``ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறதே?"
``அப்படி சொல்லமுடியாது. மிசோரம் தவிர்த்து நான்கு மாநிலங்களில் ஒன்றில் பா.ஜ.க-வும், மூன்றிலும் காங்கிரஸும் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியே தலைகீழாக காங்கிரஸ் ஒன்றில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இது பா.ஜ.க-வுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லமுடியாது. பா.ஜ.க வெற்றியடைந்த மாநிலங்களில் வாக்கு வித்தியாசம் என்பது குறைவுதான். காங்கிரஸூக்கும் பா.ஜ.க-வுக்கும் கடுமையான போட்டி நிலவி இருக்கிறது. தற்போது நடந்தத் தேர்தல் மாநில அரசை தீர்மானிப்பது. ஆனால், நாட்டின் எதிர்க்கால முன்னேற்றத்துக்காக மோடியின் 10 ஆண்டுக்கால அரசு எதுவுமே செய்யவில்லை. கடந்த காலங்களைவிட பா.ஜ.க எதிர்ப்புதான் அதிகமாக இருக்கிறது. அதை எதிர்க்கட்சிகள் எப்படி ஒருங்கிணைக்கப் போகிறது என்பதில்தான் இருக்கிறது. அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது."
அமித் ஷா, மோடி
"பா.ஜ.க-வுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது என்கிறார்களே?"
" ஐந்து மாநிலத் தேர்தலை பொறுத்தவரையில் மற்ற கட்சிகளை காங்கிரஸ் இணைத்து இருந்தால் நிச்சயம் பா.ஜ.க வெற்றியை தடுத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் தி.மு.க செய்வதுபோல போதுமான அளவுக்கு எதிர்க்கட்சிகளை மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஒருங்கிணைக்கவில்லை. நாங்கள்தான் பெரிய கட்சி என்ற மனபான்மையில் சில மாநில காங்கிரஸ் இருக்கிறது. சிறு கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மாநில தலைமைக்கு தேசிய காங்கிரஸ் தலைமை வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவே இல்லை."
கே.பாலாகிருஷ்ணன்
"கம்யூனிஸ்ட் கட்சியே காங்கிரஸுடன் உடன்படாமல் ஓரிரு மாநிலங்களில் தனித்துதானே நின்றது?"
" (மெல்லிய குரலில்...) அது அப்படியில்லை. தேர்தல் நடந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டது. எனவே அவர்கள்தான் கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்கள்தான் தங்களின் பங்கு குறைந்தாலும் பரவாயில்லையென்று நினைக்கவேண்டும். சின்ன கட்சிகள் அப்படி நினைத்து எந்த பயனும் இல்லை. தேர்தல் அரசியலில் கொஞ்சம் நெழிவு சுளிவாகதான் போகவேண்டும். காங்கிரஸ் அப்படி செய்யவில்லை."
``ஆனால், பா.ஜ.க தனித்துதானே நின்று வெற்றிப் பெற்று இருக்கிறது?"
``மத, சாதி உணர்வை தூண்டிவிட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயமடைகிறது பா.ஜ.க. அது நாட்டை மிக மோசமான நிலைக்கு வழிநடத்துகிறது. இதை எதிர்த்து அரசியல் செய்வது சவாலானது. வெறும் பா.ஜ.க, மோடி எதிர்ப்பு மட்டும் இதற்கு போதாது. மாற்று திட்டங்களை முன்னிறுத்தி மக்களை சந்திக்க வேண்டும். அதைதான் எங்கள் கூட்டணி செய்கிறது. நிச்சயம் வெற்றி பெறுவோம்."கேரள முதல்வர் பினராயி விஜயன்
``கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸோடு இணக்கமாக செல்லவாரா என்ன?"
" (சிரிப்போடு...) கேரளா கதையே வேறு. அங்கு சி.பி.எம் காங்கிரஸ் ஒத்துபோகவேண்டுமென்ற பிரச்னையே கிடையாது. இந்திய கூட்டணியை ஒருங்கிணைக்க நாங்கள் போராடுவதே பா.ஜ.க வெற்றி பெறகூடாது என்பதற்காகதான். ஆனால், கேரளாவில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பே இல்லை. அங்கு யாருக்கு பலம் அதிகமென்று போட்டி போடுகிறோம். யார் வெற்றிப் பெற்றாலும், அது மதசார்ப்பின்மை வெற்றிப் பெற்றதாகதான் அர்த்தம். ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும் என்ற சூழ்நிலை வந்தால், சேர்ந்து பணியாற்றுவது பற்றி யோசிக்கலாம்"
" அப்படியென்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா என்ன? இல்லை பா.ஜ.க வந்துவிடுமென்று அச்சப்பட்டு இப்போதே கைகோர்க்கிறீர்களா?"
" இல்லை இல்லை... அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணைந்தால் அது பெரிய கூட்டணி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இணைந்து வெற்றி பெறமுடியவில்லை. இருப்பினும் கடந்த தேர்தலில் அத்தி பூத்தார்போல தேனியில் அ.தி.மு.க வென்றதுபோல, மீண்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிடக்கூடாதென்று நினைக்கிறோம்."கே.பாலாகிருஷ்ணன்
"கொள்கை ரீதியாக பா.ஜ.க-வை எதிர்க்கும் நீங்கள், மத்திய பா.ஜ.க-வின் பல திட்டங்களையும் தொழிலாளர்கள் விரோத சட்டங்களையும் தி.மு.க அரசு அமல்படுத்துகிறதே? "
" பாசிச கொள்கை கொண்ட பா.ஜ.க-வை வீழ்த்தவேண்டுமென்றுதான் தி.மு.க-வுடன் நாங்கள் கைகோர்த்து இருக்கிறோம். அதேசமயத்தில், தொழிலாளர் நலனுக்கு எதிராக தி.மு.க அரசு கொண்டு வந்த சட்டங்களை நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். நீங்கள் எவ்வளவு நன்மை செய்தாலும், மக்கள் விரோத செயல்களில் ஈடுப்பட்டால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை தி.மு.க உணர வேண்டும். "
" மிக்ஜாம் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு..?"
" (இடைமறிக்கிறார்...) தமிழ்நாடு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்காக 5000 கோடி ரூபாய் கேட்டால், 500 கோடி ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அதை வைத்து என்ன செய்யமுடியும். இதுதான் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் நிவாரணம். இப்படி நிதியை கொடுக்காமல், நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் தி.மு.க அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க பா.ஜ.க முயலுகிறது. நாம் என்ன வேறு நாட்டு மக்களா? அண்டை நாட்டுகளே அதை செய்கிறோம் இதை செய்கிறோம்... அத்தணாயிரம் கோடி கொடுக்கிறோம்... என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால், மத்திய அரசுக்கு எதுவும் செய்வதில்லை."
" இதுபோன்ற நிர்பந்ததில்தானே அ.தி.மு.க-வும் இருந்தது. அதை அடிமை அரசு என்று சொன்ன நீங்கள், தி.மு.க-வை என்ன சொல்வீர்கள்?"
" இதை அப்படி ஒப்பிட முடியாது. அ.தி.மு.க-வும் அவரது ஆட்சியும் பா.ஜ.க கொண்டு வரும் எல்லா திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தது. ஆனால், பா.ஜ.க-வுக்கு நேர் எதிராக தி.மு.க என்ற கட்சி செயல்படுகிறது. அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அரசு என்று வரும்போது பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை அமல்படுத்தவேண்டிய நிலைக்கு வருகிறார்கள். அதை முழுக்க தவிர்க்க முடியாது. மத்திய அரசின் அழுத்தத்துக்கு உள்ளாகும்போது நிலைமையை எப்படி சமாளிப்பதென்று எங்களை போன்ற கூட்டணி கட்சிகளிடமும், சங்க பிரதிநிதிகளிடமும் தி.மு.க அரசு கலந்து ஆலோசிக்கலாம். ஆனால், அதை செய்வதே இல்லை. "கே.பாலாகிருஷ்ணன்
" ஆனால், சென்னையில் மழைநீர் வடிகாலுக்கு 4000 கோடி செலவு செய்தும், இன்னும் பல இடங்கள் மிதந்துக் கொண்டே இருக்கிறதே?"
" திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையும் ஏரிகள், ஆறுகள், கால்வாய் வழியாக சென்னைக்குள் வருவதால்தான் பிரச்னை. எதிர்பாராத அளவைவிட அதிக மழை பெய்யும்போது எதுவுமே செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியில்கூடதான் 2015-ல் வெள்ளம் வந்தது. இரவோடு இரவாக செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிட்டதால்தான், பெரிய சேதம் ஏற்பட்டது. அ.தி.மு.க-வைவிட திமுக நிதானமாக, நன்றாகவேதான் செயல்படுகிறார்கள்."
"எட்டு ஆண்டுகள் முன்பு நடந்ததை தற்போது ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா?"
" (நிதானமாக) எட்டு வருஷமா... பத்து வருஷமா... 50 வருஷமா என்பது முக்கியமல்ல. ஆசியாவிலேயே மிக அதிகப்படியான மக்கள் வசிக்கும் நகரம் சென்னை. ஆனால், இவ்வளவு மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வெள்ளக்காடான சென்னையில், மே மாதம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழ்நாட்டில் எந்த ஏரியும் முறையாக தூர்வாரப்படவில்லை. இதுபோன்ற பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தவேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள குடிசைகளை அகற்றுகிறார்கள். ஆனால் அங்கு பிரமாண்டமாக கல்லூரிகளை, ஹோட்டல்களை கட்ட அனுமதி கொடுத்தது யார்? அவர்களுக்கு பட்டா, பத்திரம் பதிவு செய்தது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கிறது. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தவில்லை."மிக்ஜாம் புயல்
" 2015 வெள்ளத்தின்போது அரசை கடுமையாக விமர்சனம் செய்து களமாடிய கம்யூனிஸ்ட் தோழர்களை தி.மு.க ஆட்சியில் காணவில்லையே..? ஏன்?"
" அப்படியெல்லாம் சொல்லமுடியாது. களத்தில் வேலைபார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். புயல் வருவதற்கு முன்பாகவே மாவட்ட அளவில் கூட்டம் போட்டு நிவாரண பொருள்கள் வாங்கினோம். பிறரைபோல எங்களிடம் கோடி கணக்கில் கையில் பணம் இல்லை. எங்களால் இயன்றதை வாங்கி மக்களுக்கு கொடுக்கிறோம்."
http://dlvr.it/T048Pj