கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் வாக்குறுதிகளை ‘அள்ளி வீசி’ வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, ``வரும் தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம்" என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். மேலும், ``எதை வேண்டுமானாலும் செய்து கர்நாடகத்தில், பா.ஜ.க ஆட்சியமைக்கும்’’ எனவும் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.
யார் இந்த ரமேஷ் ஜார்கிஹோலி?
பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலிருந்த ரமேஷ் ஜார்கிஹோலி, 2019-ல் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க ஆட்சியமைத்தபோது, காங்கிரஸ் கட்சியை உதறிவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். எடியூரப்பா தலைமையிலான அரசில், நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டதும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.ரமேஷ் ஜார்கிஹோலி
சர்ச்சைப் பேச்சு...
தற்போது, பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி, பா.ஜ.க-வுக்கு வாக்குச் சேகரிக்கும் பணியின்போது, அருகிலுள்ள தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பல்கரை விமர்சித்துப் பேசினார். அப்போது அவர், ``லட்சுமி ஹெப்பல்கர் தொகுதி வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்கள் விநியோகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர் வாக்காளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குக்கர், மிக்ஸியைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவர் வேறு பரிசுகள் கொடுத்தாலும் அவை, 3,000 ரூபாயைத் தாண்டாது. ஆனால், நாங்கள் (பா.ஜ.க) உங்கள் ஒவ்வொருவருக்கும் (வாக்காளர்களுக்கு) 6,000 ரூபாய் கொடுப்போம்; கொடுக்கவில்லை எனில் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என சர்ச்சையாகப் பேசியிருக்கிறார்.
மேலும், அந்தப் பகுதியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், ‘‘வரும் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் ஆட்சி அமைக்கும். பா.ஜ.க ஆட்சியமைக்க நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம்’’ எனப் பேசியிருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்
ரமேஷ் ஜார்கிஹோலியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்ததுடன், ``ரமேஷ் ஜார்கிஹோலி கோகாக் தொகுதியில், ஓர் ஓட்டுக்கு, 500 முதல் 2,000 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது, 6,000 ரூபாய் தருவதாகப் பேசியிருக்கிறார். வரும் தேர்தலுக்கு அவர் தொகுதியில், ரூ.50 கோடி வரையில் செலவு செய்வார். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையினர் அவரது சமீபத்திய பேச்சுகள் குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க-வின் ஆட்சி நடப்பதால், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படும் மாநில தேர்தல் ஆணையம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனத் தெரிவித்திருக்கின்றனர். ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சு, பா.ஜ.க தலைவர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.ரமேஷ் ஜார்கிஹோலி
‘ஆபரேஷன் லோட்டஸ்‘?
மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, அரசியல் விமர்சகர்களிடம் இது தொடர்பாகப் பேசினோம். ‘‘ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சின் வாயிலாக, பா.ஜ.க வரும் தேர்தலில் பணம், பரிசுகள் கொடுத்து வாக்காளர்களைக் கவர முயலப்போவது தெளிவாகத் தெரிகிறது. மேலும், `பா.ஜ.க ஆட்சியமைக்க நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம்' எனவும் பேசியிருக்கிறார். இதனால், பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், கடந்த முறையைப்போல ‘ஆபரேஷன் லோட்டஸ்’ நிகழ்த்தி, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசி, ஆட்சியமைக்க திட்டமிட்டிருப்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது’’ என்றனர்.
‘மீண்டும் ஆபரேஷன் லோட்டஸா...?’ என, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் அச்சத்தில் இருப்பதுடன், என்ன ஆனாலும் வேட்பாளர்கள் விலை போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.``முன்பு ஆபரேஷன் தாமரை; இப்போது ஆபரேஷன் வோட்டர்” - கர்நாடக முதல்வர் மீது காங்கிரஸ் புகார்
http://dlvr.it/ShPjcy