தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் அமைப்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் மத்திய சென்னை தொகுதியை வெற்றிபெற செய்திட வேண்டும், பேரிடர் காலங்களில் சென்னையை கண்டுகொள்ளாமல்விட்ட தி.மு.க எம்.பி-க்களை தோல்வியடைய செய்து பழிதீர்க்க வேண்டும் எனக் காட்டமாக பேசியதோடு, தமிழ்நாடு அமைச்சர்களையும் சென்னை மேயரையும் `கோமாளி’ என விமர்சித்தார்.
நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ``மற்ற கட்சிகளில் சிலர் தொடர்ச்சியாக வேட்பாளராக இருப்பார்கள். அவர்களுடைய வாரிசுகள் வேட்பாளராக இருப்பார்கள். அவர்களை ஜெயிக்க வைப்பதற்காக ஒரு கட்சியை உழைக்க வைப்பார்கள். எல்லா இடங்களிலும் பதவிக்காக சண்டை போடும்போது பா.ஜ.க-வில் மட்டும்தான் தன்னுடைய காலம் முடிந்த பிறகு நாகரிகமாக அடுத்த தலைமுறைகளுக்கு வழிவிடுகின்றனர். தமிழ்நாட்டில் 2026-க்கு பா.ஜ.க தயாராகிவிட்டது என்று மக்களிடையே கூறுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேவைப்படுகிறது. சென்னையின் வளர்ச்சி கீழே இறங்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் தூய்மையான மாநகரங்களின் பட்டியலில் 43-வது இடத்திதிருந்த சென்னை, இன்றைக்கு 199-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் மிக முக்கியமான நகரமாக இருக்கும் சென்னை நம் கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் சென்னையை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கையிலெடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று, தென் சென்னை எம்.பி சீட்டை தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொடுத்திருக்கிறார்கள். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதற்காக தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை எம்.பி சீட்டை கொடுத்திருக்கிறார்கள். மேலும், ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமிக்கு வடசென்னை எம்.பி சீட். எனவே, ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அவர் தெளிவாக இருக்கிறார். தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 குடும்பங்களுக்கும் அவர் சீட் கொடுத்தால்தான், தன்னுடைய மகனுக்கு அவர் சீட் கொடுக்க முடியும். இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.உதயநிதி, ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அருகில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அமைர்ந்திருக்கிறார்கள், இவர்களெல்லாம் தனித்தன்மையால் வளர்ந்து தங்களை சிறந்த பணிகளின் மூலம் நிருபித்துக் கொண்டவர்கள், இது பா.ஜ.க அரசின் அமைச்சரவை. இதுவே தமிழ்நாடு அமைச்சரவையை பாருங்கள். தகுதி இல்லாமல் குடும்பத்திலிருந்து வந்தவர்களை தலைவராக்குகிறார்கள். சினிமாவில் வசனமாக பார்த்திருப்பீர்கள், நடுவில் இருப்பவர்களை அறிவாளியாக காட்ட வேண்டும் என்றால் சுற்றி கோமாளியாக அமரவைக்க வேண்டும் என சினிமா டயலாக் பார்த்திருப்போம். இப்போது உதயநிதி ஸ்டாலினை அறிவாளியாக காட்ட சேர் போட்டு நடுவில் அமரவைத்தால், அவருக்கு அருகில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை உட்கார வைக்கவும், இதைவிட அறிவாளியாக உதயநிதி ஸ்டாலின் தெரியவேண்டுமா... பக்கத்தில் தா.மோ.அன்பரசனை அமர வையுங்கள்... இதற்கும் மேலும் அறிவாளியாக தெரியவேண்டுமா சேகர் பாபுவை அமரவையுங்கள்.. இதற்கெல்லாம் மேலும் மேலும் அவர் அறிவாளியாக தெரிய வேண்டுமா.. சென்னை மேயரை அருகில் உட்கார வையுங்கள்.
இப்போது, முதல்வரின் கவனம் எல்லாம் தன்னுடைய மகனை எப்படி துணை முதல்வர் ஆக்குவது என்பதில்தான் இருக்கிறது. இதே மாதிரி சென்றால் இந்த கட்சி கவிழ்ந்து விடும் என்று பி.டி.ஆர் தெளிவாக அவ்வப்போது உணர்த்துகிறார். பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் உலகத்தில் அழிந்திருக்கிறது. அதைப் பார்க்கையில் தி.மு.க ஒன்றுமே இல்லை. திராவிட மாடல் அரசின் சாதனையாக ரூ.6.6 லட்சம் கோடி முதலீடு வந்திருப்பதாக தி.மு.க கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.33 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதியான உத்தரப்பிரதேசத்தின் பூர்வஞ்சல் பகுதிக்கு முதலீடு மட்டுமே ரூ.9 லட்சம் கோடி. குஜராத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடப்பதற்கு முன்பே ரூ.7.1 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருக்கிறது. தமிழ்நாடு போன்ற முழு தகுதி உள்ள மாநிலத்துக்கு ரூ.6 லட்சம் கோடி முதலீடு என்பது மிகக் குறைவு.உலக முதலீட்டாளர்கள் மாநாடு
இப்போது, 70 ஆண்டுகளாகக் கட்டமைத்த பிம்பத்தை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படக்காரர்கள், எழுத்தாளர்கள், செய்தித்துறையில் இருப்பவர்கள், வாரப் பத்திரிகை ஆசிரியர் எனப் பலரை எதிர்க்கிறோம். அரசியல் களத்தில் கம்யூனிஸ்ட், சாதிக் கட்சிகள் தி.மு.க-வின் ஒரு பக்கம் என நமக்கு மட்டும்தான் 360 டிகிரி எதிர்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் இறுதியில் எதுவும் கிடைக்காதபோது சமூகநீதியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க அமைச்சரவையில் இரண்டு பேர் மட்டுமே பட்டியலினத்தவர்கள். அதுவும், கடைசி இடத்தில் உப்பு சப்பு இல்லாத துறையைக் கொடுத்திருக்கிறார்கள். இதை சமூகநீதி என்றும் சொல்கிறார்கள். மேலும், இப்போது இருக்கும் 35 அமைச்சர்களில் 11 பேர்மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில், ஏழு மாதமாக எந்த வேலையும் செய்யாமல் புழல் சிறையிலிருந்து கொண்டே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதையெல்லாம் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், எல்லாரும் கூட்டணி குறித்து கேட்கிறார்கள்... வீடு நாம் கட்டியிருக்கிறோம். கிரகப் பிரவேசத்துக்கு அழைத்திருக்கிறோம். எல்லோரும் வந்தார்கள், சாப்பிட்டார்கள். கொஞ்சம் பேர் இருந்தார்கள். இங்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது நாம் கட்டிய வீடு. அதன் விழாவுக்கு எல்லோரும் வந்தார்கள். சில பேர் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவிவிட்டுக் கிளம்பி விட்டார்கள். சில பேர் சாப்பிட்டுவிட்டு நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில பேர் நம் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேசமயம், நம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள், அந்த வீட்டில் நான் இல்லை என்று சொன்னால், அது அவர்களுடைய கருத்து. ஆனால், வீட்டில் இருக்கும் நாம் எதற்காக, `எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை' என்று கூற வேண்டும்.
வீட்டில் வந்து உணவருந்தியவர்கள் வெளியே சென்ற பிறகு, `உணவு சரியில்லை, காரம் கொஞ்சம் அதிகமாகப் போட்டுவிட்டார்கள், கடந்த 9 ஆண்டுகளாக அந்த காரத்தை பொறுத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன், இப்போது அந்த காரம் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து விட்டது. அதனால், அந்த வீட்டில் சாப்பிட போவதில்லை' என்று கூறுகிறார்கள். ஆனால், நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாகப் பேசப்போவதில்லை. அவர்கள், இல்லையென்று எல்லோருக்கும் தெரியும், அதை யாராவது வாராவாரம் கூறுவார்களா... 17 முறை யாராவது கூறுவார்களா... ஆனாலும், மோடி அவர்களை ஏற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்.பிரதமர் மோடி
அதோடு, பிரதமர் என்றால் ஒரு தகுதி என்று மக்களுக்குத் தெரியும். யாராவது எங்கள் தலைவர் பிரதமர் என்று கூறினால் சிரித்துவிட்டுச் சென்று விடுங்கள். இன்னொருபக்கம், நமக்குப் பதில் காங்கிரஸே நமக்குப் பாதி பிரசாரம் செய்கிறது... மோடி இஸ்லாமிய நாட்டுக்கு எல்லாம் செல்கிறார், எல்லா நாடுகளிலும் பெரிய வரவேற்புகள்... இதைக் கூறியது அசோக் கெலாட்... அதேபோல், காங்கிரஸைச் சேர்ந்த சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர், மோடி ஆட்சியில் பாரபட்சமே கிடையாது என்று கூறுகிறார்... மேலும், கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது உண்மையைப் பேசி மாட்டிக்கொள்வார். அதாவது மோடிக்கு யாரும் நிகரே இல்லை என்று உண்மையைச் சொல்லி இருக்கிறார்... ராகுல் காந்தி என்கிற ராக்கெட்டை 17 முறை லான்ச் செய்து பார்த்து விட்டார்கள்... பெயின்ட் மட்டும் அடித்தால் அந்த ராக்கெட் எப்படி போகும்... இப்போது தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் என்ற ராக்கெட்டுக்கு லான்ச் நடக்கிறது" என்று கூறினார்.தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!
http://dlvr.it/T1JBNm