கட்சி சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, விருதுநகருக்கு நீராதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட அவர், அதைத் தொடர்ந்து திருத்தங்கலில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதையடுத்து, மாலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.நினைவு பரிசு
கூட்டத்துக்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், `தமிழகத்தில் எதற்காக நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைய வேண்டும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேடையில் அவர் பேசும்போது, "அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை எனச் சொல்லிச் சென்றவர்கள் என் தாத்தன்மார்கள் பெருந்தலைவர் காமராஜரும், தியாகி சங்கரலிங்கனாரும். அவர்களுடைய வழித்தோன்றலான நாங்கள் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துவருகிறோம்.
`துணிவும், நேர்மையுமுடைய 150 இளைஞர்களைக் கொடுத்தால் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்' என சூளுரைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆனால், அதே துணிவும், நேர்மையும், புரட்சிகர எண்ணமும்கொண்ட பெரும்படை நாம் தமிழரிடம் இருக்கிறது. எனவே, ஒருமுறை எங்களிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுகிறோம்.பேச்சு
இன்று தமிழ்நாட்டில் வேளாண்மையை விட்டுவிட்டு விவசாயிகள் வெளியேறும் காலம் வந்துவிட்டது. நமது அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது கிராமங்களில் இருந்துதான். அப்படியிருக்க கிராமங்கள் காலியாகி, நகரங்கள் பிதுங்கி வழியும் நிலை இருக்கிறது. இது பேராபத்துப் பயணமாகும். தற்போதிருக்கும் அரசாங்கத்திடம் ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டம் மட்டுமே இருக்கிறது. ஸ்மார்ட் வில்லேஜுக்கான திட்டம் எதுவும் இல்லை. அதேபோல் முதல்தர வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் நகரங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். அடுத்தடுத்த தரநிலையிலுள்ள ஆசிரியர்களே கிராமங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். முதலில் இதை மாற்ற வேண்டும்.
ஒரு நாட்டுக்கு ஆகப் பெரும் வளம் சேர்ப்பது அறிவுதான். அந்த அறிவை வளர்ப்பதற்குத் துணை நிற்பது கல்வி. எனவே, கல்வியைச் சரியாக, தரமாக, சமமாக வழங்க நாம் தமிழர் கட்சி உறுதிகொண்டிருக்கிறது. அதன்படி, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்தர ஆசிரியர்கள் அனைவரும் கிராமப் பள்ளிக்கூடங்களில்தான் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது இருக்கும் கல்விமுறை ஒழித்துக் கட்டப்பட்டு தலைகீழ் மாற்றம் கொண்டுவரப்படும். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடங்கள் கற்பிக்கப்படும். பேச்சு
அரசு ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் பயில சட்டம் இயற்றப்படும். அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். வேளாண்மை, அரசு வேலையாக்கப்படும். நீர் பெருக்கம், சுற்றுச்சூழல் மாசில்லா எரிவாயு உற்பத்தி ஆகியவை திட்டமிட்டு கட்டமைக்கப்படும். மக்களுக்கு இலவச மருத்துவம், தூய்மையான குடிநீர், வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். ரேஷனில் சீனி வழங்கப்படுவதை ஒழித்துக்கட்டி, பனை பொருள்களான வெல்லம், கருப்பட்டியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
தமிழ் மீட்சியே, தமிழரின் எழுச்சியாகும். எனவே, தமிழ் மொழியில் பயின்றவருக்கே அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும். இங்கிருக்கும் மாவட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவர் சார்ந்த சமூகக் கூட்டத்தில் பேசுகையில், தன் தாய்மொழி உடையோருக்கு அரசு காரியங்களிலும், அரசு வேலைகளிலும் சலுகை அளிப்பேன் எனப் பேசியிருக்கிறார். அவர் தாய்மொழிக்காரர்களுக்கே சலுகை வழங்குவேன் எனச் சொல்லும்போது, என் தமிழ் கற்றவனுக்கு நான் சலுகை அளிக்கக் கூடாதா... தமிழ் என்பது வெறும் மொழி அல்ல, அது நமது அடையாளம். எனவே, நாடு நல்லபடியாக மாற வேண்டுமென்றால் அதற்கு நாம் தமிழர் கட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும்" எனப் பேசினார்.Vijay : `திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே நாட்டை ஆளத் தகுதியாகி விடாது!' - சீமான் சொல்வதென்ன?
http://dlvr.it/Sr3Dzt
http://dlvr.it/Sr3Dzt