சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) ஆகியன திவாலாகின. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 3 வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியதை அடுத்து அவ்வங்கியை, போட்டி நிறுவனமான UBS வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு, ’தைரியமான நட்சத்திரம்’ என்ற விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. அப்போது பெண்கள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு சில லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துப் பேசிய அவர், ”எவ்வளவு பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனாலும் நமக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.
நான் முதலீடு செய்த பெரும் பகுதி பணத்தை சிலிக்கான் வேலி வங்கியால் இழந்துவிட்டேன். அதற்காக நான் நஷ்டம் அடைந்து ஓடி விடுவேன் என்று அர்த்தம் அல்ல. எனக்கு மார்பக புற்றுநோய் வந்தபோது எனது மார்பகங்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்களும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டபோது நான் தாமதம் இன்றி எனது மார்பகங்களில் ஒன்றை அகற்றினேன். ஆனால் அது பலருக்கு தெரியாது. எனவேதான் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதனால் கலந்துகொள்வேன். என்னால் முடிந்த நிதி உதவி செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SlLD3g
http://dlvr.it/SlLD3g