பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக இன்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில், கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராகப் பேசிவந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
அதோடு அவர் கவனித்துவந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு பா.ஜ.க எம்.பி அர்ஜுன் ராம் மேக்வால் புதிய மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி பின்பு அரசியலுக்குள் நுழைந்து, மத்திய இணையமைச்சராக இருந்து தற்போது சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அமைச்சராகியிருக்கும் அர்ஜுன் ராம் மேக்வாலின் அரசியல் பயணம் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்..!
யார் இந்த அர்ஜுன் ராம் மேக்வால்?
தற்போது 69 வயதாகும் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்திலுள்ள கிஷ்மிதேசர் என்ற சிறிய குடும்பத்தில், 1953-ம் ஆண்டு லகு ராம் மேக்வால், ஹிரா தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், தன்னுடைய சொந்த கிராமத்திலேயே அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு, பீனாசரிலுள்ள ஜவஹர் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
இதற்கிடையில், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே 14 வயதில் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு திருமணம் முடிக்கப்பட்டுவிட்டது. பின்னர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பிகானேரிலுள்ள ஸ்ரீ துங்கர் கல்லூரியில் சட்டத்துறையில் இளங்கலை முடித்த அர்ஜுன் ராம் மேக்வால், அதே கல்லூரியில் பொலிட்டிகல் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார்.
ஐ.ஏ.எஸ் `டு' மத்திய அமைச்சர்!
1982-ல் ராஜஸ்தான் மாநில மற்றும் துணை சேவைகள் ஒருங்கிணைந்த தேர்வில் தேர்ச்சியடைந்த அர்ஜுன் ராம் மேக்வால், படிப்படியாக அரசுத்துறையில் பணியாற்றி 1994-ல் ராஜஸ்தானின் அப்போதைய துணை முதல்வர் ஹரி சங்கர் பாப்ராவுக்கு சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றிய அர்ஜுன் ராம் மேக்வால், 1999-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து உயர் கல்வித்துறையில் சிறப்பு செயலாளர், வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
அதன் பின்னர் அரசியலில் ஈடுபட முடிவெடுத்த அர்ஜுன் ராம் மேக்வால் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஒய்வுபெற்றார். அதையடுத்து, அரசியலில் முழுவீச்சில் இறங்கிய அர்ஜுன் ராம் மேக்வால், 2009-ல் பா.ஜ.க சார்பில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் எம்.பி-யாக நுழைந்தார். 2014-லும் மீண்டும் எம்.பி-யானார்.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு, பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ஆலோசனைக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கான ஆலோசனைக் குழு, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான ஆலோசனைக் குழு உட்பட பல ஆலோசனைக் குழுக்களில் அர்ஜுன் ராம் மேக்வால் உறுப்பினராக இருந்தார். கட்சி மட்டத்திலும், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க துணைத் தலைவர், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர், மக்களவை தலைமைக் கொறடா உள்ளிட்ட பதவிகளையும் அர்ஜுன் ராம் மேக்வால் வகித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளுக்கு மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்துவரும் அர்ஜுன் ராம் மேக்வால், இன்று பிரதமர் மோடியின் பரிந்துரையின்பேரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
முன்னதாக எம்.பி-யாக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கு அடிக்கடி சைக்கிளில் வந்துகொண்டிருந்த அர்ஜுன் ராம் மேக்வால், 2016-ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றதற்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருவதை நிறுத்திக்கொண்டார்.
நீதித்துறை அமைச்சராகியிருக்கும் அர்ஜுன் ராம் மேக்வாலின் செயல்பாடுகள் எப்படியிருக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!!!`மோடி அலை முடிந்தது; சர்வாதிகாரத்தை மக்கள் முறியடிப்பார்கள்!' - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
http://dlvr.it/SpGpRS
http://dlvr.it/SpGpRS