நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், பா.ஜ.க தனது முக்கிய அஜண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் கிளம்பியது. `நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்து இந்த விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுக்கிறது' என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.மோடி
இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்துப் பேசுவதற்காக நாடாளுமன்ற நிலைக்குழு இன்று (ஜூலை 3) கூடியது. அதில், ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர், பொது சிவில் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
பல்வேறு மதங்களையும், இனங்களையும்கொண்ட இந்தியாவில், ‘ஷரியத்’ சட்டம் என்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். குடும்பம், திருமணம், மண முறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம் ஆகிய விவகாரங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். ஆனால், இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடு.மோடி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கான பிரிவு 370-ஐ நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க-வின் முக்கிய அரசியல் அஜண்டாக்கள். இவை பற்றி நீண்டகாலமாகப் பேசிவரும் பா.ஜ.க., முதல் இரண்டு அஜண்டாக்களை நிறைவேற்றிவிட்டது. மூன்றாவது அஜண்டாவைத் தக்க சமயத்தில் தற்போது கையிலெடுத்திருக்கிறது.
பொது சிவில் சட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், இன்னோர் உறுப்பினருக்கு வேறொரு சட்டமும் இருந்தால் அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா... அதுபோல வெவ்வேறுவிதமான சட்டங்களுடன் நாடு எப்படி வளர்ச்சியைக் காண முடியும்… ஆகவே, இந்தியாவில் பொது சிவில் சட்டம் அவசியம்" என்றார்.
மோடியின் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், "குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. தேசம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் பிணைக்கப்பட்டது. பொது சிவில் சட்டத்தை மக்கள்மீது திணிக்க முடியாது” என்றார். ப.சிதம்பரம்
“மதப் பிரச்னையை அதிகரித்து, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். இந்த நிலையில், வரக்கூடிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
தற்போது, பொது சிவில் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சியினர், ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பொது சிவில் சட்டத்தை ஏன் கொண்டுவர வேண்டும் என்கிறீர்கள்... இப்போது என்ன அவசரம்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “பொது சிவில் சட்டம் குறித்து விவாதமே தேவையில்லை. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் வேண்டியதில்லை” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஸ்டாலின்
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ‘பொது சிவில் சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை அமல்படுத்த நினைக்கும் முறையைத்தான் எதிர்க்கிறோம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். மணிப்பூர் போராட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பெண்கள்! - பின்னணி என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. அதன் மூலமாக, உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கலாம். ஆனால், இந்தியா முழுமைக்கும் ராமர் கோயிலால் மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிட முடியாது என்று பா.ஜ.க கருதக்கூடும்.
காரணம், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க படுதோல்வியை அடைந்தது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற ராமர் கோயில் மட்டுமே போதாது என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே, பொது சிவில் சட்டத்தை அவர்கள் கையிலெடுக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. கெஜ்ரிவால்
மக்களவையில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை இருப்பதால், அங்கு இதற்கான மசோதாவை நிறைவேற்றிவிடுவார்கள். மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், ஆம் ஆத்மி போன்ற சில கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க முயலும். பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்தால், அது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அளவுக்குக் கைகொடுக்கும் என்பது பா.ஜ.க-வின் கணக்கு. ஆனால், உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரம் சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கவலையுடன் கூறுகிறார்கள்.
http://dlvr.it/Srf0pW
http://dlvr.it/Srf0pW