இந்தியாவில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு என எக்கச்சக்கமான இடங்கள் உள்ளன. ஆனால் அந்த டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கு எந்தெந்த சீசனில் சென்றால் நன்றாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். மேலும் மேம்போக்காக சில இடங்கள் தெரிந்தாலும் ஒரு மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டால் சுற்றியிருக்க பகுதிகளில் எங்கெல்லாம் விசிட் செய்யலாம் என்பதும் தெரியாமல் இருக்கும்.
ஆகவே தென்னிந்தியாவில் தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் இந்த சீசனில் எந்தெந்த பகுதிகளுக்கெல்லாம் செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1) தமிழ்நாடு: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 முதல் 7 நாட்கள் வரை சுற்றிப்பார்க்கலாம். குறிப்பாக கோவை, நீலகிரியில்.
நீலகிரியில் உள்ள கோத்தகிரி, மசினகுடி, ஊட்டி ஆகியவை மிகவும் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட். ஊட்டிக்கு குடும்பத்துடனும், மசினகுடி, கோத்தகிரிக்கு நண்பர்களுடன் பைக் ரைடில் சென்றால் சுவாரஸ்யமாக இருக்கும். டாய் ட்ரெயின் ரைட், அவலாஞ்சி, எமரால்டு & ஊட்டி லேக், தொட்டபெட்டா, கல்ஹட்டி, பைகாரா ஃபால்ஸ் ஆகியவை ஊட்டியின் ஐடியல் தளங்கள்.
2) புதுச்சேரி: ஓரிரு நாள் விடுமுறைக்கு ஏற்ற இடம் பாண்டிச்சேரி. கண்ணைக்கவரும் வண்ணத்தில் இருக்கும் புதுச்சேரியின் சாலைகள், பிரஞ்சு காலத்து கட்டடங்கள், பாரடைஸ் பீச், ராக் பீச், அமைதியான ஆரோவில் சூழல் ஆகியவை இங்கு பிரசித்தம். புதுச்சேரியில் வகை வகையான பிரஞ்சு உணவுகளை ருசிக்கலாம்.
3) கேரளா: மூனார், இடுக்கியில் உள்ள வாகமன், வயநாடு, ஆலப்புழா ஆகிய பகுதிகள் பருவமழை சீசனில் செல்ல வேண்டிய முக்கிய தளங்கள். அதில் இந்தியாவின் வெனிஸ் என அழைக்கப்படும் ஆலப்புழா குடும்பமாக, நண்பர்களுடன் சென்று ஓய்வெடுக்க நினைப்போருக்கு சிறந்த பகுதி.
ரிலாக்ஸாக இருக்க ஏதுவான ஆலப்புழாவில் கமகமக்கும் கேரளத்து உணவும் ரம்மியான அழகழகான இயற்கை எழிலை கண்முன் காணலாம். போட் ஹவுஸ் இருந்தபடியே கிடைக்கும் ஒரு பயணம் அத்தனை அலாதியானதாக இருக்கும் என்பதில் ஐயப்பாடில்லை.
4) கர்நாடகா: ஹம்பி, சிக்மங்களூர், குடகு (கூர்க்) ஆகிய இடங்கள் மழை சீசனுக்கு ஏற்ற பகுதி. உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்று என யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது ஹம்பி. இங்கிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால வழிபாட்டு தலங்கள் பிரபலம்.
குடகு முழுக்க முழுக்க மலைப்பகுதியைச் சார்ந்தது. மைசூரை அடுத்து இருக்கும் மடிகெரி என்ற பகுதி ஜீப், கார், பைக்கிலும் சென்று சைட் சீயிங் செய்யலாம். காஃபி மற்றும் ஹோம் மேட் சாக்லேட்டுகள் இங்கு ஃபேமஸ்.
- ஜனனி கோவிந்தன்
ALSO READ:
பெங்களூரு டூ ஊட்டிக்கு செல்லும் வழியில் என்னவெல்லாம் காணலாம்? - இது உங்களுக்கு உதவும்!
http://dlvr.it/SSQStH