கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ஊர்வலங்கள் நடத்தினர். இந்த ஊர்வலத்தின்போது பல்வேறு மாநிலங்களில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்தது. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கர்கோன் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான பொதுச் சொத்துகள் சேதமடைந்தன.
இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சிறுவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்து, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு மாநில பா.ஜ.க அரசு இடித்து அகற்றியது.வீடுகள் இடிப்பு
இந்த நிலையில், 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன், ராம நவமியின்போது தனது வீட்டின் சொத்துகளை சேதப்படுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, வன்முறையின்போது சிறுவன் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் சொத்துக்காக, ரூ2.9 லட்சம் அபராதம் செலுத்த அந்த சிறுவனுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறுவனின் தந்தை, கலு கானும் ரூ.4.8 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உரிமைகோரல் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம், ``என் மகன் சிறுவன். கலவரம் நடந்தபோது நாங்கள் அச்சத்தால் வீட்டில் இருந்தோம். என் மகன் தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால், இப்போது எங்களுக்கு பெரும் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். காவல்துறையினர் என் மகனைக் கைதுசெய்வார்களோ என்ற அச்சத்தில் அவன் நடுங்கிக்கொண்டிருக்கிறான்" எனத் தெரிவித்திருக்கிறார்.போலீஸ்
மேலும், இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சிறுவனின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் செப்டம்பர் 12-ம் தேதி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ``ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதை தீர்ப்பாயம் சட்டத்தின்படி பரிசீலித்து முடிவு செய்யும்" என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அஷ்ஹர் அலி வார்சி செய்தியாளர்களிடம், ``தீர்ப்பாயம் சட்டத்தின் நடைமுறைகளைப் பயன்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்கிறது. சிறுவன் தீர்ப்பாயத்தில் தன் ஆட்சேபனையை தாக்கல் செய்தபோது, சில தெளிவற்ற காரணங்களைக் கூறி அது நிராகரிக்கப்பட்டது. வன்முறையில் சிறுவனின் பங்கு குறித்து எந்த விசாரணையும் இல்லாமல் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பிருக்கிறது. அதைவிட முக்கியமாக, உரிமைகோரல் தீர்ப்பாயம் இன்னும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படாத சிறுவனுக்கும், அவன் தந்தைக்கும் அபராதம் விதித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.காங்கிரஸ்
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா, ``பா.ஜ.க-வின் விரிவுபடுத்தப்பட்ட மற்றொரு பிரிவைப் போல் இந்த தீர்ப்பாயம் செயல்படுகிறது. 12 வயது சிறுவனுக்கு எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், ``முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது... இப்போது அவர்கள் குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை. மத்தியப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் 12 வயது குழந்தை தண்டிக்கப்பட்டிருக்கிறது. சிறார் நீதிச் சட்டம், ஒரு குழந்தை எந்த குற்ற நோக்கத்திற்காகவும் குற்றவாளியாக இருக்காது என்று கூறுகிறது. அரசு என்ன செய்யப்போகிறது?" எனப் பதிவிட்டிருக்கிறார்.அசாதுதீன் ஒவைசி
உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலும், போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் அல்லது வன்முறைகள் ஆகியவற்றின்போது, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்தால் இழப்பீடு பெற மாநிலத்தை அனுமதிக்கும் 'பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு மற்றும் மீட்புச் சட்டம்' இயற்றப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், 15 நாள்களுக்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் 6 சதவிகித வட்டி செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களால் இழப்பீடு வழங்க முடியாத பட்சத்தில் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. மேலும், தீர்ப்பாயத்திற்கு சிவில் நீதிமன்றத்தைப் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மத்தியப்பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்! - 20 வீடுகள் எரிப்பு; ஊரடங்கு அமல்
http://dlvr.it/SbP8Bc