மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த கனமழையால், சென்னையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பைக், கார்கள் நீரீல் மூழ்கி சேதமாகியிருக்கின்றன.
சென்னை புறநகர் மட்டுமன்றி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னையிலும் பல ஏரியாக்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வீடுகளைச் சுற்றி மழைநீர் வடியாமல் இருப்பதால், உணவு, நீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக் கையேந்தி நிற்கிறார்கள் சென்னைவாசிகள். 2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
தி.மு.க ஐடி விங் செயல்பாடு, சென்னைவாசிகளை மட்டுமல்லாமல், சென்னையில் தங்களின் உறவினர் நிலைமையை அறிய முடியாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்தே எரிச்சலடையச் செய்துவிட்டது. குறிப்பாக, கனமழையின் தூரல் பொழிந்துகொண்டு இருக்கும்போதே சென்னையை மீட்ட தி.மு.க என்று மார்தட்டி போஸ்ட் போட்டது... தங்கள் ஏரியாவில் வெள்ளநீர் வடியவில்லையென்று பாதிக்கப்பட்டவர்களின் சமூக வலைதளங்களில் போஸ்ட்டுக்குக் கீழே, பாதிக்கப்பட்டவர்களையே திட்டி கமென்ட் செய்ததென்று அவர்களின் அழிச்சாட்டியம் அளவில்லாமல் போனது.
பதிலுக்கு 4,000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் என்னவானதென்று அ.தி.மு.க ஐடி விங் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டியது. இதற்கு பதில் கொடுக்கும்விதமாக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 8,000 கோடி ரூபாய் பணிகள் என்னவாகின என்று திமுக ஐடி விங் வரிந்துகட்டியது. இப்படி மாறி மாறி சமூக வலைதளங்களைக் குழாயடியாக மாற்றிவிட்டனர் தமிழகத்தை ஆண்ட இரு பெரும் கட்சிகளின் அனுதாபிகள்.
உண்மையில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழைக்கு சென்னை தாக்குப்பிடித்ததா, தத்தளித்ததா என்று விசாரித்தோம்.மிக்ஜாம் புயல் - சென்னை மாநகராட்சி அலுவலகம்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``2015 வெள்ள பாதிப்புக்கு முக்கியக் காரணம் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளை அரசின் கவனக்குறைவால் முன்னேற்பாடு எதுவுமே இல்லாமல் திறந்துவிட்டதுதான். செம்பரம்பாக்கம் ஏரியில் 2015, டிசம்பர் 2-ம் தேதி 29,000 கன அடி நீரும், 3-ம் தேதி 11,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டன. அதேபோல, பூண்டி ஏரியிலிருந்து 2015, டிசம்பர் 2-ம் தேதி 30,200 கன அடி நீரும், 3-ம் தேதி 36,484 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டன. அதாவது, இரண்டு ஏரிகளிலிருந்து மட்டும் அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் விநாடிக்கு 1,06,684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது. அது மட்டுமல்லாமல் மழைநீர் வடிகால் பணியையும் முறையாக மேற்கொள்ளாததால், வெள்ளநீர் வடிய ஒரு வாரத்துக்கும் மேல் ஆனது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. இரண்டு நாள்கள் மட்டும்தான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் தொழில்நுட்பம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. மழைப்பொழிவு எவ்வளவு இருக்குமென்று கிட்டத்தட்ட துல்லியமாகக் கணித்துவிட்டார்கள்.
குறிப்பாக மழைநீர் வடிகால் பணியை முடிக்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டேயிருந்தது நகராட்சி நிர்வாகம். சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகாலுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கான நிதி பல கட்டங்களில் தேங்கி நின்றுவிட்டது. மழைநீர் வடிகால் பணிகளை முதலில் ஆரம்பித்தபோது, பல இடங்களில் மெட்ரோ பணிகள் குறுக்கிட்டன. அந்தத் தடையைத் தாண்டி பணிகளைச் செய்த ஒப்பந்தக்காரர்களுக்குப் பணத்தை விடுவிப்பதில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்படவில்லை. இதை முறையாகச் செய்யவேண்டிய நகராட்சி நிர்வாகத்துறை, மழைநீர் வடிகால் பணியை தள்ளிப்போட்டுக்கொண்டேதான் இருந்தது. அதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள்
அதுமட்டுமல்லாமல் மின்சாரத்துறை, மெட்ரோ வாட்டர் நிர்வாகம் என வடிகால் பணிக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால்தான், பருவமழைக்கு முன்னதாக வடிகால் பணியை முழுமையாக முடிக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், வடிகால் பணி 75 சதவிகிதம்கூட முழுமை பெறவில்லை. இதனால்தான் மழை நின்றும், நாள்கள் ஓடியும் பல இடங்களில் நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது" என்றார் விரிவாக.
பூவுலகு நண்பர்கள் சுந்தராஜன், "சென்னை ஒரு தட்டையான நகரம். இங்கு வெறும் மழைநீர் வடிகால்கள் மட்டுமே கைகொடுக்காது. சென்னையில் ஓடும் மூன்று பிரதான ஆறுகளும், பல நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. எந்தத் திட்டமிடலையும் சரியாகச் செய்யாமல், நகரைக் கண்மூடித்தனமாக விரிவாக்கம் செய்துகொண்டதே இதற்குக் காரணம். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல், சென்னையின் மேற்குப் பக்கமிருக்கும் 4,000 நீர்நிலைகள்தான். அவைதான் சென்னைக்குப் பெரும் வெள்ள ஆபத்துகள் வராமல் ஓரளவுக்குத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. அதில்தான் பரந்தூர் விமான நிலையத்தை அமைத்து, அடுத்த ஆப்புவைக்கத் தயாராகிறது மாநில அரசு. ‘காலநிலை தாங்குதிறன் நகரமாக’ சென்னையை மாற்றுவதற்கு, தலைநகரை மேலும் விரிவாக்கம் செய்யாமல் இருப்பதே தீர்வு” என்றார் விரக்தியுடன்.பூவுலகு சுந்தர்ராஜன்
பன்னீரின் ஆதரவாளர் மருது அழகுராஜோ, "அடுத்த கட்சி ஆட்சி நடக்கும்போது வாய்கிழியப் பேசுவதும், தங்கள் ஆட்சி நடக்கும்போது `வரலாறு காணாத மழை’ என்னும் துருப்பிடித்த வசனத்தை தூக்கிக் காட்டிக்கொண்டு தப்பிப் போகவும் பார்க்கிறது திமுக. இந்த வார்த்தைஜால வழக்கத்தில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு கரைந்துவிட்டது. ஆனால், தலைநகர் சென்னைவாசிகளின் மழைக்காலத் துயரங்கள் சிந்துபாத் தொடராகவே நீண்டுகொண்டிருக்கின்றன. அரசியலைத் தாண்டி மனசாட்சியோடு சில உண்மைகளை நாம் பேசியே ஆகவேண்டியிருக்கிறது. மருது அழகுராஜ்
வேலுமணி காலம் `ஸ்மார்ட்சிட்டி’ என்றது. தற்போது கே.என்.நேருவின் காலம் `நாலாயிரம் கோடி பேக்கேஜ்’ என்றது. ஆனாலும், சென்னை மக்களின் துயரங்கள் தொடர்கதையாகவே நீடிக்கின்றன. நடுத்தர மக்களின் இ.எம்.ஐ பைக்குகளையும், கார்களையும் மழை வெள்ளம் அடித்துச் செல்வதைப் பார்க்கும்போது மனது பதைபதைக்கிறது. இப்படியான வருடம் தவறாத டிசம்பர் துக்கங்களுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண வேண்டுமானால், மழை வெள்ளத்தின்போது மட்டும் ஆட்சியாளர்களைச் சபித்துவிட்டுக் கடந்துபோகும் பிரசவ வைராக்கியத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் கார்கள், பைக்குகளோடு வீடுகளும் மிதந்து போகும் காலம் வரலாம்" என்றார் சூடாக.
என்று தீருமோ இந்த டிசம்பர் துக்கம்?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SzsyvT