வழிபாட்டு தலங்களுக்கு பிரசித்தி பெற்ற நாடு இந்தியா. பன்முகத் தன்மைக்கு பெயர் பெற்ற நம் நாட்டில் பல விசித்திரமான, விநோதமான இடங்களும், தலங்களுமே நிறைந்திருக்கின்றன.
அந்த வகையில், குஷ்புவுக்கு, அமிதாப் பச்சனுக்கு, பிரதமர் மோடிக்கு கூட கோவில் கட்டப்பட்டுள்ளது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் புல்லட் பைக் ஒன்றை கடவுளாகவே 30 ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். அப்படிப்பட்ட கோவிலை பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
புல்லட் பைக் என்றாலே இளைஞர்களிடையே ஒரு புத்துணர்ச்சி உருவாவது வழக்கம். ஏனெனில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இந்த புல்லட் வகை பைக்குகளை வாங்குவதற்காக பலரும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட புல்லட் பைக்கை கடவுளாகவே மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதற்கு புல்லட் பாபா கோவில் என்ற பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலி நகருக்கு அருகே உள்ளது சோட்டிலா கிராமம். அங்குதான் இந்த புல்லட் பாபா கோவில் இருக்கிறது. வெகு தொலைவில் இருந்தும் இந்த புல்லட் பாபா கோவிலுக்கு வந்து மக்கள் வழிபட்டு செல்கிறார்களாம்.
புல்லட் பாபா கோவிலின் பின்னணியும், சுவாரஸ்யமும்:
‘ஓம் பன்னா’ என்ற நபர் ஒருவர் 1988ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பாலி நகரின் சான்டேராவ் அருகே உள்ள பாங்டி என்ற இடத்திலிருந்து சோட்டிலா கிராமத்திற்கு தன்னுடைய 350 CC புல்லட் பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கி ஓம் பன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அவரது புல்லட் பைக்கும் அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் விழுந்திருக்கிறது.
தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், ஓம் பன்னாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, பள்ளத்தில் கிடந்த புல்லட் பைக்கை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மறுநாள் காலை பார்த்தபோது புல்லட் வண்டி ஸ்டேஷனில் இல்லாததால் அதிர்ச்சியுற்ற போலீசார், அதனை தேடியிருக்கிறார். ஆனால் விபத்து நடந்த அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எவரோ வண்டியை திருடி அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள் என எண்ணி, புல்லட் வண்டியில் நிரப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்துவிட்டு, அதனை சங்கிலி போட்டு போலீசார் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாளும் வண்டி காவல் நிலையத்தில் இருந்து மறைந்து, ஓம் பன்னா இறந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக இந்த சம்பவங்கள் தொடரவே, வேறு ஏதோ ஆற்றல் இருப்பதாக உணர்ந்த போலீசார், புல்லட் பைக்கை விபத்து நடந்த இடத்திலேயே விட்டிருக்கிறார்கள். இது குறித்த விஷயம் அறிந்த சோட்டிலா கிராமத்து மக்கள், அதனை வழிபட தொடங்கினர்.
அதனையடுத்து அந்த புல்லட் பைக்கை நிறுவி, அதன் பக்கத்தில் ஓம் பன்னாவின் புகைப்படத்தையும் வைத்து வணங்கத் தொடங்கி, இன்றுவரை வழிபட்டு வருகிறார்களாம். புல்லட் பாபா கோவில் என அழைக்கப்பட்டாலும், அதன் அசல் பெயராக 'Om Banna Dham'என்றே வைக்கப்பட்டிருக்கிறது. வழிபாடு தொடங்கப்பட்டதிலிருந்தே, அவ்வழியே பயணிக்கும் மக்கள் புல்லட் பாபா கோவிலுக்கு வந்து சென்றுவிட்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்களாம்.
http://dlvr.it/SV22hh
http://dlvr.it/SV22hh