காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு அதி தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, அணை தொடர்பாக முதற்கட்ட பணிகளைத் தொடங்க, பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது ஆளும் பா.ஜ.க அரசு. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக மேக்கேதாட்டூ அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை விவகாரத்தில் மத்திய அரசு எந்த விதமான அனுமதியும் தரக் கூடாது என்று வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா சட்டமன்றம்
அதேபோல, கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் மேக்கேதாட்டூவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல, மாநில உரிமை பேசும் அமைப்புகளும் மேக்கேதாட்டூவில் அணைக் கட்டியே ஆகவேண்டும் என்று கூறிவருகிறது.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.எஸ்.கே.ஹல்தர்
ஆணையத் தலைவரின் இந்த கருத்து, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிராக இருப்பதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
எனவே, "மேக்கேதாட்டூ அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறலாகும். ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேக்கேதாட்டூ குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். மேக்கேதாட்டூ குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.ஸ்டாலின் துரைமுருகன்
இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ``காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேக்கேதாட்டூ குறித்து விவாதிப்பதற்குத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டப்படும்" என்று கருத்துத் தெரிவித்தார். இதற்கிடையே, "வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டூ விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்களை நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் தமிழ்நாடு அரசு மேகேதாட்டூ திட்டத்துக்கு எதிராகப் பேசவில்லை. தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மேகேதாட்டூ திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என எதிர்க்கிறது. தமிழ்நாடு அரசு காவிரியை வைத்து அரசியல் செய்கிறது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம்தான் முடிவெடுக்கும். எனவே, இதில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. ஆணையத்தின் சுதந்திரத்தில் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆணையம் தனது அதிகாரத்தை மீறி செயல்படவில்லை" என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் கருத்து தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வக்காலத்து வாங்குவது போன்றே உள்ளது. தமிழ்நாடு அரசு
ஆனால், அணை விவகாரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளபோது, ஆணையக் கூட்டத்தில், அதுகுறித்து பேசுவது, நியாயமே இல்லை. இதனைதான் முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர். இதுகுறித்து முடிவு எடுக்க மத்திய அரசு அவகாசம் வேண்டும். எனவேதான், ஆணையக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டூ குறித்து ஆலோசிக்கப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டால், தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும்" என்றனர்.
http://dlvr.it/SSLmQN
http://dlvr.it/SSLmQN