புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அனைத்து மருத்துவ இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றனர். செவிலியர் படிப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். மாநிலங்களை டம்மியாக்கிவிட்டு மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் பறித்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறது.
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாரே தவிர, எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், வாய்மூடி மவுனியாக இருக்கிறார். அதை எதிர்த்துப் போராட ரங்கசாமிக்குத் தெம்பும், திராணியும் இருக்கிறதா... மத்திய மோடி அரசு தொடர்ந்து புதுவையைப் புறக்கணித்து வருகிறது. மாநிலத்துக்கு நிதி வழங்கவில்லை. தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றுகின்றனர். மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. அதனால், புதுவை மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார் முதல்வர் ரங்கசாமி.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
மாநில அந்தஸ்து பெறுவதற்காகவே மத்திய பா.ஜ.க அரசுடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சி அமைத்தார். தற்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், ஏன் முதலமைச்சராக இருக்கிறேன் என்றும் ரங்கசாமி கூறுவது கபட நாடகம். அனைத்துக் கூட்டங்களையும் கவர்னர் நடத்துகிறார். முதலமைச்சரோ, அமைச்சர்களோ அந்தக் கூட்டங்களில் இல்லை. சர்வாதிகாரிபோல கவர்னர் செயல்பட்டு நிர்வாகத்தை சீர்குலைக்கிறார், நீதிமன்றத்தை அவமதிக்கிறார்.
முதலமைச்சரும், அமைச்சர்களும் கைகட்டிக்கொண்டு கவர்னருக்குச் சேவகம் பார்க்கின்றனர். இவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள் என்பதையே நிரூபித்திருக்கின்றனர். மோடி பிரதமராக வந்து ஒன்பது ஆண்டுகளில் புதுவைக்குப் புதிதாக எந்த ரயிலும் விடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 17 ரயில்களைக் கொண்டுவந்தோம். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் புதுவை புறக்கணிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலை புதுவையில் ஏன் மோடி இயக்கவில்லை... புதுவை மாநில அரசைக் கூட்டணியிலுள்ள பா.ஜ.க புறக்கணிக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு வாய்மூடி மௌனமாக இருக்கிறது.
கலால் துறையில் ஊழல், உள்ளாட்சித்துறையில் குப்பையை வார டெண்டர் விடுவதில் ஊழல் நடந்தது. இந்தக் குற்றச்சாட்டை கூறியவுடன் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர், டெண்டர் ரத்துசெய்யப்பட்டது. பத்திரப்பதிவுத்துறையில் பணிபுரியும் பதிவாளர், சார் பதிவாளர்கள் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்க வேண்டும். ஏழை மக்கள் பத்திரம் பதியச் சென்றால் அவர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. வில்லியனுரில் விளைநிலத்தை மனைகள் என்ற போர்வையில் விற்பனை செய்கின்றனர்.
நகர அமைப்பின் அனுமதியின்றி பத்திரம் பதியப்படுகிறது. இதில் தொடர்புடைய ஒருவர் தற்போது அமைச்சராக இருக்கிறார். அவரின் இடத்தில் 300 பிளாட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. புதுவையில் ஒவ்வொரு பத்திரத்துக்கும் பணம் வாங்கி முதலமைச்சர் அலுவலகத்துக்குக் கொடுக்கப்படுகிறது. தற்போது கோயில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. காமாட்சியம்மன் கோயில் நிலம் அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தபோது காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழிசை சௌந்தரராஜன்
உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதிய பிறகு வழக்கு பதிவுசெய்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்தவர்கள் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடம் இரண்டு பகுதிகளாக இருக்கின்றன. ஒரு பகுதி போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு, சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தினர் வாங்கி 21 பேருக்கு விற்றிருக்கின்றனர். இதில் 20 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் புதுவையைச் சேர்ந்தவர்.
மீதமுள்ள பாதி இடத்தில் புதுவையைச் சேர்ந்த முக்கியப்புள்ளிகள், அரசியல்வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எம்.எல்.ஏ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலிப் பத்திரம் மூலம் வாங்கி பட்டா மாற்றம் செய்திருக்கின்றனர். இது குறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடக்கிறது. போலிப் பத்திரப்பதிவு விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விற்றவர்கள் மீதும், போலிப் பத்திரம் தயாரித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நிலத்தை வாங்கியவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை... புதுவையில் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ குடும்பம், மற்ற கட்சியைச் சேர்ந்த முக்கியப்புள்ளிகள் இந்த இடத்தை வாங்கியிருக்கின்றனர். இதை மூடிமறைக்கும் வேலை நடக்கிறது.``புதுச்சேரி அமைச்சர்கள் 30% கமிஷன் வாங்குகிறார்கள்!” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமறைவாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வருகின்றனர். ஊழல் பேர்வழிகளைக் காப்பாற்றும் வேலையை முதலமைச்சர் ரங்கசாமி செய்கிறார். இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால், முதலமைச்சர் ரங்கசாமி வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். போலிப் பத்திரத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் புதுவை அரசுக்கு இருக்கிறது.
இதில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பிருக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவிருக்கின்றனர். இதில் பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் பத்திரங்களையும் ரத்துசெய்ய வேண்டும். கோயில் நிலங்களுக்கு பூஜ்ய மதிப்பு அளிக்க வேண்டும். மணக்குள விநாயகர் கோயில் நிலமும் அபகரிப்பு செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் வந்திருக்கின்றன.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
கோயில் நிலத்தை விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஆட்சியாளர்கள் சாதகமாக இருக்கின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியும். அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த மாட்டார்கள். முதலியார்பேட்டையில் அடுத்தடுத்து இரண்டு படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெடிகுண்டு வீசி எதிரிகளைக் கொலைசெய்யும் வேலை தொடர்ந்து நடந்துவருகிறது.
ரங்கசாமி முதலமைச்சராக வரும்போதெல்லாம் புதுவை கொலை நகரமாகிவிடும். கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருளும் தாராளமாக புழக்கத்தில் இருப்பதால்தான் கொலை, கொள்ளை நடக்கிறது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. காவல்துறை நிர்வாகம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ரங்கசாமி டம்மி முதலமைச்சர் என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். தற்போது முதலமைச்சர் தன்னுடைய புலம்பல் மூலம் அதை நிருபித்திருக்கிறார்” என்றார்.
http://dlvr.it/SrLcW9