தி.மு.க., டெல்டா மண்டலத்தில் கட்சிரீதியாக உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரில் நடைபெற்றது. தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரசாரத்தைச் செய்துகொண்டிருக்கிறார். ஆக, அவரை மாற்ற வேண்டும் என்றுகூட நான் சொல்லவில்லை. தேர்தல் வரைக்கும் அவரே இருக்கட்டும். அப்போதுதான் இன்னும் நமக்கு வாக்குகள் அதிகரிக்கும். நம்முடைய தொண்டர் பலத்துக்கும், கட்டமைப்புக்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்திலும்கூட ஒரு கட்சியும் இல்லை.
அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும். ஏனென்றால், நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் இந்தத் தேர்தலில் முக்கியம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 தொகுதிகளை நம்முடைய அணி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க சிதைத்துவிட்டது. இதற்கு எதிர்வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது.
பா.ஜ.க ஆட்சி தொடரும் என்றால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்குமானால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி அமைப்புகளோ இருக்காது. அத்தனையையும் காலி செய்துவிடுவார்கள். இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும். நாம் 40 தொகுதிகளில் வெற்றிபெற்று போனாலும், வட மாநில எம்.பி-க்களை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தல் என நான் சொல்கிறேன்.மு.க.ஸ்டாலின்
மாநிலங்களில் பல்வேறு மொழியைப் பேசுபவர்களுக்கு, பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனைகொண்ட ஒரு கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி. பா.ஜ.க இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டுமென்று இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கின்ற 26 கட்சிகளை ‘இந்தியா’ என்ற கூட்டணியாக சேர்த்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப்போவது இந்தியா என்னும் இந்தக் கூட்டணிதான். இதைப் பிரதமராக இருக்கின்ற மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்.Tamil News Today Live: ``ஆளுநர் ரவி பதவியில் நீடித்தால் நமக்கு வாக்குகள் கூடும்!'' - திருச்சியில் ஸ்டாலின்
தொடர்ந்து பேசியவர், ``பா.ஜ.க-வை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என மோடி ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார். இந்த நோக்கத்தை ஓராண்டாகவே நான் முன்னெடுத்து வருவதால் அவர்களுக்கு என்மீதும் கோபம். அதனால்தான் மோடி மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றாலும், அந்தமான் விமான நிலையத்தை திறந்துவைக்கச் சென்றாலும் அங்கேயும் தி.மு.க-வைத்தான் திட்டிக்கொண்டிருக்கிறார். தி.மு.க வாரிசுகளுக்கான கட்சி எனக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். வேறு ஏதாவது யோசித்துக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின்
நானே சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். (இன்னும் அழுத்தமாக மேடையை தட்டிக்கொண்டே சொல்கிறார்!) ஆமாம், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் வாரிசுகள் நாங்கள். இதைத் தைரியமாகப் பெருமையோடு என்னால் சொல்ல முடியும். ஆனால், கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள். உங்களால் இதை தைரியமாகச் சொல்ல முடியுமா... சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா... 2002-ம் ஆண்டு குஜராத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த மாநிலத்தை ஆளக்கூடிய பா.ஜ.க அரசாலும், ஒன்றிய பா.ஜ.க அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மணிப்பூர் போலீஸாரும் கைகோத்துக்கொண்டு மக்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே இதைச் சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து மனக்கசப்பை உருவாக்கி, வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததால்தான் இன்றைக்கு மணிப்பூர் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.
இங்கு ஒரு கொத்தடிமைகள் கூட்டம் அ.தி.மு.க என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றிப் பேசினார்களா... ‘பா.ஜ.க-வுக்கு நான் அடிமையில்லை’ என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடுமைக்குக் காரணமான அந்த மாநில முதலமைச்சரையோ, ஒன்றிய பா.ஜ.க-வையோ கண்டித்தாரா... பழனிசாமியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஊழல் ஒழிப்பைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். சி.பி.ஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு, அதற்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றம் போனவர்தான் பழனிசாமி.
கர்நாடகா மாநிலத்தில் ஊழலுக்காகத்தானே பா.ஜ.க அரசை அங்கு மக்கள் விரட்டியடித்தார்கள். அ.தி.மு.க மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்தது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க-வுக்கு பயந்து அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆக, உரிமைகளைக் கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோத்துவருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூரைப்போல ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை நாம் காப்பாற்றியாக வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படைத் தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை நான் ஒப்படைத்திருக்கிறேன். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியாற்றக்கூடியவர்கள் நீங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும்” என்றார்.
http://dlvr.it/SsnvDV