கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். போலியான பழங்காலப் பொருள்களை வைத்துக்கொண்டு பல மோசடி செய்திருப்பதாகக் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக 6.27 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அளித்த புகாரில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.மோன்சன் மாவுங்கல்
மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாகவும். அதில், 10 லட்சம் ரூபாயை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் வாங்கிச் சென்றதாகவும் அனூப் என்பவர் க்ரைம் பிராஞ்ச் போலீஸில் புகாரளித்தார். அந்த வழக்கில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக கொச்சி களமசேரி க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் வைத்து கே.சுதாகரனிடம் போலீஸார் நேற்று காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடந்த விசாரணை நேற்று இரவு 7 மணியளவில் முடிவுக்கு வந்தது. விசாரணை முடிந்த பிறகு க்ரைம் பிராஞ்ச் போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
ஏற்கெனவே நீதிமன்ற அறிவுறுத்தல் இருப்பதால் கைதுசெய்யப்பட்ட பின்னர் கே.சுதாகரன், இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநிலத் தலைவர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து சனி, ஞாயிறு (இன்றும், நாளையும்) இரண்டு தினங்கள் கறுப்பு தினமாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. மாநிலத் தலைவர் கே.சுதாகரன் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்திப் போராட்டங்களில் ஈடுபடவிருப்பதாக மாநிலப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.கைதுசெய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சுதாகரன்
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கே.சுதாகரன் செய்தியாளர்களிடம், "எனக்கு நீதிமன்றம்மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கு தகுதியானதா, தகுதியற்றதா என நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில் என்னைத் தண்டிக்க எந்த ஆதாரமும் போலீஸ் வசம் இல்லை என்பதை விசாரணையின்போதே தெரிந்துகொண்டேன். எனக்கு பயமோ, கவலையோ இல்லை. எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
http://dlvr.it/Sr8nfM
http://dlvr.it/Sr8nfM