பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவில் எழுந்திருக்கும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நான்காவது நாளாக தன்னுடைய ஆதரவாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மைத்ரேயன், எம் எல் ஏ மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தோடு நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான தம்பிதுரை சந்தித்தார். நேற்று மாலை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசிய பிறகு தம்பிதுரை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கட்சியை வலுவாக நடத்திச் செல்வது தொடர்பாகவும் அதிமுக ஆட்சிக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இல்லாமல் தனியாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது எனவும், அவ்வாறு நிறைவேற்றினால், அதிமுக அழிவுப்பாதையை நோக்கி அழைத்து செல்லும் எனவும் வைத்திலிங்கம் எச்சரித்தார்.
'ஒற்றைத் தலைமை கோரிக்கை தவறில்லை'
வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு , செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் தொடர்பாக பொன்னையன் , வைகை செல்வன், ஆர்.பி .உதயகுமார், செம்மலை ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ''ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மை இல்லை. ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும் , பொதுக்குழுவுமே முடிவு செய்யும். 100க்கு ஆயிரம் சதவீதம் பொதுக்குழு திட்டமிட்டபடி 23 ம் தேதி நடக்கும்.
எல்லா கட்சியிலும் பிரச்சனைகள் எழுவது இயல்புதான். ஒற்றைத் தலைமை கோரிக்கையை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அதுகுறித்த முடிவை பொதுக்குழுதான் எடுக்கும். பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவைப்பட்டால் அழைப்பு விடுக்கப்படும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் நாளை இறுதி வடிவம் பெறும்" என்றார். தொடர்புடைய செய்தி: 'அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை' - அண்ணாமலை
http://dlvr.it/SSMqQc
http://dlvr.it/SSMqQc