`கழக்காத்தா சந்தன மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ...’ என்ற பாடலைப் பாடிய நஞ்சியம்மாவுக்கு, அப்பாடல் சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் நஞ்சியம்மா, சுமார் 15 ஆண்டுகளாக `ஆசாத் கலா சமிதி' என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழும் மலையாளமும் கலந்த இருளர் பழங்குடியினர் பாடல்களைப் பாடி வருகின்றார். நஞ்சியம்மா"சினிமாவில் எனது குரலை ஒலிக்க வைத்தது சச்சி சார்தான்!"- தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா நெகிழ்ச்சி
சென்ற ஆண்டு, தமிழ்நாடு - கேரள எல்லையில் இருக்கும் ஆனைகட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறந்தபோது, ஆதிவாசி பெண்கள் அமைப்பான `தாய்க்குலம்' அமைப்புடன் நஞ்சியம்மா களத்தில் இறங்கி, மதுக்கடைத் திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட, முடிவில் மதுபானக்கடை அகற்றப்பட்டது.
இவ்வாறு பொது நலத்திற்காகக் குரல்கொடுக்கும், பழங்குடியின கலாச்சார விழுதுகளை பாதுகாக்கும் நஞ்சியம்மாவின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன என்பது, சோகம்.
இது குறித்து நஞ்சியம்மா கூறும்போது,``அட்டப்பாடியில் அகளி என்ற ஊரில் என் குடும்பத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. `அமைதிப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் `சைலன்ட் வேலி’ சுற்றுப்புறச்சூழலின் பாதுகாப்பிற்கு பெயர் பெற்றது. இங்கே தேசிய பூங்கா உள்ளது. அதனால் சுற்றுச்சூழலியல் சுற்றுலாவுக்காக அதிகம் பேர் வருவார்கள்.
இந்நிலையில், பூங்காவிற்கு வருகை தரும் பயணிகள் தங்குவதற்காக விடுதிகள், ரிசார்ட்டுகள் அகளி பகுதியில் செயல்படுகின்றன. நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது அகளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், அதை பெற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஜோசப் குரியன், மேத்யூ என்ற இருவரும் சேர்ந்து, எனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளை இயந்திரம் வைத்து அகற்றியிருக்கிறார்கள். நிலம் - சித்திரிப்பு படம்
இது பற்றிய எனது புகாரை, காவல் நிலையத்தில் பெற்றுக்கொள்ள மறுத்தனர். இந்த நிலத்தின் உரிமை குறித்த வழக்கு, மன்னார்காடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இந்த நிலத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. இருந்தாலும் அந்த இருவரும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த யாரும் தயார் இல்லை.
இந்த நிலம் எனது மாமனார் நாகமூப்பனுக்குச் சொந்தமானது. அவர், இப்பகுதி பழங்குடி மக்களுக்குத் தலைவராக இருந்தவர். பழைய ஆவணங்களை ஆய்வு செய்து, பழங்குடியினர் நில சட்டத்தின் கீழ், இந்த நிலம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என கேரள அரசின் வருமானத்துறை அதிகாரிகள் அறிவித்தார்கள். 2020-ம் ஆண்டு வரை இந்த 4 ஏக்கர் நிலம் எங்கள் பயன்பாட்டில் இருந்தது.
இதை எதிர்த்து ஜோசப் குரியன், மேத்யூ ஆகியோர், இந்த நிலம் தங்களுக்கானது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க,``நிலத்திற்காக உரிமை இருக்கிறது என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது. இந்தப் பிரச்னையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, இந்த நிலத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடையையும் விதித்தது.நஞ்சியம்மாகலக்கும் ‘கலகாத்தா’... விருதை வென்ற ‘ஆட்டுக்கார’ நஞ்சம்மா!
இருந்தாலும் எங்களது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் என்று நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் தேசிய விருது பெற்ற 62 வயதான நஞ்சியம்மா.
நஞ்சியம்மாவின் நில ஆக்கிரமிப்பு விவகாரம், கேரள சட்டசபையில் எதிரொலித்தது. சீக்கிரம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவுறுத்தியதன் பேரில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் நஞ்சியம்மாவை அழைத்துப் பேசியுள்ளார்.
- பிஸ்மி பரிணாமன்
http://dlvr.it/SYK8vP
http://dlvr.it/SYK8vP