சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ள இரண்டு பெவிலியன் ஸ்டேன்ட்களில், ஒன்றிற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படவிருக்கிறது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், “கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக மட்டும் இல்லாமல் முதன் முதலில் மைதானம் கட்ட 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதும் கலைஞர் கருணாநிதி தான்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அண்ணா பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு பெவிலியன்களும் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதன் திறப்பு விழா, வருகின்ற 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
மைதானம் கட்ட தொடங்கிய நேரத்தில் நிதியுதவி அளித்து பெரிதும் பங்காற்றியவர் கலைஞர்!
இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு ஸ்டான்ட்டிற்கு மட்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளது. கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி முதன்முதலில் சேப்பாக்கம் மைதானம் கட்ட துவங்கிய நேரத்தில், 15 லட்சம் நிதியாக வழங்கினார் அவர். எனவே தான் அவர் பெயரை சூட்டியுள்ளோம்.
தமிழகத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் குறைவாக உள்ளனர்! அதற்கான தேர்வு நடைபெற்றுவருகிறது!
தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பையில் மிக அருகில் சென்று தோல்வி அடைந்துள்ளது. இதனை மாற்றி தமிழ்நாடு கிரிக்கெட்டை மேலும் முன்னேற்றும் நோக்கில் புதிய பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளோம். தமிழகத்தில் வேகப்பந்து வீரர்கள் குறைவாக உள்ளதால் அவர்களை கண்டறிவதற்கான தேர்வுகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. ஏராளமான நபர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.
விரைவில் மகளிருக்கான கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்படும்!
தமிழகத்தில் முன்பை விட தற்போது பெரிய அளவில் மகளிர் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அதிகரித்திருப்பதை ஊக்குவிக்கும் வகையில், நிச்சயம் அவர்களுக்கும் தனியாக கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்படும்.
எப்போதும் மக்கள் வந்துசெல்லும் வகையில் மைதானத்தில் அருங்காட்சியகம் இடம்பெறும்!
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக இரண்டு அருங்காட்சியகம் அமைக்கவும், மைதானத்தை பொதுமக்கள் வந்து சுற்றி பார்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மைதானம் என்றால் பெரிதாக மக்கள் நினைத்து வரும் நிலையில், வெளிநாடுகளை போலவே போட்டி நடைபெறாத நேரங்களில் மைதானத்தை சுற்றி பார்க்கும் வசதி, இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளும் போட்டியை நேரில் பார்க்க கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
http://dlvr.it/Skrqys
http://dlvr.it/Skrqys