இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ள 1954ல் சிறப்புத் திருமணச் சட்டம் உருவாக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும், அவர்களுடைய மதத்திற்குள் திருமணம் செய்துகொள்ள தனித்தனி சட்டங்கள் உள்ளன.
இரு வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்கூட, இந்து திருமணச் சட்டத்தில் முறைப்படி திருமணம் முடித்து பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய மதத்தையும், பெயரையும் மாற்றிக்கொள்ளாமல் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது சிறப்பு திருமணச் சட்டத்தில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள முடியும். சிறப்பு திருமண சட்டம்
இந்த சட்டம் குறித்த விவரங்களை, வழக்கறிஞர் ஹேமாவதி நம்முடன் பகிர்கிறார். “சிறப்புத் திருமணச் சட்டம் 1954 பிரிவு 4ன் படி, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டும். இருவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இந்தியர்களாக இருக்க வேண்டும், உறவு முறையில் தடை செய்யப்பட்ட உறவு முறைக்குள் இருக்கக்கூடாது. இரண்டு நபர்களும் திருமணம் ஆகாதவர்களாக இருக்கவேண்டும். ஏற்கெனவே திருமணமாகி இருந்தால், சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.சிறப்புத் திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அதாவது 30 நாட்கள் முன்பு இருவரும் திருமணம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பில் ஆண், பெண் இருவரின் திருமண நிலை, வேலை, வயது, வாழ்விடம், நிலையான முகவரி, தற்போதைய முகவரி ஆகிய விவரங்களுடன் அவர்களின் புகைப்படத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் திருமண பதிவு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில், பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரிகள் வைப்பார்கள். திருமணப் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவரில் யாராவது ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றொருவர் குறித்து அவர் வாழும் பகுதிக்கு உட்பட்ட திருமணப் பதிவு அலுவலக அதிகாரி NOC தர வேண்டும். இது பிரிவு 5ன் படி கட்டாயமான ஒன்றாகும். இதில் பிரிவு 4 கூறும் ஆட்சேபனைகள் இருந்தால் மட்டுமே திருமணம் தடைபடும். வழக்கறிஞர் ஹேமாவதி
கடந்த 2021ல் அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதி விவேக் சவூரி, ``திருமணம் செய்வதற்கு முன், 30 நாட்கள் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது. இந்தியாவில், திருமண வயதை அடைந்த ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பப்பட்ட துணையை எந்த நிபந்தனையும் இல்லாமல் தேர்ந்தெடுப்பதை இந்த 30 நாட்கள் சட்டம் பாதிக்கிறது" என்றார்.
சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்பவர்களே. மதம் மாறாமல் திருமணம் செய்ய நினைப்பவர்களின் தகவல்கள், பொது வெளியில் வரும் போது மத வெறி பிடித்த கும்பல்களால் இவர்கள் தாக்கப்படுகின்றனர். எப்படி சாதிவிட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவக் கொலை நடைபெறுகிறதோ அதே போல் தற்போதைய சூழலில் இப்படிப்பட்ட சட்ட பிரிவுகளால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, திருமணங்களும் தடை செய்யப்படுகின்றன” என்கிறார் வழக்கறிஞர் ஹேமாவதி.
தமிழ்நாட்டில், மதம், சாதி கடந்து குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்பவர்களுக்கு ’ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற காப்பகத்தை உருவாக்கி, உதவி வருகிறார் வழக்கறிஞர் செ. குணசேகரன். வீட்டை மீறி, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்து, அதை பதிவாளரிடம் பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு வேலையும் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதுவரை 200 காதல் ஜோடிகளுக்கு மேல் தனது அமைப்பு மூலம் திருமணம் செய்து வைத்துள்ளார். “இந்தச் சட்டம், முழுக்க முழுக்க மதம் தாண்டி திருமணம் செய்ய விரும்பும் காதல் ஜோடிகளை பிரிக்கத்தான் உருவாக்கியுள்ளனர். இந்த மாதிரி திருமணங்கள் நடந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் போலத்தான் இது இருக்கிறது. வழக்கறிஞர் செ. குணசேகரன்
சாதி, மதங்களைத் தாண்டி திருமணம் செய்பவர்களுக்கு திருமணப் பதிவாளர்கள் தான் முதல் எதிரியாக இருக்கிறார்கள். அறிவிப்பு பலகையில், இருவரின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை வெளியிடும் போது, இதை பலர் புகைப்படம் எடுத்து சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கு அனுப்புவது, வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடுவது என காதலர்களின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இந்த ஒரு மாத கால சட்டம் என்பது பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் காதலை கடைசியாக பிரிக்க அரசாங்கத்தால் கொடுக்கப்படும் அவகாசம். இந்த ஒரு மாத காலத்தில் முடிந்தால் உங்கள் மகனை/மகளை, திருமணம் செய்வதிலிருந்து தடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். அதனால், திருமணம் செய்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புபவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சட்டமாகவும் இருக்கிறது” என்கிறார்.
http://dlvr.it/SnlQsv
http://dlvr.it/SnlQsv