விராட் கோலி டெஸ்ட்டில் சதத்தை பதிவு செய்ய தடுமாறி வந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான4ஆவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 28ஆவது டெஸ்ட் சதத்தை கொண்டுவந்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் முன் அஸ்வின் அவருடன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலின் இடைப்பட்ட காலங்களில், கிரிக்கெட் விளையாடாமல் போன நிலையில், தன்னுடைய பேட்டிங் ஃபார்மை இழந்த விராட் கோலி, தொடர்ந்து ஒருநாள், டி20, டெஸ்ட் வடிவங்களில் சதங்களையே பதிவு செய்யாமல் தடுமாறி வந்தார். கிட்டத்தட்ட 3 வருட கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு, 2022ஆம் ஆண்டு ஆசியகோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தையும் 71ஆவது சர்வதேச சதத்தையும் எடுத்தார் விராட் கோலி.
71ஆவது சதத்திற்கு பிறகு அடுத்தடுத்த 2 ஒருநாள் தொடர்களில் 72, 73, 74ஆவது சதங்கள் எடுத்து, தான் ஏன் எந்த காலத்திற்கும் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து காட்டினார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பல் ஆட்டத்தையே வெளிக்காட்டி வந்த விராட் கோலி, விரைவில் டெஸ்ட்டிலும் சதத்தை பதிவுசெய்ய வேண்டும் என்ற ஆசை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்டது.
முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி!
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சோபிக்க தவறிய விராட் கோலி, மீண்டும் விமர்சனத்திற்குள்ளானார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் 44 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும், ஒரு சர்ச்சைக்குரிய விக்கெட் மூலம் வெளியேறினார் கோலி. ஒருவேளை அந்த போட்டியில் விராட் கோலி அப்படி வெளியேறாமல் இருந்திருந்தால், அவர் சதத்தை எடுத்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது.
3.5 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் சதத்தை கொண்டுவந்த விராட் கோலி!
இப்படியாக கிட்டத்தட்ட 4 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சதங்களையே பதிவுசெய்ய முடியாமல் தடுமாறி வந்த விராட் கோலி, அகமதாபாத்தில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 28ஆவது டெஸ்ட் சதத்தை எடுத்து அசத்தினார். 100, 150 என கடந்து ஆடிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
”நான் இதைத்தான் விராட் கோலியிடம் பேசினேன்”-அஸ்வின்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி சமன் செய்யப்பட்டு, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. 4ஆவது போட்டியின் முடிவுக்கு பிறகு ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸில் பேசியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், 4ஆவது போட்டிக்கு முன்னதாக விராட் கோலியிடம் தான் பேசியதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
விராட் கோலி குறித்து பேசிய அஸ்வின், “நான் விராட் கோலி இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதாகவே உணர்ந்தேன். அவர் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுகிறார். ஆனால் 30 ரன்கள், 40 ரன்கள் என நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் துரதிஷ்டவசமாக வெளியேறினார். அப்போது நான் விராட் கோலியிடம் பேச நினைத்தேன். நாங்கள் பொதுவாக இப்படி பேசிக்கொண்டதில்லை. ஆனால் இந்த நேரத்தில் அவரிடம் எனக்கு பேச வேண்டும் போல் இருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஒருவீரர் நன்றாக விளையாடியும் தோற்றுப்போகிறார் என்றால், அவரது தோள்களில் கைவைத்து நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று கூறவேண்டும். இந்த அனுகுமுறை தான் என் வாழ்க்கையில் என்னை எனக்கே சில நேரங்களில் புரியவைத்தது. அதனால் தான் விராட் கோலியிடம், நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள், கூடுதலான நேரம் இன்னும் களத்தில் இருக்க பாருங்கள், நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்” என்று கூறியதாக தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் இந்தியாவிற்கு கிடைத்த பிளஸ் பாய்ண்டுகள்!
மேலும், “பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடிவரும் எனக்கு, இந்திய அணியை பொறுத்தவரையில் விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் சிறப்பாக விளையாடுவது முக்கியமான ஒன்றாகும். அவர்கள் இருவரும் எங்கள் அணியின் சிறந்த வீரர்கள் ஆவர். கோலி மற்றும் புஜாரா இருவரும் இந்தியாவிற்கு கிடைத்த பிளஸ் பாய்ண்டுகள்.
இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், கோலி மற்றும் புஜாராவின் பேட்டில் இருந்து ரன்கள் வரவேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடுவதை அமர்ந்து பார்க்க நான் எதையும் செய்வேன்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
http://dlvr.it/SkyxwJ
http://dlvr.it/SkyxwJ