காய்கறிகளின் விலை என்பது கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து, எளிய மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் குறிப்பாக காற்கறிகளில் அத்தியாவசியமான ஒன்றான தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்ற அளவுக்கு எகிறிக்கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் கனமழை பாதிப்பு, விளைச்சல் பாதிப்பு, போக்குவரத்து சிக்கல் போன்றவை இதற்குக் காரணிகளாகக் கூறப்படுகின்றன. இத்தகைய விலையேற்றத்தால் ஒரே நாளில் தக்காளி விற்றே பணக்காரரானவரும் இங்கு உண்டு, தக்காளி விற்ற பணம் வைத்திருந்ததால், கொள்ளையர்களால் கொல்லப்பட்ட விவசாயியும் இங்கு உண்டு. இவ்வாறான விலையேற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடப்பதும், பின் நிலைமை சீர் ஆவதும் இயல்பாகி விட்டது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னரும் தக்காளி விலையேற்றத்தால், மக்கள் அவதிபட, அப்போது வெளியான ஜூ.வியில் அது குறித்து கவர் ஸ்டோரி வெளியானது. தக்காளி1983-ம் ஆண்டு, ஜூலை 20 தேதியிட்ட ஜூனியர் விகடனில் `காய்கறியிலும் கறுப்பு மார்க்கெட்டா?' என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்திருக்கிறது.
அந்தக் கட்டுரை இங்கே...
கடந்த ஆண்டு, இதே ஜூலை மாதத்தில் தள்ளுவண்டிகளில் தக்காளி தெருத் தெருவாக சென்னை நகரை வலம் வந்துகொண்டிருந்தது! `தக்காளி... தக்காளி' என்று வண்டிக்காரரின் பின்னணி இசை வேறு!
இந்த ஆண்டு இந்த ஜூலையில், சுருக்கமாகச் சொன்னால் தக்காளி மத்தியதர வகுப்பினருக்கு எட்டாத ஒரு கனியாக வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது. சில்லறை வியாபாரிகளிடம் ஜூலை 9-ம் தேதியன்று தக்காளி கிலோ 9 ரூபாய், 10-ம் தேதி கிலோ 10 ரூபாய், 11-ம் தேதி கிலோ 11 ரூபாய், 12-ம் தேதி கிலோ 12 ரூபாய் என்று தேதியோடு போட்டி போட்டுக்கொண்டு விலையேறிவந்தது தக்காளி.
தக்காளிக்கு இந்த மதிப்பு என்றால், கடைகளில் `தூக்கில்' தொங்கிக்கொண்டிருந்த வாழைக்காய்களுக்குத் தனி மரியாதை. முதன்முறையாக வாழைக்காய்கள் கூடையில் வைக்கப்பட்டு விற்கப்படுவதை பல மார்க்கெட்டுகளில் சென்னை மக்கள் பார்த்தார்கள்! இந்த அமாவாசையில் வாழைக்காய் கிடைக்கவேயில்லை. கிடைத்த சில இடங்களில் ஒரு வாழைக்காயின் விலை 80 பைசாவிலிருந்து ஒரு ரூபாய் வரை! ``வாழைத்தண்டே கிலோ அஞ்சு ரூபாங்க... அப்படீன்னா காய் விலை சும்மாவா இருக்கும்?'' என்று ஒரு வியாபாரி சீறினார். சமீப சென்னை நகர திருமணங்களில் வாழைக்காய் சிப்ஸ்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸ்களைக் கடைகளில் வாங்கி இலைகளில் தூவிச் சென்றதைப் பார்த்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கிறது.
எட்டாமல்போன தக்காளியும், காணாமல்போன வாழைக்காயும் மட்டுமல்லாமல், இந்த முறை வரலாறு காணாத அளவுக்கு சென்னை நகரில் எல்லாக் காய்கறி விலையுமே ஏறிவிட்டன. ``இது உண்மைதான். 30 வருட அனுபவத்தில் இப்படியொரு விலையேற்றத்தை நாங்கள் கண்டதில்லை" என்று ஒப்புக்கொண்டனர், கொத்தவால் சாவடி வியாபாரிகளிலிருந்து சில்லறை வியாபாரிகள் வரை.காய்கறியிலும் கறுப்பு மார்க்கெட்டா? - ஜூனியர் விகடன்
சென்னை நகரில் காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய மார்க்கெட் கொத்தவால் சாவடிதான். அதைத் தவிர 120 மார்க்கெட்டுகள் நகரில் இருக்கின்றன. கிட்டத்தட்ட 15,000 காய்கறி வியாபாரிகள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது.
வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 12 ரூபாய் விற்ற 12-ம் தேதியன்று, கொத்தவால் சாவடியில் மொத்த விற்பனை ரேட்டில் கிலோ 6 ரூபாய் விற்கப்பட்டுக்கொண்டிருந்ததை, இரண்டு கண்களாலும் பார்த்தோம்!
ஏ.எஸ்.குருசாமி, ஏ.டி.பஷீர் போன்ற தக்காளி பெரு வியாபாரிகள், ``போன வருஷம் இதே நேரம் கிலோ 40 பைசாவுக்குத் தக்காளி போச்சுங்க" என்றார்கள். விலையேற்றத்துக்கு அவர்களே சற்று கூச்சப்பட்டார்கள்!
அவர்கள் சொன்னார்கள்: ``இந்த வருஷம் தமிழ்நாட்டிலே தக்காளி ஸீட்ஸ் ஃபெயிலியர் ஆயிட்டுது. செடி முளைச்சுது. ஆனா காயைக் காணோம். தமிழ்நாட்டிலே திண்டுக்கல்தான் ஏற்றுமதி சென்டர். அங்கேயிருந்து ஒரு தக்காளிகூட வரவில்லை. மதனபள்ளியிலிருந்து மட்டும் வந்துக்கிட்டிருக்கு. சாதாரணமா சென்னை நகருக்கு 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வேணும். மதனபள்ளியிலிருந்து ரெண்டு மூணு லோடுதான் வருது. சரக்கு அனுப்புறவன் டிமாண்டைத் தெரிஞ்சுக்கிட்டு, `இன்ன விலைக்கு வித்துடு’னு டிக்டேட் பண்றான். வேறு வழியில்லை. போட்டி போட்டுக்கிட்டு விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. இல்லேன்னா சரக்கை இங்கே அனுப்ப மாட்டான். லாஸ்ட் இயர் பம்பர் விளைச்சல். கேட்ட விலைக்குக் கொடுத்தான்... இந்த விலையேற்றம் சரித்திரத்தில் இல்லை. ரிக்கார்டு பிரேக்!''
கொத்தவால் சாவடியில் விலையற்றமும் இறக்கமும் எப்படி நடக்கிறது என்பதைச் சில வியாபாரிகள் தமாஷாகச் சொன்னார்கள். கேட்டபோது நமக்கு பகீரென்றது.காய்கறி
காலையில் மூன்று மணிக்கு இரண்டு லாரிகளுக்கு மேல் தக்காளி வரவில்லை என்றால் ஒரு விலை இருக்கும்! `மூணாவது லாரி வருது' என்று பேச்சு வந்தவுடன் விலையில் 5 ரூபாய் குறைகிறது. `செக் போஸ்ட்டில் இன்னும் இரண்டு லாரி நிற்கிறது' என்று தகவல் வந்தால் மேலும் விலை குறைகிறது!
கூடைகளில் 5 கிலோவாகத் தக்காளி விற்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த மொத்த வியாபாரிகளிடம் உள்ள தக்காளிக்கும், சில்லறைக் கடைக்கு வரும் தக்காளிக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் கிலோ 6 ரூபாய் தக்காளியை 12 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பது எப்படி சரியாகும்... சில்லறை வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்று கவலைப்பட கொத்தவால் சாவடி வியாபாரிகளுக்கு நேரமில்லை.
சென்னையில் இந்த வருடம் கிலோ 15 ரூபாய் வரை விலையேறிய மற்றொன்று பச்சை மிளகாய். உண்மையில் மிளகாயின் விலையேற்றமும் இன்னும் குறையவில்லை. 100 கிராம் ஒரு ரூபாய் என்று வெளிமார்க்கெட்டில் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு கிலோ 10 ரூபாய் ஆகிறது. கொத்தவால் சாவடியில் அதேநேரத்தில் (மொத்த வியாபார விலை) கிலோ 5 ரூபாய்தான்.
``பச்சை மிளகாய் விலை முப்பது வருடங்களில் இப்படி ஏறியதில்லை" என்று சொன்னார்... பச்சை மிளகாய், இஞ்சி, சேனை, சேப்பக்கிழங்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.சண்முகசுந்தரம். ``பச்சை மிளகாய் இந்த சமயத்தில் ஹூப்ளி, பெல்காம் பகுதியிலிருந்து வரணும்; வரவில்லை. பண்ருட்டியிலிருந்து மட்டும் வந்துகொண்டிருக்கிறது. அங்கே சீஸன் முடிந்திருக்க வேண்டும். லேட்டாக மழை பெய்ததால் கொஞ்சம் மிளகாய் காய்ந்துவருகிறது" என்றார் சண்முகசுந்தரம்.
``சேனையும் சேப்பக்கிழங்கும் மார்க்கெட்டில் சிரிப்பாய் சிரிக்கும்... அதுகூட விலையேறிக் கிடக்கிறதே..?!"
``ஒரு ஏக்கராவில் விளையும் சேனை, பத்தாயிரம் ரூபாய்க்கு இருந்தது. இப்போது ஒரு ஏக்கராவில் விளையும் சேனை 18 ஆயிரம் ரூபாயிலிருந்து முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் போகிறது. ஏதாவது கேட்டால் `பம்பாய் மார்க்கெட் எங்களுக்கு நன்றாக இருக்கிறது' என்று சொல்கிறார்கள். பம்பாய் ரேட் பார்த்து வாங்கவேண்டியிருக்கிறது. சேப்பக்கிழங்கு வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து வர வேண்டும். அங்கே மழையில்லை. நெல்லூர் பக்கத்திலிருந்து வருகிறது. இஞ்சி கிலோ 10 ரூபாய்க்கு நாங்களே விற்றோம். இப்போது 5 ரூபாய். இங்கே கூடலூரிலிருந்தும் கேரளாவிலிருந்தும் இஞ்சி வரணும். கேரளாவில் நல்ல மழையாம்! இஞ்சி விலை குறையும்" என சண்முகசுந்தரம் கூறினார்.கோயம்பேடு மார்க்கெட்
சென்னை நகருக்கு 200 மூட்டை பச்சை மிளகாய் தேவையாம். ஒரு மூட்டையில் 50 கிலோ மிளகாய்! கொத்தவால் சாவடியில் வாழைக்காய் விற்கப்படும் பகுதிக்கு வந்தபோது, அங்கே 100 காய்கள் 30 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்தன. அழுகல், பழுத்து விட்டது என்றெல்லாம் ஒதுக்குவதற்கு அதில் ஏதும் இருக்கவில்லை. பெரிய வாழைக்காய் ஒன்று எப்படிப் பார்த்தாலும் விலை 50 பைசாவுக்குமேல் அங்கே இல்லை.
மழையில்லையென்றும், புயலில் (எப்போது அடித்ததாம்?) வாழை மரங்கள் போய்விட்டன என்றும், வாழைக்காய் விலையேற்றத்துக்கும், கிடைக்காமல் இருப்பதற்கும் காரணம் கொடுக்கப்படுகிறது. ஆடி பத்தாம் தேதிக்கு மேல் வாழைக்காய் விலை இறங்கும் என்று ஜோசியம் சொன்னார் ஒரு மொத்த வியாபாரி.
12-7-83-ம் தேதியன்று முட்டைக்கோஸ் ஒரு கிலோ 2.80 ரூபாய், காரட் ஒரு கிலோ 2.75 ரூபாய், நூல்கோல் ஒரு கிலோ 2 ரூபாய், பீட்ரூட் ஒரு கிலோ 1.50 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 1.25 ரூபாய் என்று கொத்தவால் சாவடியில் `ஹோல்ஸேல் ரேட்' இருந்தது. ``இன்னும் இரண்டு வாரங்களில் இங்கிலீஷ் காய்கறி விலை குறையும்" என்றார் ஏ.எஸ்.தேவராஜுலு நாயுடு.
உருளைக்கிழங்கு!
இதன் விலை எப்படி இருந்தாலும் சில நாள்களாக இதைச் சாப்பிடும்போது நகரவாசிகளுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. ``இது என்ன ஸ்வீட்டாக இருக்கிறது! சர்க்கரைவள்ளிக்கிழங்கா?" என்று சாப்பிடும்போது சந்தேகத்துடன் கேட்டவர்கள் உண்டு.
உருளைக்கிழங்கு தித்திப்பது உண்மைதான். காரணம் கேட்டபோது, கொஞ்சம் தயங்கிவிட்டு, சிரித்தவாறு கொத்தவால் சாவடி வியாபாரி ராஜா முகமது கூறினார்: ``தமிழ்நாட்டிலே ஃபிரஷ் கிழங்கைச் சாப்பிட்டுத்தான் பழக்கம்! இப்போதான் முதல் தடவையா வடக்கே Cold Storage-ல் வைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுறீங்க! அதுவும் நாலு மாசமா ஐஸ் பெட்டியில் இருக்கிற கிழங்கு! அதனாலே பழுத்து ஸ்வீட்டாயிருக்கு! அதோட, பஞ்சாப்பிலே சந்திரமுகி பக்கம் விளைகிற உருளைக்கிழங்கு இயற்கையா கொஞ்சம் ஸ்வீட்டாகவும் இருக்கும்."காய்கறி வியாபாரம்
``மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு விலை கட்டுப்படி ஆகவில்லை. டில்லி, கல்கத்தாவில் ஐஸ் பெட்டியில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை வாங்க வேண்டியதாகிவிட்டது. டிசம்பர், ஜனவரியில் உ.பி., பஞ்சாப்பில் உருளைக்கிழங்கு நன்றாக விளையும். அதை குளிர் ஸ்டோரேஜில் வைத்து ஜூன் மாதம் ரிலீஸ் செய்கிறார்கள். லாரி சார்ஜ் வேறு ஏறிவிட்டது. டில்லியிலிருந்து 10 டன் ஏற்றி வரும் ஒரு லாரிக்கு 7,000 ரூபாய் சார்ஜ். போன மாதம் இங்கேயிருந்து மாம்பழம் ஏற்றிக்கொண்டு லாரிகள் வடக்கே போயிற்று. திரும்பி காலியாக வராமல், கிழங்கை ஏற்றிவந்தார்கள். அப்போது லாரி சார்ஜ் ஆயிரம் ரூபாய் குறைத்தார்கள். சென்னைக்கு 20 லாரி லோடு கிழங்கு தேவை. ஏழு அல்லது எட்டு லோடுதான் வருகிறது. அதனால் மார்க்கெட் விலையில் கெடுபிடி" என்றார் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கட்ராமன் செட்டியார்.
உருளைக்கிழங்கில் குவாலிட்டி வித்தியாசம் உண்டு. முதல் ரகம் ரூ.2.40 முதல் ரூ.2.50 வரை கொத்தவால் சாவடியில் விற்கப்பட்டது. அடுத்த ரகம் 2 ரூபாய்க்கு விற்றது. ஆனால், வெளி மார்க்கெட்டில் கிலோ 4 ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை! முக்கால்வாசி இரண்டாவது ரகம்தான்.
சென்னை நகரில் கொத்தவால் சாவடி விலைக்கும், சில்லறைக் காய்கறிக் கடைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.
``உண்மைதான்... சில்லறை வியாபாரிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை" என்கிறார் அழுகும் பொருள் வியாபாரிகள் செயலாளர் எஸ்.சூரிய நாராயணன்.
``மக்களுக்கு அன்றாடத் தேவையான காய்கறிகளின் விலையை இஷ்டத்துக்கு விற்பது என்பதும் கறுப்பு மார்க்கெட்தானே! மக்கள் கூட்டமாக முந்துகிறார்கள் என்று சினிமாக்களுக்கு கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பதற்கும், வெளி மார்க்கெட்டில் அநியாய விலையில் காய்கறி விற்பதற்கும் என்ன வித்தியாசம்?"
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல `ஷை'யாகத்தான் தயங்கினார் சூரியநாராயணன். அழுகும் பொருளைப் பதுக்கிவைக்க முடியாது என்ற அவருடைய பதில்கள் நமக்கு எளிதில் திருப்தி தராது. அழுகாமல் இருந்தால் இன்னும் என்ன நடக்குமோ? சூரியநாராயணன் சொன்னார்: ``1962-ல் அரசு ஓர் உத்தரவு போட்டது. கொத்தவால் சாவடி விலையிலிருந்து 20 சதவிகிதம் அதிகமாக விலையை ஏற்றி, சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை விற்கலாம் என்றார்கள். கொத்தவால் சாவடியைப் பொறுத்தவரையில் ஹோல்சேல் ரேட்டும், சில்லறை வியாபார ரேட்டும் ஒன்றுதான்.காய்கறி
ஆனால், இன்று 20 சதவிகிதம் என்பது போதாது. 30 சதவிகிதம் விலையை ஏற்றி விற்பது நியாயமானது. இங்கே தக்காளி 6 ரூபாய் வெளி மார்க்கெட்டில் 7.50 ரூபாய் விற்கலாம். 8 ரூபாய்கூட இருப்பதில் தவறு இல்லை. ஆனால், 10 ரூபாய், 12 ரூபாய் என்று சில்லறை வியாபாரிகள் விற்பது சரியல்ல. இதைத் தடுக்க அரசாங்கமே வழிசெய்ய வேண்டும். கொத்தவால் சாவடி வியாபாரிகள் மொத்த விற்பனை ரேட்டிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் அரசுக்குக் காய்கறிகளைத் தரத் தயாராக இருக்கிறார்கள். அரசு அதை 30 சதவிகித மார்ஜின் வைத்து பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளைத் திறந்து விற்கட்டும். விலை கட்டுக்குள் வரும்.
கொத்தவால் சாவடியில் என்ன விலைக்குக் காய்கறிகள் இருக்கின்றன என்பதை மக்களுக்கு ரேடியோ, டி.வி., பத்திரிகைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிகம் விற்பவருக்கு ஒரு Moral Fear ஏற்படும். உண்மை மக்களுக்குத் தெரியும் என்று பயப்படுவார்கள். 1962 முதல் 1967 வரை அரசு இப்படி, கொத்தவால் சாவடி விலையை மக்களுக்கு தெரியப்படுத்தியது" என்றார். இவரே அண்மையில் அவசரத்துக்கு வாழைக்காய் 80 பைசா கொடுத்து வாங்க நேர்ந்ததாம்!
சில்லறை காய்கறி வியாபாரத்தில் முன்பிருந்த கட்டுப்பாடு, நாணயம் இப்போது குறைந்திருக்கிறது என்பது பொதுமக்களின் கருத்தும்கூட! சென்னை நகரத்தில் ஒரு பெரிய `கவர்ச்சி' மார்க்கெட்டில், இஷ்டம்போல் விலை ஏற்றப்படுவதைப் பார்க்க முடிந்தது. பட்டாணி கிலோ 19 ரூபாய் என்றால், அந்த மார்க்கெட்டில் சிலர் அரை கிலோ 19 ரூபாய் என்று லிஸ்ட்டில் போட்டுக் கூட்டியிருந்தார்கள்! ஒருவர் காய்கறி வாங்கி லிஸ்ட்டில் கணக்கு பார்த்தபோது, அன்றைய தேதியும் விலையோடு சேர்த்துக் கூட்டியிருப்பது பார்த்தார், சண்டை போட்டார்!
``பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை இந்த வியாபாரிகளுக்குப் பிடித்துக்கொண்டுவிட்டது. நான் என் பிள்ளைகளை இந்தத் துறையில் நுழைக்க மாட்டேன். மரியாதை போய்விட்டது" என்றார் இந்த மார்க்கெட்டில் நீண்டநாளாகக் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவர்.
``இப்படி விலையை இஷ்டப்படி ஏற்றுகிறீர்களே! கொத்தவால் சாவடி வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா!?" என்று முடிப்பதற்குள்ளேயே ``அவர்களுக்கென்ன... ஏதாவது சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்" என்று சீறுகிறார்கள் சில்லறை வியாபாரிகள்.
ஆனால், இதே மார்க்கெட்டில் வியாபாரிகள் வாழைக்காயை 80 பைசாவுக்கு விற்று ``கொத்தவால் சாவடியிலேயே 80 பைசாதான்" என்று சொல்வதைக் கேட்க முடிந்தது.கோயம்பேடு மார்க்கெட்
விலையேற்றத்தில் சில்லறைக் காய்கறி வியாபாரிக்கு பங்கு இருக்கத்தான் செய்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, `நிறைய நியாய விலை காய்கறிக் கடைகள் திறக்கப்படும். வேலையற்ற பட்டதாரிகளுக்கு சைக்கிளில் காய்கறி எடுத்துச் சென்று விற்க வசதி செய்து தரப்படும்' என்றெல்லாம் பரபரப்பாக அறிவிப்புகள் வந்தன. எதுவும் நிறைவேறவில்லை.
உருளைக்கிழங்கும் தக்காளியும் விலையேறிக்கொண்டேதான் இருக்கின்றன. வெங்காயம் `இன்னும் விலை ஏறுவேன்' என்று பயமுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.
பொதுமக்களைப் பொறுத்தவரையில் அழுகும் பொருளான காய்கறிகளிலும் புரிந்துகொள்ள முடியாத முறையில் ஒரு புது மாதிரியான கருப்பு மார்க்கெட் வந்துவிட்டது என்றே நினைக்கிறார்கள்!தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி... விலையேற்றத்தை எப்படி சமாளிப்பது?
http://dlvr.it/SsLWmj