இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் கோரிக்கை மாநாடு, காட்பாடி, துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று (02.07.23) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளைத் தடுத்து நிறுத்தி அதற்கு மாற்று வழி கண்டறிவது உள்ளிட்ட இந்த மாவட்டத்தின் முக்கிய மக்கள் பிரச்னைகளை முன்நிறுத்தி, இந்த மாநாட்டில் சொல்லியிருக்கிற 13 கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநில அரசுக்கும் முறையாக அனுப்பப்படும். முத்தரசன்
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி, அமித் ஷா ஆகியோர் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் அங்கு அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. பா.ஜ.க-வின் இந்தத் தோல்விக்குப் பிறகு, தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த கடந்த 23-ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கின்றன. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு பா.ஜ.க மிகப்பெரிய பதற்ற நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி பேசியது. பல மதங்கள், பல சாதிகள் இருக்கும் இந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பது சாத்தியமில்லை. அது பிரதமருக்கும் தெரியும். இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் நாட்டில் கலகம்தான் நடக்கும்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரத்தை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த பிரதமர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை அந்தக் கலவரம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். கலவரம் நடந்தால் தங்களுடைய கட்சிக்கு ஆதாயம் ஏற்படும் என்றும் நம்புகிறார். கடந்த காலத்தில் இப்படிப்பட்ட கலவரத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயமும் அடைந்திருக்கிறார். முத்தரசன்
இதற்கு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே ஓர் உதாரணம். நாட்டில் கலவரம் ஏற்பட்டால் இந்துக்களின் வாக்குகள் அனைத்தையும் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இது போன்ற முயற்சிகள் அவரால் மேற்கொள்ளப்படுகின்றன.
`சனாதனத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர், சனாதனத்தில் சாதியே இல்லை' என்று கவர்னர் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். கவர்னர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலையையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர கவர்னர் கிடையாது.
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் இலாகா இல்லாத அமைச்சராக ஓராண்டு இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதா, வேண்டாமா என்பதை முதல்வர் மட்டுமே முடிவுசெய்ய வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். பிறகு ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்திவைப்பதாக மறு கடிதம் முதல்வருக்கு எழுதுகிறார். தன் இஷ்டம்போல் செயல்படும் இவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் மோடி, அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
ஆபத்திலிருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்வந்திருப்பது ஒரு நல்ல நம்பிக்கை அறிகுறியாகும்" என்றார்.
இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பங்கேற்கவிருந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் பங்கேற்க முடியவில்லை'' என்று முத்தரசன் தெரிவித்தார். உதயநிதி பாணியில் செங்கல்லை கையில் எடுத்த அண்ணாமலை - குமரி சங்கமத்தில் ஆவேசம்!
http://dlvr.it/Srb7FT
http://dlvr.it/Srb7FT