Saturday 5 August 2023
Friday 4 August 2023
விநாயகர், புஷ்பக விமானம் குறித்து கேரள சபாநாயகரின் சர்ச்சைக் கருத்து- எழுந்த எதிர்ப்பும் விளக்கமும்!
கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த, சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர், கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, `விநாயகர், புஷ்பக விமானம் என்பதெல்லாம் கட்டுக்கதை’ எனவும் `மூடநம்பிக்கை நம் வளர்ச்சியைப் பின்னுக்குக் கொண்டுசென்றுவிடும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் இவையெல்லாம் கட்டுக்கதை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ எனவும் கூறியிருந்தார்.
விநாயகர் குறித்து சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாயர் சர்வோஸ் சொசைட்டி என்ற என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் திருவனந்தபுரத்தில் நாம ஜப யாத்திரை நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பாகக் கூட்டம் சேர்த்ததாக என்.எஸ்.எஸ் துணைத்தலைவர் சங்கீத்குமார் உள்ளிட்டவர்கள்மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, என்.எஸ்.எஸ் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, சம்ஷீரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்தவிருப்பதாக என்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. என்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவு அளித்திருக்கிறது. காங்கிரஸும் சர்ச்சைக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.கேரள மாநில சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர்
இது பற்றி கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், "கலவரம் ஏற்படுத்த முயன்றதாக சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் மீதுதான் வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும். அரசு பிடிவாதமான மனநிலையில் செயல்படுகிறது. மனப்பூர்வமாக வேண்டும் என்றே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஏ.என்.சம்ஷீரின் விளக்கத்தை கேரளம் கேட்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்பது மட்டுமல்லாது அவர்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பினராயி விஜயனின் மனநிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு" எனக் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் எம்.பி சசிதரூர் முன்பு ஒரு முறை விநாயகர் குறித்து பேசிய கருத்தும் இப்போது விவாதத்தில் இணைந்திருக்கிறது. அதற்கு சசிதரூர் இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். "பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் குறித்து நான் பேசியதை இப்போது விவாதமாக்க வேண்டாம். 2014-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரிக்கு எடுத்துக்காட்டாக விநாயகரை குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு நான் அப்போது பதில் அளித்தேன். அதன் பின்னர் பிரதமர் மோடி அந்த மேற்கோளை கூறுவது இல்லை.சசிதரூர்
மத நம்பிக்கை குறித்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். உலகத்தில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளித்தவர் சுஷ்ருஸர். மூக்கில் ஆபரேஷன் செய்வது பற்றி சுஷ்ருஸர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஆபரேஷனுக்குப் பயன்படுத்திய கருவிகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன" என சசிதரூர் தெரிவித்திருக்கிறார். என்.எஸ்.எஸ் நாமஜப யாத்திரை
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில கருத்துகளை சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறியிருக்கிறார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏ.என்.சம்ஷீர், "விஞ்ஞானம் குறித்து பிரசாரம் செய்வதை மத நம்பிக்கையைப் புறக்கணித்துப் பேசுவதாகக் கருதமுடியாது. மத நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக தெருவில் இறங்கிப் போராடி அடிவாங்கியவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். அன்று அவர்கள் வாங்கிய அடியால்தான் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டது. இன்று நம்பிக்கையைப் பாதுகாப்பதாகக் கூறி இறங்கியிருப்பவர்களை அன்று காணவில்லையே" என்றார். ஆனாலும் விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விவாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் நடவடிக்கையில் சி.பி.எம் இறங்கியிருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
http://dlvr.it/StB36h
http://dlvr.it/StB36h
Thursday 3 August 2023
சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்| ரேஷனில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை - News In Photos
வடமாநிலத் தொழிலாளர்களை தூய்மைப் பணியாளர்களாக நியமனம் செய்யக் கூடாது என்று கூறி, மயிலாடுதுறை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.சேலத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறிப்பதற்காக மனநல மருத்துவர் ஆலோசனை.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடுமுறை நாளன்று கூடுதல் பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறி அறிவிப்பு ஒட்டப்பட்டதால்,பொதுமக்கள் போராட்டம்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில்,
முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் புதிய வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கிவைத்தார்.மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக சென்னையில் வாழும் மணிப்பூர் மக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!விருதுநகரில் நாட்டுப்புறக் கலைஞர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கீழ் பவானி பாசன வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் சென்று ஆய்வுசெய்தார்.நாகர்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க., பொன்விழா மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.ஈரோடு, கொள்ளம்பாளையம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் தக்காளி கிலோ ரூபாய் ஆறுபதுக்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol) தொடங்கிவைத்து, RSP Cadets Manual-ஐ வெளியிட்டார்.ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 43-வது பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பர தட்டி விற்பனை செய்யும் வியாபாரிகள்.தமிழ்நாடு முத்தரையா்கள் சங்கம் சார்பில் முத்தரையர்கள் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைக்க வேண்டி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.வேலூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.கடலூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
http://dlvr.it/St7R3t
http://dlvr.it/St7R3t
Wednesday 2 August 2023
"கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது!"- பத்ரி சேஷாத்ரி கைதை எதிர்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்
பதிப்பாளரும், அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியின் கைது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த பத்ரி சேஷாத்ரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் பேசியிருந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து ஜூலை 29 அதிகாலை தமிழ்நாடு காவல்துறையால் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்.
பத்ரி சேஷாத்ரி இந்தக் கைது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.பத்ரி சேஷாத்ரி மீது போடப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை
இந்நிலையில் பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கையைக் கைவிட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் எழுத்தாளர்கள் அம்பை, பால் சக்கரியா, பெருமாள் முருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "கருத்துரிமையைக் காக்க உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டி இக்கடிதத்தை எழுதுகின்றோம். தமிழ்ப் பதிப்பாளரும் எழுத்தாளருமாகிய திரு.பத்ரி சேஷாத்ரியை தமிழ்நாடு அரசு கைது செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசியது தொடர்பான புகார் காரணமாக இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்ரி சேஷாத்ரியின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. எனினும் இத்தகைய செயலுக்கு கைது என்பது மிகையான நடவடிக்கை என்றும் நமது அரசியல் சாசனம் வழங்கும் கருத்துரிமைக்கு மாறானது என்றும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.
எழுத்தாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழியில் நடைபெற்று வரும் 'திராவிட மாடல் ஆட்சி'யின் கூறுகளில் கருத்துரிமையும் ஒன்று என நம்புகின்றோம். இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டு நிற்கும் திராவிட மாடல் ஆட்சி, கருத்துரிமையைக் காப்பதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்."பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வேண்டும்!" - வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா சொல்வது என்ன?
'வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்குக் காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயப்படி எதையும் முடிவு செய்யுங்கள்' என்பது தந்தை பெரியார் அடிக்கடி மக்களைப் பார்த்துச் சொல்லும் வாசகம். எந்தக் கருத்தையும் சொல்பவருக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்தும் பெரியார், அதைக் கேட்பவருக்கு இருக்கும் உரிமையையும் வலியுறுத்துவார். எதையும் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுவதி ல் நம்பிக்கை கொண்டவர் பெரியார். அவற்றுக்கான எதிர்வினையைக் கருத்துரீதியாக அதற்குரிய தளங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பெரியார் சிந்தனை.
ஆகவே பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கையைக் கைவிட்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கருத்துக்களுக்கான எதிர்வினையைக் கருத்துரீதியாக அதற்குரிய தளங்களில் வெளிப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
http://dlvr.it/St4mb2
http://dlvr.it/St4mb2
Tuesday 1 August 2023
`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' - தேனியில் கே.பி.முனுசாமி
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் இந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓ.பி.எஸ், டி.டி.வி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். கூட்டம் நடந்த தனியார் மஹால்
இந்தக் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ``அரசியலில் விபத்துபோல ஒருவரை முதலமைச்சராகவும், கட்சித் தலைமைக்கும் கொண்டுவந்தோம். ஓ.பி.எஸ் முடிந்துபோன சகாப்தம், அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. செத்த பாம்பை அடித்து என்ன பயன். எம்.பி தேர்தலில் அவரின் மகனை, பண பலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற வைத்தார். கட்சியினர் யாரையும் வெற்றிபெறச் செய்யவில்லை. கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற எம்.பி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் தோல்விக்குக் காரணம் ஓ.பி.எஸ்-தான் என்று, ஜெயலலிதாவால் `துரோகி' எனப் பட்டம் வாங்கியவர் ஓ.பி.எஸ். அதன் பின்னரும், தன் சுயநலத்துக்காக தேனி மாவட்ட அ.தி.மு.க-வை வலுவிழக்கச் செய்ய முயன்றார். அதை அறிந்த ஜெயலலிதாவால் பலமுறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, எச்சரிக்கப்பட்டார்.
தர்மயுத்தக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி மனிதனுக்காக, அன்று அவருடன் நாங்கள் செல்லவில்லை. கட்சியில் ஆதிக்கச் சக்திகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அன்று அவருக்கு ஆதரவு கொடுத்தோம். ஜெயலலிதா சொல்வதுபோல் நூறாண்டுக்காலம் கட்சி இருக்க வேண்டும் என்றால், மன்னார்குடி குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது. இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்குக் காரணம் ஓ.பி.எஸ். தான் முதல்வராக வரவில்லை என்றால், அ.தி.மு.க-வே ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் செய்த துரோகம் காரணமாக அவர் மகனின் எம்.பி பதவி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. ராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி, அதுபோல் எடப்பாடி இருக்கும் இடம்தான் அ.தி.மு.க" என்றார். திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ``சசிகலா குடும்பத்தால்தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். இந்த மாவட்டத்துக்கு அவர் செய்த சாதனைதான் என்ன... போடியில் தப்பித்தவறி வெற்றிபெற்றுவிட்டார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவதற்கு, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் என்ன தகுதி இருக்கிறது.
`எடப்பாடி முதல்வராக நான் ஏன் தேர்தலில் உழைக்க வேண்டும்?' என்று இருந்தவர் ஓ.பி.எஸ். தைரியம் இருந்தால் ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெறட்டும்" என்றார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர்
கே.பி.முனிசாமி பேசுகையில், ``எதிரிகளிடம் நம் பலத்தைக் காட்டுவதற்காகவும், துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம். எம்.ஜி.ஆருடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ளாமல், ஜானகியை முதலமைச்சர் ஆக்கினார். அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு, அவரை மன்னித்து மூத்தவர் என்று ஆர்.எம்.வீரப்பனைக் கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினிகாந்துக்கு ஆதரவாகப் பேசியதால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார். அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த நிலைதான் தற்போது ஓ.பி.எஸ்-ஸுக்கும் ஏற்படும்.
தன்னுடைய முதல்வர் பதவி பறிபோன பிறகுதான், அம்மா ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறினார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியவர்தான் ஓ.பி.எஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்பு அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறிவந்தார். ஆனால், அவரால் அது கடைசி வரையில் முடியவில்லை. கட்சி பிளவுபடக் கூடாது என்றுதான் ஓ.பி.எஸ்-ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது துணை முதல்வர், நிதித்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் என உயரிய பதவிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்
முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்வி வந்தபோது, தான் முதல்வராக வேண்டும் என ஒருபோதும் எடப்பாடி நினைக்கவில்லை. ஓ.பி.எஸ்-ஸிடம் கேட்டோம், `அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறினார். ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு. பகவத்கீதை கூற்றுப்படி துரோகியான ஓ.பி.எஸ் அழிக்கப்பட வேண்டும். எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓ.பி.எஸ்-ஸாக இருந்தாலும், டி.டி.வி-யாக இருந்தாலும் காணாமல்போய்விடுவார்கள்" என்றார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, வளர்மதி,வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகப் பேசினர். ``அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை, பாஜக கூட்டணியில் தொடர்வோம்..!" - ஓபிஎஸ்
http://dlvr.it/St24nP
http://dlvr.it/St24nP
Monday 31 July 2023
என்.எல்.சி-க்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை - காவல்துறை கையாண்ட `விதம்' எப்படி?!
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள், கம்பெனி தொழிலாளர்கள், சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் என்.எல்.சி நிர்வாகம், தமிழக அரசுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் கொடுத்து வருகிறது.நெய்வேலி அனல் மின்நிலையம்
இந்த நிலையில் நிலக்கரி எடுப்பதற்குப் போதுமான நிலம் இல்லை என்றும், அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தப்போகிறோம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அதையடுத்து, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழைப் பகுதிகளில் 2006 – 2013 காலகட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் கடந்த 26-ம் தேதி பணியைத் தொடங்கியது என்.எல்.சி நிர்வாகம். என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாறு அமைக்கும் அந்தப் பணிக்காக, நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் பணியைத் தொடர்ந்தது என்.எல்.சி நிர்வாகம்.
இதற்கிடையில், விவசாய நிலங்களில் ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அதையடுத்து, என்.எல்.சி-க்கு எதிராக ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். அதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு போராட்ட அறிவிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாஉல்ஹக் தலைமையில் 2,000 போலீஸார் நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்துடன் நெய்வேலி நுழைவுவாயிலை சீல் வைத்ததுடன், வஜ்ரா வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.என்.எல்.சி
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலிக்கு வந்த அன்புமணி, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், “தனியாருக்கு விற்கப்படவிருக்கும் என்.எல்.சி-க்காக தமிழக அரசு ஏன் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்... அது அரசின் வேலை கிடையாது. மீண்டும் தமிழக அரசை எச்சரிக்கிறோம். நிறுத்திக்கொள்ளுங்கள். இனி ஒரு பிடி மண்ணைக்கூட கையகப்படுத்தக் கூடாது. இதுவரை கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்” என்று பேசிவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து பா.ம.க வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுடன் என்.எல்.சி நுழைவுவாயில் பகுதியை நோக்கிச் சென்றார் அன்புமணி. அவர்களை போலீஸார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் போலீஸார்மீது தண்ணீர் பாக்கெட்டை வீசியதுடன், போலீஸ் வாகனங்களை கல்வீசித் தாக்கினர். அதனால் போலீஸார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். ஆனால், அதன் பிறகும் போலீஸார்மீது கல்வீச்சைத் தொடர்ந்தனர் பா.ம.க-வினர். அதில் நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீதின் மண்டை உடைந்தது. அவர் உட்பட 12 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, வானை நோக்கி கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கல்வீசியவர்களை கலைப்பதற்காக, காவல்துறையின் வஜ்ரா வாகனம் மூலம் அவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அன்புமணி இருந்த காவல் பேருந்தின்மீதும் கற்கள் விழுந்தன. இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர், அன்புமணி உட்பட கைதுசெய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். நெய்வேலி.
இதற்கிடையே, கலவரத்தில் காயமடைந்து என்.எல்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காவலர்களை, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஜூலை 28-ம் தேதி மாலை சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலேயே கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், என்.எல்.சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆகியோருடன் டி.ஜி.பி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி கண்ணன், “என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பா.ம.க முற்றுகைப் போராட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேர் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அன்புமணியைக் கைதுசெய்தபோது, பா.ம.க தொண்டர்கள் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்தச் சம்பவத்தால் 6 காவலர்கள், 14 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர். 3 வாகனங்கள் சேதமடைந்தன. அவர்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்புமணி கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மண்டலத்தில் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 800 பேர் வரை கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்” என்றார். இந்தச் சந்திப்பின்போது, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி பகலவன், விழுப்புரம் டி.ஐ.ஜி ஜியாஉல் ஹக் ஆகியோர் உடன் இருந்தனர்.ஐ.ஜி கண்ணன்
இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``என்.எல்.சி விவகாரம் சர்ச்சையானது முதலே வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டார். பா.ம.க போராட்டம் அறிவித்ததும் இரவு நேர அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த நேரங்களில் வெளியூர் செல்பவர்களுக்கு தனியார் வேன்கள் பயன்படுத்தப்பட்டன. காவல்துறை பாதுகாப்பும் வழங்கியது. அதோடு பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள் சிலரிடம் முன்கூட்டியே பேச ஆரம்பித்தோம்.
அன்புமணி ராமதாஸிடமும் எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படாதவாறு போராட்டம் நடக்க வேண்டும் எனச் சொல்லியே அனுமதி கொடுக்கப்பட்டது. அதோடு டெல்டா மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் மூலமாகவும் அவரிடம் பேசப்பட்டது. வடக்கு மண்டலத்தின் பல இடங்களிலிருந்து காவல்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களை என்.எல்.சி நிறுவனத்துக்குள் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அன்புமணி வந்து பேசிய பிறகு அவரை வேனில் ஏற்றும்போது, அந்த வேன்மீதும் சிலர் கல் எரிய ஆரம்பித்தனர். உடனே அவருக்கான பாதுகாப்பை அங்கு உறுதிசெய்தோம். அதன் பிறகு மண்டபத்துக்கு கொண்டு சென்றதும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி, காவல்துறை உயர் அதிகாரிக்கு கால் செய்து அன்புமணியிடம் பேச வைத்தார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தின் வீரியம் குறைய ஆரம்பித்தது. கடலூர்:
என்.எல்.சி
போராட்டக்காரர்கள் கல் எரிந்தும்கூட, அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால்தான் கண்ணீர் புகை குண்டுகளைக்கூட வானை நோக்கிச் செலுத்தினோம். அதைத்தான், சிலர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்தோம். ஏனென்றால் இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.
எங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், 28-க்கும் மேற்பட்டோர்மீது பொது சொத்துகள் சேதப்படுத்தியது, கலவரம் உருவாகத் தூண்டுதலாக இருந்தது போன்ற காரணங்களுக்காக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதுபோல் நடந்ததை அன்புமணியே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை” என்றார்கள். என்.எல்.சி நில எடுப்பு விவகாரம்: பாமக போராட்டமும், வன்முறையின் பின்னணியும்!
http://dlvr.it/SszLXN
http://dlvr.it/SszLXN