பு நாள் என்ற பெயரில், குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை வெகுமக்கள் போராட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/SS5fZx
http://dlvr.it/SS5fZx