ஜம்மு காஷ்மீரில், ரஜோரியிலுள்ள இந்திய ராணுவம் முகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர்
இந்த நிலையில் உயிரிழந்த 3 இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்திருக்கிறது.
உயிரிழந்த தமிழ்நாட்டு வீரர் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என தெரியவந்திருக்கும் நிலையில், அவரின் வீர மரணத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.ஸ்டாலின்
இதுகுறித்து ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், ``ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படைப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு, மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீரமரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது. இன்னுயிர் ஈந்து நாட்டைக் காத்த நாயகர்களுக்கு என் வீரவணக்கம்! அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்!" என ட்வீட் செய்திருக்கிறார்.அரசு அறிக்கை
மேலும் உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்தாருக்கு நிதியுதவியும் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், ``தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன். வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமணன் அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு இருபது லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில், ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது எனக் கூறப்படும் நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா இருப்பதாக பாதுகாப்பு படையினர் கருத்துதெரிவித்திருக்கின்றனர்.
http://dlvr.it/SWVClW
http://dlvr.it/SWVClW